கடந்த மே மாதம் முதல் தற்போது வரை தொடர்ந்து பற்றி எரியும் கலவர நெருப்பு; ராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சாத மணிப்பூர் பழங்குடி மக்கள்; போராட்டக்காரர்களை வேட்டையாட நினைக்கும் இந்திய ராணுவத்திற்கு எதிராக திரண்ட மணிப்பூர் பெண்கள் மற்றும் குழந்தைகள்; போராட்டக்களத்தில் நிற்கும் பெண்களை அச்சுறுத்தும் இந்திய ராணுவம்.
கடந்த மே மாதம் 3 ஆம் தேதி சிறு பொறியாக தொடங்கிய மணிப்பூரின் கலவர நெருப்பு இரண்டு மாதங்களைக் கடந்தும் இடைவிடாமல் எரிந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை. ஆரம்பத்தில் அரசியல், பொருளாதாரம், கல்வி என எல்லாவற்றிலும் மணிப்பூரில் ஆதிக்கம் செலுத்தி வரும் மணிப்பூரின் பெரும்பான்மை இனமான மீதேயி சமூகத்தினருக்கும், தற்போதுவரை கல்வி மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் குக்கி, நாகர் போன்ற பழங்குடி சமூகங்களுக்கும் இடையே தோன்றிய கலவரமானது ஆளும் பாஜக அரசின் தலையீட்டால் தற்போது அது பழங்குடி மக்களுக்கும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்குமான போராட்டமாக மாறி இருக்கிறது.
மணிப்பூரின் ஆதிக்க சமூகமான மீதேயி சமூகம் அந்த மாநில மக்கள் தொகையில் 53 சதவீதம் உள்ளது. இந்த மக்கள் மணிப்பூரின் சமவெளி பகுதிகளில் வசித்து வருவதால் அரசின் பல்வேறு திட்டங்களை எளிமையாகப் பெற முடிவதோடு கல்வி, பொருளாதாரம் மற்றும் அரசியல் அதிகாரம் போன்றவற்றில் நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். ஆனால் குக்கி மற்றும் நாகர் பழங்குடி மக்கள் மணிப்பூரின் வனப்பகுதிகளில் வசித்து வருகின்றனர். மணிப்பூர் சமவெளி பகுதிகளை விட வனப்பகுதிகளை பெரும்பான்மையாக கொண்ட மாநிலம் என்பதால் பழங்குடி சமூகங்களானது 32 சிறு இனக்குழுக்களாக ஆங்காங்கே பிரிந்து வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு மணிப்பூரின் பெரும்பான்மை சமூகமான முன்னேறிய மீதேயி சமூகத்தை பழங்குடிகள் பட்டியலுக்குள் கொண்டு வந்தது. இதனால் பழங்குடி சமூக மக்களின் வளர்ச்சி மேலும் பாதிக்கப்படும் என்பதால் பழங்குடி சமூக மக்கள் பாஜக அரசின் அந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். ஆனால் ஆளும் பாஜக அரசு பெரும்பான்மை சமூக மக்களின் வாக்கு வங்கியை குறிவைத்து தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதில் மிக உறுதியாக இருந்து வருகிறது. நலிந்த பழங்குடி சமூக மக்களின் மீதான பாஜக அரசின் இந்த பாரபட்சம் தான் மணிப்பூர் கலவரத்திற்கான முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.
மணிப்பூர் பழங்குடி மக்கள் நீண்ட காலமாகவே ஒன்றிய, மாநில அரசுகளின் பல்வேறு ஒடுக்குமுறைகளைச் சந்தித்து வருவதால் அவர்கள் அங்கே தங்களை அரசுகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள பல்வேறு ஆயுதம் தாங்கிய குழுக்களாகவும் செயல்பட்டு வருகின்றனர். எப்போதெல்லாம் அங்கே அரசு பழங்குடி மக்களுக்கு எதிராகச் செயல்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த ஆயுதம் தாங்கிய குழுக்கள் மக்கள் சார்பான போராட்டங்களை முன்னெடுப்பதும் அவற்றை அரசும் ராணுவமும் கடுமையான முறைகளில் கையாள்வதும் மணிப்பூரில் வழக்கமான ஒன்றுதான் என்றாலும் இந்த முறை நடக்கும் போராட்டம் பழங்குடி மக்களின் உரிமை போராட்டம் என்பதால் கடந்த இரண்டு மாதங்களாக மணிப்பூர் ஓர் பெரும் கலவரத்தை எதிர்கொண்டு வருகிறது.
