Skip to main content

கேரளா டூ தமிழ்நாடு; கதி கலங்க வைத்த அரிசிக்கொம்பன்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

Kerala, Tamil Nadu rice komban issue

 

25 வயதான ஒற்றை யானை ‘அரிசிக் கொம்பன்’ இந்தப் பெயரை கேரளாவின் மூணாறு, இடுக்கி மாவட்டங்களில் உச்சரித்துப் பாருங்கள். அடுத்த நொடி பின்னங்கால் பிடரியில் பட உயிரைக் காப்பாற்ற சிட்டாய்ப் பறந்து விடுவார்கள். கேரள வனப்பகுதியில் அந்த அளவுக்கு சர்வாதிகாரியாகவும் சக்கரவர்த்தியாகவும் ஏரியாக்களை ஒற்றை யானையாக கலக்கி வந்திருக்கிறது அரிசிக் கொம்பன் யானை. ஆக்ரோஷத்தின் சிகரத்திலிருக்கும் ஒற்றை யானையை எதிர் கொள்வது எமனின் பாசக்கயிறு வீச்சலுக்கு ஒப்பானது என்ற சொல்லாடலும் உண்டு. கேரளாவின் மூணாறு பகுதியின் சின்னக்காணல் மற்றும் உடும்பன் சோலை பஞ்சாயத்துக்களில் வருகிற சின்னக்காணல், பெரியகாணல், பல்லியாறு, சூரியநல்லி, 301 காலனி, செண்பகத்தெரு உள்ளிட்ட ஏரியாக்கள் மலை முகடுகளின் பகுதிகளிலிருப்பவை. இவைகள் தேயிலை மற்றும் ஏலக்காய் விளைச்சலைக் கொண்ட எஸ்டேட்கள். ஆயிரக்கணக்கான தொழிலாளக் குடும்பங்கள் இந்த எஸ்டேட்களில் கூலி வேலையிலிருப்பவர்கள்.

 

இடுக்கி, மூணாறு சந்திக்குமிடத்தின் மலை வனப்பகுதியில் ஒற்றையாய் திரிந்து கொண்டிருக்கிற அரிசிக் கொம்பன் யானை எதிர்பாராத வகையில் திடீர் திடீரென்று அருகிலுள்ள சின்னக்காணல் பஞ்சாயத்திற்குட்பட்ட தேயிலை எஸ்டேட்களுக்குள் நுழைந்துவிடும். உணவு, தண்ணீருக்காக இப்படி புகுந்துவிடுகிற அரிசிக் கொம்பன், தொழிலாளர்கள் வைத்திருக்கிற உணவுகளை ஒரு பிடி பிடித்து விட்டு அட்டகாசமாக வெளியேறும் போது எதிர்ப்படுகிற தொழிலாளர்களைத் தாக்குவதுடன், கும்பலைக் கண்டால் ஆக்ரோஷமாக விரட்டும். திடீரென்று மூணாறு மெயின் பகுதியின் பூப்பாறை, சிக்னல் பாயிண்ட் பகுதிகளிலிருக்கும் கடைகளைத் துவம்சம் செய்து அங்குள்ள அரிசியை மொத்தமாகத் தின்றுவிடும் எதிர்ப்பட்டவர்களைத் தாக்கியோ மிரட்டி விட்டோ கிளம்பிவிடும். அரிசிதான் அதற்குப் பிடித்தமான உணவு என்கிறார்கள்.

 

Kerala, Tamil Nadu rice komban issue

 

எஸ்டேட் பகுதிகளுக்குள் திடீர் திடீரென புகுந்து விடுவதால் எஸ்டேட் தொழிலாளர்கள் அரிசிக் கொம்பனா என்ற அச்சத்துடனேயே பொழுதைக் கழிக்க வேண்டிய நிலை. கடந்த 7 வருடங்களில் மட்டும் அரிசிக் கொம்பன் யானையால் தாக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 8. அது மூர்க்கமாக விரட்டுகிற போது உயிருக்குப் பயந்து ஓடியதில் முட்டி மோதி தடுமாறி பள்ளத்தாக்கில் விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம் என்று சொல்கிற மூணாறு நகரின் சமூக நல செயற்பாட்டாளரான முல்லை முருகன், அரிசிக்கொம்பனால் உயிர் பயத்திலும் தாக்குதலுக்குள்ளாகும் தொழிலாளர்கள் பற்றி மூணாறு டிவிசனின் வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். ஆனால் அவர்களாலும் அரிசிக் கொம்பனின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்கிற முல்லை முருகன், அரிசிக் கொம்பனின் பின்னணியை வெளிப்படுத்தியது அதிர வைப்பவை.

