பிரதமர் மோடி மீதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீதும் நமக்கு எவ்வளவு கோபம் இருந்தாலும், அந்த மீமைப் பார்க்கும்பொழுது யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. மோடி அருகில் எடப்பாடி பழனிச்சாமி சிரித்துக் கொண்டே நிற்கிறார். அதில் எடப்பாடிக்கு பதிலாக வடிவேலுவின் முகம். முகத்தில் அத்தனை சிரிப்பு. இது போன வருடத்தில் தமிழ்நாட்டுக்குள் உண்டான ட்ரெண்டிங். இன்று உலக ட்ரெண்டிங்கில் இருக்கிறார் காண்ட்ராக்டர் நேசமணி. ஆம் ட்விட்டரில் திடீரென வேர்ல்டு ட்ரெண்டிங்கில் இருக்கிறது ஃப்ரெண்ட்ஸ் படத்தில் தனது சித்தப்பா நேசமணியான வடிவேலு மீது கிருஷ்ணமூர்த்தியான ரமேஷ்கண்ணா சுத்தியலைப் போடும் காமெடி.
வடிவேலு என்றொரு கலைஞன் இல்லாமல் போயிருந்தால் கடந்த இரண்டு தலைமுறையில் பலர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என பலரும் கூறுவது உண்மைதான்.
நம் தமிழ் சினிமா எத்தனையோ நகைச்சுவை கலைஞர்களை கடந்து வந்திருந்தாலும், எத்தனையோ புதிய நடிகர்கள் வந்து கொண்டிருந்தாலும் கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் இன்னும் இரண்டு தலைமுறைக்குப் போதுமான நகைச்சுவை சரக்கை கொடுத்துள்ளவர் வடிவேலு மட்டுமே.
அவரது நகைச்சுவைத் திறன் அனைத்து வெகுஜன மக்களையும் சிரிக்க வைப்பது எவரும் அறிந்ததே என்றாலும், அவரின் சிறிய, சிறிய உடல் மொழியையும்கூட இன்றைய இளைய தலைமுறையினர் கூர்மையாக கவனித்து அவற்றிற்கு ஒரு அகராதியே வடிவமைத்து வைத்துள்ளனர்.
அரசியல்வாதி, காவலர், வழக்கறிஞர் என அவர் ஏற்கும் எல்லா வேடங்களும், அதில் அவர் காட்டும் லாவகமான உடல் மொழியும், வசனங்களும் இப்போது நடக்கும் தினசரி நிகழ்வுகளை பகடி செய்ய கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
இன்றைய இணைய உலகில் அனைத்து தினசரி நிகழ்வுகளையும் வேறொரு நிகழ்வுடன் தொடர்புபடுத்தி பகடி செய்யும் மீம்ஸ் எனும் கலையும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.மிகப் பெரிய விமர்சனத்தைக் கூட ஒரே ஒரு புகைப்படத்தில் கூறிவிடுகிறது.
இன்றைய அவசர நகர்வு வாழ்கையில் அனைத்தையும் விரிவாக விமர்சிக்கவோ, அதைப் பொறுமையாய் படிப்பதற்கோ யாரும் தயாராக இல்லாததால் மீம்ஸ் எனும் கலை மிகப் பிரபலமாக இருக்கிறது. ஆனால் அப்படியான ஒரு கலை பற்றித் தெரியாத வடிவேலுக்கும், மீம்ஸ்க்கும் இடையே ஏற்பட்டுள்ள பந்தம் மிக வலுவானதாக உள்ளது.
அதனாலேயே இணையத்திலும், சமூக வலைத்தளங்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ள மீம்ஸ் என்கிற பகடிக் கலைக்கான தரவுகள் பெரும்பாலும் வடிவேலுவின் நகைச்சுவையிலிருந்தே எடுக்கப்படுகிறது. ஆக ஒருநாள் தொலைக்காட்சி பார்க்காவிட்டாலும் கூட நம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத முகமாக வடிவேலுவின் முகம் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான தவம் என்கிற படத்தில் வரும் 'ஆஹான்' என்கிற ஒற்றை வார்த்தையும் அதற்கு வடிவேலு கொடுக்கும் முகபாவமும் எந்த செயலையும் கேலி செய்து விடுகிறது.
2007ம் ஆண்டு வெளியான படத்தில் வந்த அந்த வசனம் ஆண்டுகள் கடந்து சமீபத்தில் இணையத்தில் பிரபலமானது. 'ஆஹான்' என்கிற கேலி வார்த்தையை பயன்படுத்தாத இளம் வயதினர் இல்லை எனலாம்.
இது ஒரு உதாரணம் மட்டுமே இதைப்போல் அவரின் உடல்மொழி கூட மிகப் பெரிய அர்த்தங்களை தாங்கி பல நிகழ்வுகளை பகடி செய்து, பார்த்த கணத்தில் சிரிப்பை தந்து விடுகிறது.
இப்படி அவரின் உழைப்பில் விளைந்த கலை அதற்கான பலனைத் தருவதோடு மட்டுமல்லாமல், வேறு ஒரு கலைக்கான அடிப்படையாகவும் பயன்படுவது மிகப் பெரிய விஷயம் அது வடிவேலுவால் மட்டுமே சாத்தியப்பட்டுள்ளது.
இந்த மீம்ஸ் எனும் கலையின் மூலமாக வடிவேலு இன்னும் ஒரு தலைமுறை முன்னோக்கி சென்றுள்ளார். இன்று அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் வடிவேலு வெர்ஷன் என்றொரு முகத்தை இணையவாசிகள் உருவாக்கி ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். அதைப் பார்க்கும் சம்பத்தப்பட்டவர்களும் கோபத்திற்கு பதிலாக சிரிப்பை உதிர்ப்பது தான் வடிவேலுவின் மகத்துவம்.
ஆக வடிவேலு என்றொரு கலைஞனால் போரிலும் கூட புன்னகைகள் பூக்கும். அவர் இம்சை அரசன் மட்டுமல்ல மீம்ஸின் அரசனும் கூட. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது இந்த ட்ரெண்டிங்.