நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய பேராசிரியர் சுப.வீரபாண்டியன் திருக்குறள் சர்ச்சை தொடர்பாக பேசினார். இதுதொடர்பாக அவர் பேசும்போது, " திருவள்ளுவருக்கு சில நாட்களுக்கு முன்பு காவி சாயம் பூசினார்கள். தஞ்சை அருகே சாணி வீசி திருவள்ளுவர் சிலையை அவமதித்தா்கள். எங்களை பொறுத்த வரையில் இரண்டும் ஒன்றுதான். கடந்த சில மாதங்களாக இல்லை இருபது, முப்பது நாட்களாக அவர்களுக்கு வள்ளுவர் மீது அதிகப்படியான பாசம் வந்துள்ளது. என்ன காரணம் என்று தெரியவில்லை. எதனை விதைக்க இதனை கையில் எடுத்துள்ளா்கள் என்பது இனிவரும் காலங்களில் தெரியவரும். அவர்களுக்கு திருக்குறள் மீதோ அல்லது திருவள்ளுர் மீதோ எந்த விதமான அக்கறையோ பாசமோ இல்லை. அவர்கள் திருவள்ளுவருக்கு காவிச்சாயம் அடிக்க விரும்புகிறார்களே தவிர எங்கேயாவது திருக்குறளை பரப்புவோம் என்று அவர்கள் கூறுகிறார்களா? இதில் இருந்தே அவர்களின் இரட்டை நிலைபாடு தெரியவரும். பெரியார் திருக்குறளை அவமதித்தார் என்று கூறி வருகிறார்கள். அதில் எள் முனையளவு கூட உண்மையில்லை. முதன் முதலாக திருக்குறள் மாநாடு நடத்தியது அவர்மட்டும் தான். தங்க தட்டில் உள்ள மலம் என்று அவர் திருக்குறளை விமர்சனம் செய்ததாக அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் எப்போது அதனை கூறினார் என்று கேட்டால் அதற்கு அவர்களிடம் பதில் இல்லை. இதுதான் அவர்களின் லட்சணம். அவர்களிடம் எந்த கேள்விக்கும் பதில் இருக்காது. பெரியார் அவ்வாறு கம்ப ராமாயணத்தை தான் விமர்சனம் செய்தார். இவர்கள் சொல்வது போன்று அல்ல.
இவர்கள் தருண் விஜயை வைத்து பெரிய அரசியல் செய்ய முயன்றார்கள். அவர் இந்த விஷயத்தில் மிகப்பெரிய நடிகர். இங்கே இருந்து திருவள்ளுவர் சிலையை கொண்டு சென்று மூட்டை கட்டி மூலையில் போட்டார்கள். ஏன் சிலையை அமைப்பதாகத்தானே எடுத்து சென்றீர்கள் என்று நாம் கேட்டால், அப்போதைய காங்கிரஸ் அரசு அதற்கு அனுமதி தரவில்லை என்று கூறினார்கள். சரி, இப்போது யாருடைய அரசு அங்கே இருக்கிறது. இவர்களுடைய அரசு தானே? ஏன் இதுவரை சிலையை அமைக்கவில்லை. உங்களின் நாடகம் தற்போது அனைவருக்கும் தெரியாதா? இங்கே போராடுவதாக காட்டிக்கொள்ளும் அவர்கள் உண்மையான மனநிலை இதன் மூலம் தெரிய வரும். அவர்களுக்கு திருவள்ளுவர் மீதோ திருக்குறள் மீதோ எந்த பற்றோ, மரியாதையோ கிடையாது என்பதே உண்மை" என்றார்.