 

மலை மீது பல வேளைகளில் உணவு கிடைக்காத போது அதற்காக சின்னக்காணல் பஞ்சாயத்தின் எஸ்டேட் பகுதிகளில் நுழைந்து விடுகிற அரிசிக் கொம்பன் அந்தப் பகுதிகளின் ரேசன் கடைகளுக்குள் புகுந்தும், ரேசன் கடையை உடைத்தும் அங்குள்ள அரிசியைத் தின்று தீர்த்து விடும். உணவுத் தட்டுப்பாடான கொரோனா காலத்தில் அரிசிக் கொம்பன் ரேசன் கடைகள், மெயின் வீதிக் கடைகளிலுள்ள அரிசி வகைகளைத் தின்று தீர்த்து விடுவதை வனத்துறையினர் கண்டு கொள்வதில்லை. தன் உணவுக்காக அரிசியையே டார்கெட் பண்ணுவதால்தான் அரிசிக் கொம்பன் யானை என்ற பெயராகிவிட்டது. கம்பீரமான நடை, பார்வையில் கூர்மை. மூர்க்க குணமான மிரட்டுகிற தோற்றம் என்பதால் மற்ற யானைகளை விட அரிசிக் கொம்பன் மீது மக்களுக்கு உதறலெடுக்கும் பயம்.

 

Kerala, Tamil Nadu rice komban issue

 

1997களில் அரிசிக் கொம்பானின் தாய் யானை சுகவீனப்பட்டு மரணமடைந்தபோது குழந்தை நிலையிலிருந்த குட்டி யானையான அரிசிக் கொம்பன், தாய் இறந்தது தெரியாமல் முட்டி அழுகிறார். அதன்பின் ஒண்டியாகவே காடுகளிலுள்ள தன் உறவினர் யானைகளோடு சேர்ந்தும் தனித்தும் வாழ்ந்தவர். அந்தப் பகுதியில் ஒரு ராஜாவாகவே வாழ்ந்து வந்தவர் பின்பு ரேசன் கடைகளை உடைத்து அரிசியை தின்று வந்திருக்கிறார். அவர் தனித்தே கெத்தாக வாழ்ந்ததால் இயற்கையை மீறிய பலத்துடன் இருந்திருக்கிறார். அப்படிப்பட்ட அரிசிக் கொம்பனுக்கு பல்லியாறு எஸ்டேட் பகுதியில் மனைவி யானையும், மகனாக குட்டி யானையும் உண்டு. தவிர அரிசிக் கொம்பனின் நண்பரான சக்கைக் கொம்பன் யானை என்பவர் சூரிய நல்லிப் பகுதியில் இருக்கிறார். பலாப் பழங்களைத் தின்றுவிட்டு சக்கைகளைப் போட்டு விடுவதால் அவருக்கு சக்கைக் கொம்பன் என்று பெயர் வந்தது.

 

இது தான் அரிசிக் கொம்பனின் பயோடேட்டா என்கிற முருகன், மூணாறுப் பகுதியில் அரிசிக்கொம்பனின் தொடர் விரட்டல், மிரட்டல், காரணமாக கேரள வனத்துறையினரால் மூணாற்றின் கீழ் பகுதிக்கு விரட்டப்பட்ட அரிசிக் கொம்பன் மேகலை வழியாக போடி மெட்டுக்குப் போய் விட்டார் என்றார். கடந்த மே 27 அன்று தேனி மாவட்டத்தின் கம்பம் நகரின் முக்கிய வீதிகளுக்குள் உலா வந்த அரிசிக் கொம்பனால் கம்பம் நகரே மிரண்டு போக, மக்கள் வெளியே வராமலிருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மிடுக்கும் மூர்க்கத் தன்மையும் எள்ளளவு குறையாத அரிசிக் கொம்பனை வனத்துறையினர். ஃபாலோ செய்தபோது, சண்முக நதி அணை அருகிலுள்ள காப்புக்காடு பகுதியில் பதுங்கியவர் அங்கு ஒரு வாரம் போக்கு காட்டியிருக்கிறார். இதனிடையே போதுமான உணவு கிடைக்காமல் பசி காரணமாக ஆவேசமாகக் காணப்பட்ட அரிசிக் கொம்பனை பிடிப்பதற்காக வனத்துறையினர் நெருங்க முடியாமல் தவித்திருக்கின்றனர்.

