Skip to main content

ஈவிகேஎஸ்சுக்கு ஆதரவு எப்படி இருக்கிறது?

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

உள்ளூர் ஆட்கள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் தேனி மக்களவைத் தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் திமுக கூட்டணி வேட்பாளராக களம் இறங்கிக் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவரை வெளியூர் வேட்பாளர் என்று விமர்சனம் செய்தாலும், தன்னை தமிழகத்தின் பொதுவேட்பாளராக அறிவித்துக்கொண்டு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி வருகிறார்.

 

evks elangovan



அதிமுக சார்பில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், அமமுக சார்பில் தங்கதமிழ்செல்வன் ஆகியோர் அதிமுகவின் வாக்குகளை யார் அதிகமாக கூறுபோடுவது என்று பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தன்னிடம் பணம் இல்லை என்று அறிவிக்கும் ஈவிகேஎஸ், அதிமுக, அமமுகவிடம் 500 ஆயிரம் 1000 ரூபாய் வாங்காதீர்கள் என்றும் 5 ஆயிரம் 10 ஆயிரம் ரூபாய் வாங்குங்கள் என்றும், வாக்குகளை தனக்கு போடும்படியும் வித்தியாசமாக பிரச்சாரம் செய்கிறார்.


அவருடைய போல்டான பேச்சு ஏற்கெனவே தமிழக மக்களுக்கு அறிமுகமானதுதான். ஆனாலும், தேனித் தொகுதியில் கிராமப்புற வாக்காளர்கள் பெரியாரின் பேரன் பேசும் பேச்சை கேட்க அதிக அளவில் கூடுகிறார்கள். ஈவிகேஎஸ் வெற்றிபெற்றால் நிச்சயமாக மத்திய அமைச்சராகும் வாய்ப்பு இருப்பதால் தங்கள் தொகுதிக்கு நல்லது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.


மிக லேட்டாக பிரச்சாரத்தை தொடங்கிய ஈவிகேஎஸ் தொகுதி முழுவதும் முக்கியமான இடங்களைத் தேர்வு செய்து பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். அவருக்குத் துணையாக தொகுதி முழுவதும் ஈவிகேஎஸ்சின் மனைவி, மகன் திருமகன் ஈவெரா ஆகியோர் தனித்தனியாக கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கேட்கிறார்கள்.


ஈவிகேஎஸ் பிரச்சாரத்துக்கு போகிற இடங்களில் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன் அலங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டபோது பெரும்பிடுகு முத்தரையர் சிலை, தீரன்சின்னமலைக் கவுண்டர் சிலை, காமராஜர் சிலை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

evks elangovan


அவருடைய பிரச்சாரத்தை மதுரை வடக்கு மாவட்டச் செயலாளர் பி.மூர்த்தி, வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், ஒன்றியச் செயலாளர் இரா.கென்னடி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனராஜ் உள்ளிட்டோர் ஒருங்கிணைக்கிறார்கள்.


பிரச்சாரத்தில் ஒபிஎஸ், இபிஎஸ் ஆகியோரை ஒரு பிடிபிடிக்கிறார். மோடியை தெறிக்கவிடுகிறார். இவருக்கு ஆதரவாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவிட்டார். அப்போது மிகப்பெரிய மக்கள் எழுச்சியை பார்க்க முடிந்தது. இவருக்கு ஆதரவாக முதல்கட்டமாக உசிலம்பட்டி பகுதியில் பிரச்சாரம் செய்த குஷ்பூ, இன்று அலங்காநல்லூர் பகுதியில் பிரச்சாரம் செய்கிறார்.


அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இரைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரைப் பின்னுக்குத் தள்ளி அதிமுக வாக்குகளை பிரித்து மேய்கிறார் தங்கதமிழ்செல்வன். இப்போதைய நிலையில் தங்கதமிழ்செல்வனுக்கும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும் இடையில்தான் போட்டி என்ற நிலை உருவாகி இருக்கிறது. ரவீந்திரநாத் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அதிமுகவினரால் பிரிக்கமுடியாத சில சாதியினரின் வாக்குகளுடன் மத்தியா மாநில அரசுகளுக்கு எதிரான வாக்குகள் மொத்தமாக ஈவிகேஎஸ்சுக்கு கிடைக்கும் என்பதால், தேனி தொகுதி மத்திய அமைச்சரின் தொகுதியாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள்.