உலகின் சிறந்த நாடுகளின் பட்டியல்

எல்லாருக்கும் அவரவர் தாய் நாடுதான் சிறந்தது என்ற கருத்து இருக்கும். ஆனால் சிலருக்கு அதை அனுபவிக்க முடியாமல் மற்ற நாடுகளுக்கு அகதிகளாகவோ அல்லது குடும்ப சூழ்நிலையின் காரணமாக வேலைக்கோ சென்றிருப்பார்கள். சிலர் தாய் நாட்டில் அனைத்தையும் கற்றுவிட்டு, வெளிநாட்டிற்கு சென்றால்தான் பெருமை என்ற நோக்கிலும் சென்றிருப்பார்கள். மற்ற நாடுகளுக்கு சென்ற அல்லது கேள்விப்பட்ட அனுபவத்தில் தாய் நாட்டைவிட வெளிநாடு மிகவும் சிறந்ததாக தெரியலாம். இப்படி பலருக்கு பல நாடுகள் சிறந்ததாக தோன்றினாலும் உலகளாவிய பார்வை என்று ஒன்றுள்ளது. ஒய் & ஆர் க்ளோபல் ( Y & R global) என்ற நிறுவனம் "உலகின் தலைசிறந்த நாடுகள்" என்ற தலைப்பில் ஆய்வு நடத்தி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்த நிறுவனம் 65 பண்புகளின் அடிப்படையில் இந்த பட்டியலை தயார் செய்துள்ளது. இந்த ஆய்வில் கிட்டத்தட்ட 21,000 வணிக தலைவர்கள், உயரடுக்கு மற்றும் பொது மக்கள் பங்கேற்றனர்.

இந்த பட்டியலில் மொத்தம் 80 நாடுகள் இடம்பெற்றுள்ளன. போன வருடம் 78வது இடத்தில் இருந்த அல்ஜிரியா இந்த வருடம் 80வது இடத்தை பிடித்திருக்கிறது. போனவருடம் 74வது இடத்திலிருந்த பாகிஸ்தான் இந்த வருடமும் அதே இடத்தில் தொடர்கிறது. போன வருடம் 57வது இடத்தில் இருந்த மியான்மர் இந்த வருடம் 63வது இடத்தை பிடித்திருக்கிறது. போன வருடம் 50வது இடத்தில் இருந்த இலங்கை இந்த வருடம் 51வது இடத்தை பிடித்திருக்கிறது. போன வருடம் 35வது இடத்தில் இருந்த மலேசியா இந்த வருடம் 34வது இடத்தை பிடித்திருக்கிறது. போனவருடம் 20வது இடத்திலிருந்த சீனா இந்த வருடமும் அதே இடத்தில் தொடர்கிறது. போன வருடம் 15வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் இந்த வருடம் 16வது இடத்தை பிடித்திருக்கிறது. உலகில் நாங்கள்தான் பெரியவர்கள் என கூறும் அமெரிக்கா போன வருடம் 7வது இடத்தில் இருந்தது. இந்த வருடம் அது 8வது இடத்தை பிடித்திருக்கிறது. ஜெர்மன் சென்ற வருடத்தில் இருந்த இடத்தில் இருந்து முன்னேறி இந்த வருடம் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கனடா இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது சென்ற வருடமும் அது அதே இடத்தைத்தான் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. போன வருடம் முதலிடம் பிடித்த ஸ்விட்சர்லாந்து இந்த வருடமும் அதே இடத்தை பிடித்து உலகின் சிறந்த நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

இந்த பட்டியலில் இந்தியாவிற்கு இடமில்லையா? என்ற கேள்வி எழலாம். ஆம் இந்தியாவிற்கு இடமிருக்கிறது 25வது இடம். சென்ற ஆண்டும் இதே இடத்தைத்தான் பெற்றிருந்தது. மொத்தமாக 4.5/5 மதிப்பெண் பெற்றுள்ளது. இதில் வருத்தப்பட வேண்டிய தரவுகளும் வந்துள்ளன. பெண்களுக்கான நாட்டில் இந்தியாவிற்கு 50வது இடம்தான் கிடைத்துள்ளது. குடியுரிமையில் நம் நாட்டிற்கு 51வது இடம் கிடைத்துள்ளது என்பது நாம் நம் குடியுரிமையை சரியாக பயன்படுத்தாமல் (பாதுகாக்காமல்) இருப்பதை காட்டுகிறது. நாட்டின் எதிர்காலம் இளைஞர்களிடம் உள்ளது. நம் நாட்டில் இளைஞர்கள் அதிகம் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் வளரும் விதம் சரியானதுதானா என்ற கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. அதற்கான பதிலை இந்த தரவு கூறுகிறது. வளரும் குழந்தைகளுக்கான சிறந்த நாடு என்ற பட்டியலில் 58வது இடத்தை பெற்றுள்ளது. நாம் சில விஷயங்களில் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. இதற்கு அரசையோ, ஆட்சியாளர்களையோ குறைசொல்லி பயனில்லை. தனிமனித ஒழுக்கமே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
-கமல் குமார்