இதுவரைக்குமான மணிப்பூர் கலவரத்தில் 100 பேர் வரை இறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மணிப்பூர் கலவரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒன்றிய அரசின் முயற்சிகள் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் மணிப்பூரின் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. ஆனால் அதற்கு பிறகும் அங்கு நடக்கும் கலவரத்தின் வேகம் கொஞ்சமும் குறையவில்லை.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவம் கலவரத்தில் ஈடுபட்ட ஆயுத குழுவை சேர்ந்த 12 பேரை கைது செய்தது. ஆனால் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட ஆயுத குழுவை சேர்ந்த அந்த 12 பேரையும் விடுவிக்கச் சொல்லி மணிப்பூர் பழங்குடி இன மக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து போராடத் துவங்கினார்கள். இதனால் என்ன செய்வதென்று அறியாத ராணுவம் வேறு வழியின்றி ஆயுத குழுவை சேர்ந்த அந்த 12 பேரையும் விடுவித்தார்கள்.
தொடர்ந்து நடைபெறும் கலவரத்தில் ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டக் குழுவினரை மீண்டும் ராணுவம் கைது செய்துவிட முடியாதபடி அவர்களுக்கு அரணாக மணிப்பூர் பழங்குடி இனப் பெண்கள் களத்தில் நின்று ஆயுத குழுவினரை பாதுகாக்கும் விதமாகப் போராடி வருகிறார்கள். இதனால் ராணுவம் கலவரத்தில் ஈடுபடும் ஆயுதம் தாங்கிய போராட்டக் குழுவை எளிதில் நெருங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வரமுடியாத ராணுவம் கலவரக்காரர்களை பாதுகாக்கும் பெண்களுக்கு ஓர் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
சமீபத்தில் இந்திய ராணுவத்தின் தி ஸ்பியர் கார்ப்ஸ் படைப்பிரிவு தனது ட்விட்டர் பக்கத்தில் களத்தில் கலவரக்காரர்களுக்கு அரணாக இருக்கும் பெண்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவிற்கு மணிப்பூர் பெண்களின் அமைதிப் போராட்டத்தின் உண்மைப் பின்னணி என்று தலைப்பிட்டுள்ளது. அந்த வீடியோவில், கடந்த சனிக்கிழமை இத்தாம் பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் இடம்பெற்றிருக்கின்றனர்.
அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினர் தளவாடங்களுடன் சென்று வரக்கூடிய முக்கியப் பாதை புல்டோசர் கொண்டு தோண்டப்படுகிறது. அதற்கு அரணாக பெண்கள் நிற்கின்றனர். அதேபோல் கார், ஆம்புலன்ஸ், டிராக்டர் எனப் பல வாகனங்களில் பெண்கள் புடைசூழ நடுவில் கலவரக்காரர்கள் ஆயுதங்களுடன் பத்திரமாக இத்தாமில் இருந்து வெளியேறுகின்றனர். இப்படி அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கலவரக்காரர்களுக்கு ஆதரவாக மட்டுமே பெண்கள் களத்தில் நிற்கின்றனர். அவர்களை நாங்கள் மனிதாபிமானத்தோடு அணுகுகிறோம். அதனால் நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்று அர்த்தமில்லை.
பாதுகாப்புப் படையினரை தடுப்பது என்பது சட்டவிரோதமானது மட்டுமல்ல. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விடாமல் தடுக்கும் குற்றமும் கூட. ஆகையால் இரவு பகலாக மணிப்பூர் அமைதிக்காகப் போராடும் படைகளுக்கு உதவும்படி அனைத்துத் தரப்பு மக்களையும் ராணுவம் கேட்டுக் கொள்கிறது. மணிப்பூருக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள் என்று அந்த ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ராணுவத்தின் அந்த வேண்டுகோள் மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட விரும்புவதுபோல் தோன்றினாலும் ராணுவத்தின் கடந்த கால செயல்பாடுகள் எப்படி இருந்தது என்பதை மணிப்பூர் மக்கள் நன்கு அறிவார்கள் என்பதால் மணிப்பூர் கலவரத்தை இது போன்ற சமாதானங்களாலும் எச்சரிக்கைகளாலும் தடுக்க முடியாது என்பதே உண்மை.
மணிப்பூர் கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்றால் அந்த மாநில முதல்வர் பிரேன் சிங் பதவி விலக வேண்டும் என்றும் ஒன்றிய அரசின் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்க்கட்சிகளின் இதுபோன்ற நெருக்கடிகளுக்கு பிறகு நான்கு நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பி இருக்கும் பிரதமர் மோடியுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை சமூகமான குக்கி பழங்குடி இன மக்களை தொடர்ந்து வன்முறைகளால் ஒடுக்க நினைக்கும் அரசுகள் அவர்களின் உரிமைகளைப் பாதுகாத்து அதன் மூலம் அமைதியை நிலைநாட்ட விரும்பாதது ஏன் என்பதுதான் மணிப்பூர் கலவரத்தை உற்று கவனிக்கும் மனசாட்சிகளின் குரலாய் இருக்கிறது.
- எஸ்.செந்தில் குமார்