Skip to main content

எக்ஸ்ட்ரா லக்கேஜ் மதுசூதனன்!

Published on 04/12/2017 | Edited on 04/12/2017
எக்ஸ்ட்ரா லக்கேஜ் மதுசூதனன் 
-நாஞ்சில் சம்பத் கிண்டல்! 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்பில், நடிகர் விஷாலும் பாஜக வேட்பாளரும் இணைந்துள்ள நிலையில், தினகரனுக்கு தொப்பிச் சின்னம் கூட கிடைக்கக்கூடாது என்று ஆளும் அதிமுக அணியினர் முட்டுக்கட்டை போட்டுவருகிறார்கள். இந்த எதிர்ப்புக்கு இடையில் தினகரனின் வெற்றிவாய்ப்பு, விஷால் போட்டி உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் டி.டி.வி.தினகரன் அணியின் பதில்கள் என்ன?

அந்த அணியின் செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் சம்பத், நக்கீரன் இணையதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி இதோ...



தொப்பி சின்னம் தினகரனுக்கு கிடைக்கக்கூடாது என்று ஆளும் அதிமுக எதிர்ப்பது ஏன்?

தினகரன் வெற்றிப் பெற்றுவிடுவார் என்பதால் எதிர்க்கிறார்கள். வெற்றியினுடைய விளிம்புவரை கடந்த தேர்தலில் வந்தவர். அவர் வெற்றி பெற்றுவிடுவார் என்பதற்காகவே தேர்தலை ரத்து செய்தார்கள். இப்போது மீண்டும் தொப்பி சின்னம் கிடைத்துவிட்டால் அதற்கு அறிமுகம் தேவையில்லை. அவருடைய வெற்றி எளிதாகிவிடும் என்கிற காரணத்தினாலே கொடுக்கக் கூடாது என்கிறார்கள். தொப்பி சின்னம் எங்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே சுயேட்சைகளை களம் இறக்கியிருக்கிறார்கள். ஆனால் தேர்தல் ஆணையம் முன்னுரிமை அடிப்படையில் தொப்பி சின்னத்தை தினகரனுக்குத்தான் ஒதுக்க வேண்டும்.

டிடிவி தினரகன் வேட்புமனு தாக்கல் செய்யும்போது வெளி ஊர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்திருக்கிறார் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதிமீறல் தொடர்பான முதல் வழக்கே தினகரன் மீது போடப்பட்டிருக்கிறதே?

தன்னுடைய இருப்பை தொலைத்துவிட்ட அமைச்சர்கள், இன்றைக்கு தான்தோன்றித்தனமாக பேசத் தொடங்கிவிட்டார்கள். அமைச்சர்கள் தொகுதிக்குள் வரமுடியாத அளவுக்கு கழக தொண்டர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது. போலீஸ் பாதுகாப்போடு வந்து வாக்காளர்களை சந்திக்க முடியுமே தவிர, தொண்டர்களை நம்பி அவர்கள் யாரும் தொகுதிக்குள் வர முடியாது. அதனால் அதிகாரத்தை பயன்படுத்தி எங்களை ஒடுக்குவதற்கு அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள் என்பதைத்தான் ஜெயக்குமாருடைய பேச்சு தெளிவுபடுத்துகிறது. ஆகவே, தோற்றுப்போக இருக்கிறோம். தொலைந்துபோக இருக்கிறோம் என்கிற மனநிலையில் அழிவின் விளிம்பில் நிற்கின்ற ஜெயக்குமாரின் தப்பு தாளங்களை நாங்கள் அலட்சியப்படுத்திவிட்டு வெற்றியை நோக்கி நாங்கள் விரைந்து கொண்டிருக்கிறோம்.

டிடிவி தினகரன் அதிமுக கொடியை பயன்படுத்த உரிமை இல்லை. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தையே எதிர்த்து போட்டியிடுகிறார் என கூறுகிறாரே ஜெயக்குமார்?

அந்த கொடியை நாங்கள் பயன்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். மேல்முறையீடு செய்திருக்கிறோம். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று பரிபூரணமாக நம்புகிறோம். இரட்டை இலை சின்னத்தை எதிர்த்துதான் நிற்கிறோம். செம்மலை இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்றார். பேராவூரணி செல்லையா இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்றார். இன்றைக்கு அப்படி ஒரு நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம். பாம்பு கடித்து விஷம் ஏறிவிட்டால், அந்த விஷத்தை நீக்குவதற்கு பாம்பினுடைய விஷமே மருந்தாகிவிடுவதைப்போல, இரட்டை இலையை மீட்பதற்கு இரட்டை இலையை எதிர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டிருக்கிறோம்.



இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என தினகரன் கனவு காண்கிறார் என மதுசூதனன் கூறுகிறாரே?

மதுசூதனன் ஒரு காலாவதியான ஒரு கேஸ். காயடிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி. அதிமுகவில் இன்றைக்கு எக்ஸ்ட்ரா லக்கேஜ். ஆகவே அவருடைய அந்திம காலத்து புலம்பலை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடுகிறாரே?

விஷாலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். துணிந்து முடிவு எடுத்த அவரது துணிச்சலை பாராட்டத்தான் வேண்டும். ஆனால் அவருக்கு இதில் நிறைய படிப்பினைகள் கிடைக்கும் என நான் கருதுகிறேன். விஷாலின் பிரவேசத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

தினகரன்தான் விஷாலை போட்டியிட வைத்துள்ளார் என்று ஒரு சிலர் கூறுகிறார்களே?

அதற்கான தேவை எங்களுக்கு வரவில்லை. எதிரிகளின் எண்ணிக்கையை அதிகமாகிக்கொண்டே செல்வதற்கு எங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு?

இவ்வாறு அவர் கூறினார்.

-வே.ராஜவேல்

சார்ந்த செய்திகள்