Skip to main content

ஒரு டீ குடிக்கிற நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியது என்னென்ன...

Published on 05/10/2018 | Edited on 05/10/2018
velmurugan pariyan article



தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக்கூடாது என்று, அவசரத்திற்கு குட்டையில் தேங்கி நிற்கும் தண்ணீரைக்கூட தாகத்திற்குப் குடிப்பார்கள் நம் மக்கள். அப்பேற்பட்ட தண்ணீரிலேயே மூத்திரம் பெய்கிறார்கள் இடைநிலை சாதி என்னும் குட்டையில் ஊறிய சில மட்டைகள். காரணம் ஒடுக்கப்பட்டவர்கள் அந்தத் தண்ணீரை பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இந்த முதல் காட்சியிலேயே இயக்குநர் மாரிசெல்வராஜூம் ஒளிப்பதிவாளர் ஸ்ரீதரும் பார்வையாளனை அப்படியே அலேக்காகக்  குண்டுகட்டாகத்  தூக்கிக்கொண்டு போகிறார்கள். இடையில் எங்கும் நம்மைத் தூக்கி வீசி விடாமல், ஆங்காங்கே கீழே இறக்கி வேதனையில் கொஞ்சம் வாட்டி, சாதித் தீயில் கொஞ்சம் பிரட்டி, கல்லூரியில் கொஞ்சம் மிரட்டி, சிறுநீரில் கொஞ்சம் புரட்டி, படம் முடியும் போது நம்ம மனசை கொஞ்சம் கழட்டி, கீழே இறக்கி விடுகிறார்கள். 

மேனியில் சிறுநீரை பேய்ஞ்சி மூஞ்சியைப் பேத்தெடுத்த பின்னும் ஓடுகிறான் பரியன், தன்னோட இடத்தைப்பிடிக்க. ஒருவனை சிறுமைப்படுத்திவிட்டால் போதும், நாம் இருக்கும் திசையில்கூட அவன் தலை வைத்துப் படுக்கமாட்டான் என்கிற உளவியலின் அடிப்படையில்தான் இங்கு, பொது இடங்களில் போராட வருகின்ற பெண்களின் ஆடைகளை கிழிப்பது, அங்கங்களைத் தொட்டு கூனிக் குறுக வைப்பது போன்ற கீழ்மை செயல்களையெல்லாம் செய்து வருகின்றன உழைக்கும் மக்களை ஒன்று சேர்ந்து விடாமல் பார்த்துக் கொள்ளும், மக்களுக்கு எதிரான மக்கள் அமைப்புகள். அந்த சித்தாந்தத்தின் அடிப்படையில்தான் குறிப்பிட்ட மக்களை நோக்கி, குறிப்பிட்ட மக்களே, நீ ஒடுக்கப்பட்டவன், நீ படிக்கக்கூடாது, நீ சபிக்கப்பட்டவன், நாங்கள் பயன்படுத்துவதை நீ தொடக்கூடாது என்று பொதுவெளியில் பேசியும், பொதுபுத்தியில் திணிப்பதுமாக நடைப்பெற்று வருகிறது. அப்படியான ஒடுக்கமுறை ஒருவனுக்கு பெயர் சூட்டுவதிலிருந்து தொடங்கிவிடுகிறது. பாவாடை, மண்ணாங்கட்டி, பிச்சைக்காரன், குப்பம்மாள், முனியம்மாள், தவட்டாயி என்று பெயரைக் கேட்டாலே தெரியுமில்ல நீ யாரென்று... இப்படி ஒரு அட்டவனைப்படுத்தி  வைத்திருக்கும் போதே,  அந்த அட்டவனையிலிருந்து உயர் கல்வியை நோக்கி ஒரு அனிதாவோ ஒரு வெமுலாவோ கிளம்பி வந்தால் சும்மா விடுவார்களா?

