கேரள உள்ளாட்சித் தேர்தலில் தடம் பதிக்க வேண்டும் என்கிற நோக்கில் தேர்தலைச் சந்தித்த பாஜகவுக்கு தற்போது வெளியான தேர்தல் முடிவுகள் ஒரு ஏமாற்றமே. கடந்த 2015 -ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில், கிராமப் பஞ்சாயத்தில் 14 இடங்களைப் பெற்றிருந்த பா.ஜ.க, இந்தமுறை 24 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆனால், இம்முறை எந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்துகளிலும் முன்னிலை வகிக்கவில்லை பா.ஜ.க. கடந்த தேர்தலில் 21 ஊராட்சி ஒன்றியத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது. நகராட்சி தேர்தலில் 320 டிவிஷன்களில் தனது இருப்பை உறுதி செய்திருக்கிறது. கடந்தமுறை 236 டிவிஷன். மாநகராட்சி தேர்தலிலும் இம்முறை தனது இருப்பை காட்டி முன்னேற்றப் பாதையில்தான் உள்ளது பாஜக.
கடந்த முறை பாலக்காடு நகராட்சியில் வெற்றி கண்ட பாஜக, இந்தமுறை பாலக்காடு மட்டுமின்றி பந்தளம் நகராட்சியுடன் சேர்த்து இரு நகராட்சிகளிலும் வென்றிருக்கிறது. சபரிமலை விவகாரத்தின்போது பந்தளம் மற்றும் பத்தனம்திட்டா பகுதிகளில்தான் பாஜகவும் சில இந்து அமைப்புகளும் சேர்ந்துகொண்டு சபரிமலைக்குள் பெண்கள் நுழையக் கூடாது என்று போராட்டம் நடத்தினார்கள். அதனுடைய வெளிப்பாடாகத்தான் கடந்தமுறை இடதுசாரிகள் வென்ற பந்தளத்தில் இம்முறை பாஜக வென்றுள்ளது. மேலும், பத்தனம்திட்டா பகுதிகளில் சில வார்டுகளிலும் பாஜக வென்றிருப்பது, சபரிமலை விவகாரம் எனப் புரியவைக்கிறது.
பாஜக இரண்டு நகராட்சிகளில் மட்டும் வென்றிருந்தாலும், அது ஒருசில நகராட்சிகளில் மற்ற கூட்டணிகளுக்குக் கடுமையான போட்டி கொடுத்திருக்கிறது. இடதுசாரிகளின் கோட்டை என்று சொல்லப்படும் ஒட்டப்பாளம், ஷொர்னூர் ஆகிய நகராட்சிகளில் பாஜக நிறைய வாக்குகளைப் பெற்றுள்ளது. கன்னூர் நகராட்சியில் காங்கிரஸை வென்றிருக்கிறது பாஜக. அதேபோல நிலம்பூர் நகராட்சி மற்றும் அங்காமளி நகராட்சியில் தலா ஒரு சீட்டை பாஜக வென்றிருக்கிறது.
திருவனந்தபுர மாநகராட்சியை இம்முறை வெல்வதை இலட்சியமாகக் கொண்டு இறங்கியது பாஜக. காரணம் கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவே ஆச்சர்யப்படும் அளவிற்கு, 35 சீட்டுகளை வென்று காங்கிரஸை மூன்றாம் இடத்திற்குத் தள்ளியது. இதனைத் தொடர்ந்து இந்தமுறை இங்கு கவனம் செலுத்தினால், மாநகராட்சி நம் கையில் வந்துவிடும் என்கிற எண்ணத்தில்தான் ஒருவருடமாக பா.ஜ.க இங்கு பணியாற்றியது. ஆனால், இந்தமுறை 34 சீட்டுகளையே வென்றுள்ளது. காங்கிரஸ் 10 சீட்டுகளைத்தான் பெற்றுள்ளது. இதுமட்டுமல்லாமல் 2016ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத் தேர்தலில் திருவனந்தபுர தொகுதி ஒன்றை பாஜக வென்றதில், இம்முறை மாநகராட்சி நமக்குத்தான் என மிகவும் நம்பிக்கையாக இருந்தது. ஆனால், எதிர்க்கட்சியாக மட்டுமே ஆக முடிந்தாலும் அங்கு தனது இருப்பை நிரூபித்துள்ளது பாஜக.
இதுமட்டுமல்லாமல் யாரும் எதிர்பாராத ஒரு மூவாக 600க்கும் மேற்பட்ட சிறுபான்மையினர்களை உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. 112 இஸ்லாமியர்கள் மற்றும் 500 கிறிஸ்துவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. இதன்மூலம் பாஜக கட்சி சிறுபான்மை மக்களின் வாக்குகளை நோக்கியுள்ளது. மேலும், அவர்கள் மீது வைக்கப்படும் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் என்கிற குற்றச்சாட்டுக்கு இதன்மூலம் பதில் சொல்லிக்கொள்ளலாம் என்கிற மூவாகதான் இது பார்க்கப்படுகிறது. இதை வைத்து அடுத்து ஒருசில மாதங்களில் நடைபெற இருக்கும் கேரள சட்டமன்றத் தேர்தலிலும் பலனை எதிர்பார்க்கிறது பாஜக. இதுமட்டுமல்லாமல் ஏ.கே. ஆண்டனி, உம்மன் சாண்டி, ரமேஷ் சென்னிதலா போன்ற மூத்த தலைவர்களின் தொகுதிகளில் பாஜகவின் வாக்குகள் கனிசமான அளவு இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனை எல்லாம் பார்க்கும்போது பாஜகவுக்கு இந்த கேரள உள்ளாட்சித் தேர்தல் கடும் தோல்வி என்பதைவிட ஆறுதல் பரிசு எனலாம்...