புதிய பாராளுமன்றக் கட்டடம் திறப்பு மற்றும் செங்கோல் நிறுவியது உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் குறித்து திமுகவின் தேர்தல் பணிக் குழுச் செயலாளர் இள. புகழேந்தி நம்முடன் பேசினார்.
புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவில் ஆதீனங்கள் எல்லாம் இணைந்து பிரதமர் மோடிக்கு செங்கோல் வழங்கியுள்ளனர். அதனை அவர் சபாநாயகர் இருக்கையின் அருகே வைத்துள்ளார். இது தமிழர்களுக்கு பெருமை என பாஜகவினர் கூறுகின்றனர்?
இதற்கு பதில் அளித்த இள. புகழேந்தி, “மோடி அரசு பாராளுமன்ற திறப்பு விழாவில் தமிழர்களை பெருமைப்படுத்துவதாக பாஜக கூறுவது, தமிழ்நாட்டில் இதன் மூலம் இந்துத்துவா கொள்கைகளை பரப்பி பாஜக ஆட்சியை பிடிப்பதற்காக அவர்கள் செய்யும் வாக்கு அரசியல் தான். இவர்களுக்கு உண்மையாகவே தமிழ் மேல் பற்று இருக்கிறது என்றால் அந்த பாராளுமன்றத்தில் சமஸ்கிருத கல்வெட்டிற்கு பதிலாக தமிழ் கல்வெட்டைத்தானே வைத்திருக்க வேண்டும்.
இந்தியாவில் 20,000 பேர் கூட பேசாத சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக சுமார் ரூ. 1100 கோடி ஒதுக்கிய இதே மோடி அரசு, உலகத்திலேயே மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழிக்கு வெறும் 20 கோடியை மட்டுமே ஒதுக்கியுள்ளது.
அனைத்து மதத்தை சார்ந்த மக்களும் இருக்கும் ஜனநாயக நாடான இந்தியாவில் இந்து முறைப்படி, ஆதீனங்களை வரவழைத்து இந்த விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இன்னொரு சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. உள்துறை அமைச்சரான அமித்ஷாவின் ஆட்கள், விழாவிற்கு முந்தைய நாள் இரவு இரண்டு பசு மாடுகளை அந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அதுமட்டுமின்றி அந்த மாடுகள் சாணம் போடு வேண்டும் என 10 நிமிடங்களாக அங்கேயே காத்திருந்திருக்கின்றனர்.
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.கள் அமரப்போகும் அந்த பாராளுமன்றக் கட்டடத்தில் காவி உடை அணிந்தவர்களை அழைத்து வந்த நோக்கம், 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘நாங்கள் அன்றே புதிய பாராளுமன்ற திறப்பு விழாவில் இதனை எல்லாம் செய்தோம்; மக்கள் யாரும் எங்களை எதிர்க்கவில்லை. மீண்டும் மக்கள் எங்களுக்கு வாக்களித்துள்ளனர். அதனால், இந்த நாட்டில் சிறுபான்மையின மக்கள் இருக்கக்கூடாது என சட்டம் போடுவேன்’ என பேசுவார்கள்” என்று தெரிவித்தார்.