 

pariyan



அதுக்கெல்லாம் பயந்து தூக்கு மாட்டிச்சாவதை விட,  அதை எதிர்த்து சண்டையப்போட்டு மண்டைய போடலாம் என்று இயக்குநர்  உற்சாகத்தைக் கொடுத்தாலும், அவர் ஆதிக்கம் செலுத்தும் சாதியை நோக்கி சண்டைக்கு அழைப்பு விடுக்கவில்லை. இங்குதான் தனித்து நிற்கிறது திரைக்கதை. "அருகருகே அமர்ந்து படிக்கிறோம். எனக்குத் தெரியாததை அவளிடமும், அவளுக்குத் தெரியாததை என்னிடமும் கேட்டுத் தெரிந்து கொள்கிறோமே..." என்று கேட்கிறார் இயக்குநர். "அதெல்லாம்  முடியாது, எங்க பொண்ணு கூட நீ பேசுறீயா, அப்ப உனக்கு மரணதண்டனைதான்" என்று கிளம்பி விடுகிற மனிதர்களை நோக்கி பூப்போல ஒரு கல்லை எறிந்திருக்கிறார் மாரிசெல்வராஜ்.

அடக்கி ஒடுக்கி கல்யாணம் செய்து வைக்கப்படுகிற பெண்களின் மனதை மிக அழகாக கவிஞர் மகுடேசுவரன் ஒரு கவிதையில் வெளிப்படுத்தியிருக்கிறார். "என்னை யாருக்கு வேண்டுமானாலும் கல்யாணம் செய்து கொடுங்கள் கழுத்தை நீட்டுகிறேன், குழந்தை பெற்றுக் கொடுக்கும் மெஷினாக இருந்து குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கிறேன், ஆனால் எனக்குப் பிடித்தவர் என்னைக்காவது வந்து, வா போலாமென்று கூப்பிட்டால் போட்டது போட்டபடி போட்டுவிட்டு அவருடன் போய்விடுவேன்" என்று அந்தக் கவிதை முடியும். ஒரு பெண்ணின் உடம்பைத்தான் நாம் கட்டுப்படுத்த முடியுமே தவிர அவளின் மனதை ஒருபோதும் ஒன்றும் செய்து விட முடியாது. சாதிய அடக்குமுறையில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, அவளுடன் நீங்கள் நெருங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள், "என்னைத்தொட்டது என்னவோ நீங்கள்தான், ஆனால் அவனைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன்" என்று அவள் சொன்னால் எப்படி இருக்கும் உங்களுக்கு? அப்படி எந்தப் பெண்ணும் சொல்லமாட்டாள் என்கிற தைரியத்தில்தான் இங்கு எத்தனையெத்தனை குடும்பங்கள் வாழ்கிறது. அதையும் மீறிச் சொல்லும் பெண்களைத்தான், நம் கருணை உள்ளங்கள் கொன்றுபோட்டு விடுகிறதே. அதனால் மனசுக்குள்ளாகவே ஒருவனை நினைத்துக்கொண்டும், சமூக சூழ்நிலையால் வேறொருவனுடன் குடும்பம் நடத்திக்கொண்டிருக்கும் ஏராளமான பெண்கள் நம்மிடையே இருக்கிறார்கள். அப்படி ஒரு பெண்ணாகத்தான் இத்திரைப்படத்தில் கதாநாயகியின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

 

pariyan family



அப்பாவை அவமானப்படுத்தியவனை குத்திக் கிழிச்சாதான் எம்மனசு அடங்கும் என்று கத்தியைத் தூக்கிக்கொண்டு நிற்கும் மகனிடம், பரியனின் தாய். "இது என்னப்பா அவமானம், உங்கப்பா பெண் வேசங்கட்டி ஆடிக்கிட்டு இருக்கும்போதே தூக்கிட்டு ஓடி பாவாடை தூக்கிப் பார்த்துட்டுலாம் விட்டுருக்காங்க" என்று  சொல்கிறார்... தன் வாழ்நாளில் எத்தனை அவமானங்களை அந்தத் தாய் சந்தித்து இருப்பார்? எத்தனை ஆம்பளைங்க அந்த அம்மாவை வளைக்க முயற்சித்திருப்பார்கள்? ஏளனம் பேசியிருப்பார்கள். இவ்வளவு அவமானங்களையும் கடந்து ஒரு பிள்ளையைப் பெத்து வளர்த்து படிக்க வைக்க கல்லூரிக்கு அனுப்புனா, ஒடுக்கப்பட்டவனுக்கு படிப்பெதுக்குனு ஒதுக்குறோம். அத்தனை அவமானங்களை அவர்கள் வாழ்நாளெல்லாம்  சந்தித்து இருந்தாலும், கல்லூரி வாயிலில் சில மாணவர்கள் அவரின் வேட்டியை உருவி, 'நீ ஆம்பளையானு  நாங்க பார்க்கணும்' என்று கேட்கும்போது அவர் அவமானம் தாங்கமுடியாமல் ஓடுகிறார்.

அவர் பெண் வேடத்தில் இருக்கும் போது தூக்கிப் போனவர்கள் ஆட்டத்தைப் பார்க்க வந்த குடிகாரர்களாக இருந்திருப்பார்கள், கரடுமுரடாக நடந்துகொள்ளும் போக்கிரியாக இருந்திருப்பார்கள். அதில் மனம் கொஞ்சம் சாந்தமடைந்திருக்கலாம். ஆனால் ஊருக்கெல்லாம் நீதியைச் சொல்லப்போகிற ஒரு சட்டக்கல்லூரியில் படிக்கும், ஒரு ஆண் இனமே ஒரு ஆணை, நீ ஒரு ஆம்பளயா காட்டுப் பார்க்கலாம் என்று வேட்டியை உருவும்போது அவமானத்தில் ஓடத்தான் முடியும். இங்கே வேறொரு இயக்குநராக இருந்திருந்தால் வேறு வழிமுறைகளை கையாண்டிருக்கக்கூடும். ஒன்று பரியனின் அப்பா அந்த மாணவர்களை நோக்கி "உங்க வீட்டில் இருக்கிற பொம்பளைங்கள அனுப்புங்கள். நான் ஆம்பளயா இல்லையானு சொல்றேனு" சொல்லியிருக்கலாம். அல்லது அவரது மகன் அப்பாவிற்கு ஏற்பட்ட அவமானத்தில் ஹீரோயிசம் காட்டி அவர்களை அடித்துப் பறக்க விட்டிருக்கலாம். ஆனால் தான் ஒரு சராசரி திரைக்கதையாளன் அல்ல. நான் சொல்ல வருவது அதுவல்ல என்று வேறொரு இடத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறார் மாரி செல்வராஜ்.

 

pariyan friend



பரியனின் அப்பா அவ்வளவு அழகாக ரசித்து ரசித்து நடனம் ஆடுகிறார். அதை ஊரே சந்தோசமாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. நான் என்னைப் பரியனாக நினைத்து பரியனையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதல் முறையாக ஒரு பாடலுக்கான நடனத்தைப் பார்த்து கண்ணீர் சுரந்தது இந்தப் படத்தைப் பார்க்கும்போது நிகழ்ந்தது. ஒரு பாடல் வரி, இசைத்துண்டுகூட நம் காதில் நுழையவில்லை. அப்பாவின் நடனமும் மகனின் கண்ணீரும்தான் நம்மை மூழ்கடித்தது. ஒரு ஆண், பெண் வேடமேற்று ஆடுவதற்கே நமக்கு உதறுகிறதே. குறவன் குறத்தி ஆட்டத்தில் ஆடும் குறத்திகளின் பகல்களை நினைத்துப் பாருங்கள். அவர்களுக்கும் பரியனைப் போல ஒரு மகன் இருக்கக்கூடும். இரவில் குறவன் குறத்தி ஆடும் ஊர்களில் குறத்திகளின் பின்னால் ஏராளமான ஆண்கள் சுற்றுவார்கள். அவர்களில் பல பேர்களின் எண்ணம் ஏதோ ஒரு தெருவின் இரவு திருப்பத்தில் அக்குறத்தியின் அங்கத்தைத் தொட்டுவிடவேண்டும் என்றே இருக்கும். அப்படி சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞர்களைப் பரியன் போல ஒரு மகன் பார்க்க நேர்ந்தால் அவன் மனம் என்ன பாடுபடும். இந்தக் காட்சியை எழுதி படம் பிடித்த மாரி செல்வராஜின் உயரத்திற்கு அன்பைக் கொட்டி அரவணைக்கலாம். அந்தவொரு காட்சிதான் எத்தனை எத்தனை சிந்தனைகளை கிளறி விடுகிறது.

ஊரில் செல்வாக்காக வாழ்ந்த ஒரு குடும்பத்தில்,  நாலு குழந்தைகளும் ஆணாய் பெற்றெடுத்து  சந்தோசமாக  வாழ்ந்திருந்தார்கள். காலப்போக்கில் அந்த நால்வரில் ஒரு ஆண் மட்டும்  திருநங்கையாக உடல் ரீதியாக மாற்றமடைந்தார். அதுவரை தலைநிமிர்ந்து பார்த்த அங்காளி பங்காளிகள் எல்லாம், அதன்பிறகு அக்குடும்பத்தைப் பார்க்கும் பார்வையே வேறுமாதிரியாக இருந்தது. ஆணாய் இருக்கும் வரை தோளில் கை போட்டவர்களில் சிலர், அதன்பிறகு அவரின் தொடையில் கையைப் போட்டார்கள். ஊரும் உலகமும் துரத்த, ஊடும் உறவும் விரட்ட அன்றைய பம்பாயை நோக்கி  ஓடினார். பெண் மனநிலையிலிருந்து பெண்ணாகவே மாறினார். இயற்கையில் பெண்ணாகப் பிறந்தவர்களே அவரோட அழகைப் பார்த்து உச்சுக்கொட்டினார்கள். பழனியாக இருந்தவர் சுந்தரியாக மிளிர்ந்தார். பம்பாயிலிருந்த அவர்களின் குடும்பத்து எதிரியே சுந்தரிக்கு தாலிகட்டி குடும்பம் நடத்துவதை அறிந்த பழனியின் குடும்பம் குறுகிப்போனது. சுந்தரி குடிக்க ஆரம்பித்தார். என்ன நினைத்து குடிக்க ஆரம்பித்தாரோ? அவர் குடிக்கக் குடிக்க அவரோட அழகு எல்லாவற்றையும் மது குடித்துக் கரைத்தது. தாலி கட்டியவன் தெருவில் விட்டான்.

 

anandhi



ஒரு நாள் அனாதையாக பம்பாயில் இறந்தும் போனார். காலம்தான் எவ்வளவு  ஈவு இரக்கமில்லாதது... இப்படி எண்ணற்ற துன்பங்கள் நிறைந்திருக்கிறது பெண்சாயல் கொண்ட ஆண்களின் குடும்பங்களில். இதை எண்ணிப்பார்த்தோமானால் தெரியும், தன் அப்பாவை நினைத்துக் கதறும் பரியனின் நிலை. பெண் சாயலில் பேசுகிறான் என்று சக மாணவர்கள் கிண்டல் பண்ண, சமீபத்தில் திருச்சி அருகே பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த மாணவன் தூக்கு மாட்டிச் செத்துப்போனான். அப்படிதான் நமது சுற்றத்தை நாம் வளப்படுத்தி வைத்திருக்கிறோம். உடல்ரீதியான ஊனங்களைக் கூட கேளிப்பேசி சிரிக்கும் சொந்த பந்தங்களில், பரியன் தனது அப்பா பெண் சாயலில் இருக்கிறார் என்று அதுநாள் வரைக்கும் எங்கேயும் அழைத்துச் செல்லாமல் குற்றயுணர்வில் இருப்பது எவ்வளவு வலிகள் நிறைந்தது. அதையெல்லாம் துடைத்து தூர எறிந்து விட்டு தன் அப்பாவை கல்லூரியில் பரியன் அறிமுகப்படுத்தும் காட்சியைக் கண்டு மெய்சிலிர்க்க தான் செய்தது. அதே போன்ற அப்பாக்களைப் பெற்றவர்கள் இப்படத்தைப் பார்த்து விட்டு இனிமேல் எந்தவித குற்ற உணர்வுமில்லாமல் வெளியே அழைத்துச் செல்வார்கள். என்று நம்புகிறேன்.

 

police attack



கள்ளிப்பால் கொடுத்து பெண் சிசுக்களைக் கொன்றவர்களின் முகங்களை பார்க்காதவர்கள் காசு வாங்கிக்கொண்டு கருக்கலைப்பு செய்பவர்களைக் கண்டிருக்கலாம். அந்த முகங்களை விட இந்தப் படத்தில் ஆணவக்கொலைகள் செய்யும் ஓர் ஆணின் முகம் நம்மை அரள வைக்கிறது. ஒரு தேர்ந்த செவிலித்தாய் பிள்ளைப்பேர் பார்ப்பது போன்று, மிக லாவகமாக சிந்தாமல் சிதறாமல் ஒவ்வொரு உயிரையும் எடுக்கிறார். ஒரு பெண்ணுக்கு மொட்டை அடித்துவிடுகிறார். அந்தப் பெண்ணின் சாதியில் இருக்கும் ஒரு பையனே கூட அவளைக் காதலிக்கவோ, கல்யாணம் செய்து கொள்ளவோ தயங்கக்கூடும். 'அவள் அப்படி  ஒன்றும் அழகில்லை' என்ற நிலையிலும் அவளை யாரோ ஒருவன் காதலித்து கல்யாணம் செய்து கொள்ளட்டுமே என்று விட்டுவிடாமல் மொட்டை போட்டு விடுவதில் இருக்கிறது நம் சமூகத்தின் சாதித்திமிர். அந்தக் கிழவன் செய்யும் முதல் கொலையில் பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கிப் போய் செத்தப்போன இளைஞனைப் பார்த்து துடிப்பார்கள். ஆனால்  ஒரு பெண்  மட்டும் பேருந்துக்குள்ளாகவே இருந்து கொண்டு கதறுவாள். செத்துப்போன காதலனின் உடலருகே கூட, போக முடியாத அளவுக்கு பெண்களை நாம் பயம் காட்டி வைத்திருந்தாலும் , இந்த மைனாக்கள் ஏன் கரண்ட் கம்பிகளைத் தேடியே ஓடி உட்காருகிறது. அதுதான் காதல்.

 

lyricist velmurugan

 

வேல்முருகன்



நம் வீட்டிலிருக்கும்  பெண் குழந்தைகளுக்கு ஒரு நாள் மலம் வராவிட்டால் கூட, மருத்துவரைத் தேடி ஓடி இனாமல் கொடுத்தாவது கழிவை வெளியேற்றி ஆசுவாசமடைகிறோம். அதே குழந்தை பெரிய பெண்ணாக வளர்ந்ததும், ஒரு மாதம் மாதவிடாய் நின்றுபோனாலோ, 'புள்ளைக்கு உடம்புல சத்து இல்லையோ' என்று பதறி வைத்தியம் பார்க்கிறோம். குறிப்பிட்ட நேரத்தில் ஏதோ ஒன்று தடைபட்டால் அதை சரிசெய்ய மெனக்கெடுகிற நாம் அவர்களுக்கு காதல் வரவேண்டிய காலத்தில், அவர்கள் காதலித்தால் மட்டும் ஏன்  கொன்று போடுகிறோம்? இத்திரைப்படத்தின் கதாநாயகி கண்ணை மூடிகொண்டு பரியனிடம் பேசும் காட்சியில் கிட்டத்தட்டக் கெஞ்சுகிறாள். அவள் அப்படி கெஞ்சியபடி அவள் மனதில் உள்ளதை சொல்வது பரியனிடம் மட்டுமல்ல, அவளின் அப்பாவிடமும், இந்த சமூகத்திடமும்தான். 'இருப்பது ஒரு வாழ்க்கைதானடா, அதை எனக்குப் பிடிச்சது போல் வாழ்ந்துகிறேனே' என்று  கெஞ்சுகிறாள். ஆணாதிக்க சமூகம் அவ்வளவு சீக்கிரம் இறங்கி வருமா? காத்திருக்கும் பெண்கள் கடலைப் போன்றவர்கள். சுனாமிப் பேரலைகள் எழுகிற வரைக்கும்,  காலைப்பிடித்துக் கிடக்கும் வெறும் அலைகளாகத்தான் அவர்கள், நம் கண்ணுக்குத் தெரிவார்கள். 'தலைக்கு மேல வெள்ளம் போனால் சாண் என்ன மொழம் என்ன' என்று புறப்பட்டால் எல்லாமே இங்கு பாழ்தான்.

மராத்தியில் வெளியான 'பன்றி' திரைப்படத்தின் முடிவில் சிறுவன் அவமானம் தாங்கமுடியாமல் பார்வையாளனை நோக்கி கல்லெறிவான். பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் முடிவில் 'ஒரு டீ குடிக்கிற நேரத்தில் பேசிவிடுகிற முரண்பாடுகள்தான் நமக்குள் இருக்கிறது, அதனால் வா பேசலாம்' என்று மாரிசெல்வராஜ் அழைக்கிறார், பேசலாம்.