 

உத்தமபாளையம் அருகே சின்ன ஒவுலாபுரம் பெருமாள் மலை வனப் பகுதியில் ஜூன் 04 ஆம் தேதியன்று புகுந்த அரிசிக் கொம்பன் அங்குள்ளவர்களை அச்சுறுத்திக் கொண்டிருந்தபோது மேகலை புலிகள் வனக்காப்பக துணை இயக்குநர் ஆனந்த் தலைமையிலான வனத்துறையினர் அந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டமில்லாதவாறு தடை செய்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரை பாதுகாப்பில் ஈடுபடுத்தினார். இந்த நேரத்தில் கடும் பசியிலிருந்த அரிசிக் கொம்பன் உணவுக்காக சின்ன ஒவுலாபுரம் அடர்ந்த காட்டிலிருந்து, வெளியே வந்தபோது கால்நடை மருத்துவர் பிகாஷ் தலைமையிலான 5 மயக்கவியல் மருத்துவர்கள் நள்ளிரவு 12.45 மணியளவில் அரிசிக் கொம்பனை துணிச்சலாக நெருங்கி பிஸ்டல் மூலம் மயக்க ஊசி செலுத்தினர். 3.30 மணியளவில் அரிசிக் கொம்பன் மயக்க நிலையை அடைந்தார். அப்போது அவர் உணவு சரிவரக் கிடைக்காமல் சோர்ந்தும் போயிருந்தார். பின்னர் பளியர்கள் மூலம் சுயம்பு, சக்தி உள்ளிட்ட மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பாக வனத்துறை லாரியில் அரிசிக் கொம்பனை ஏற்றினர்.

 

பிடிபட்ட அரிசிக்கொம்பனை அங்கிருந்து தென் மாவட்டத்தின் களக்காடு-முண்டந்துறை புலிகள் சரணாலயப் பகுதியில் கொண்டு விடுவதற்காக பாதுகாப்பாக வனத்துறையினர் மயக்கவியல் மருத்துவர்களோடு கொண்டு வந்தனர். இந்நிலையில் உணவு எடுக்க முடியாமல் அரிசிக் கொம்பன் மூர்க்கமாகவும் ஆவேசமாகவும் காணப்பட அவருக்கு மயக்க ஊசி போடப்பட்டது. கம்பம் பகுதியிலிருந்து முண்டந்துறை வர 345 கி.மீ. தொலைவு கடக்க வேண்டும். திறந்த வெளி லாரியில் 104 டிகிரிக்கும் மேலாக வெப்பம் கக்குகிற வெயிலில் அரிசி கொம்பன் கொண்டுவரப்பட்டபோது, வெயிலின் தாக்கம் காரணமாக அவரது உடல் மிகவும் தளர்வு நிலைக்குப் போயிருக்கிறது. தண்ணீர், உணவு கிடைக்காமல் அரிசிக்கொம்பன் ஆவேசத்தில் இருந்திருக்கிறார். எனவே சூட்டைத் தணிக்க வழியில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தோட்டிலோவன்பட்டியில் வாகனம் நிறுத்தப்பட்டு, வரவழைக்கப்பட்ட தீயணைப்பு வாகனத்திலிருந்த தண்ணீரை அரிசிக்கொம்பன் மீது பீய்ச்சியடித்திருக்கிறார்கள்.

 

அதுசமயம் அரிசிக்கொம்பன் மூர்க்கமாக நகர, அதனருகில் செல்ல முடியாமல் பயந்தபடியே தண்ணீரைப் பாய்ச்சியிருக்கின்றனர். மயக்கம் தெளிந்த அவருக்கு பின்னர் மயக்க ஊசி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முண்டந்துறை செல்வதற்காக வாகனம் நெல்லை தாண்டி பத்தமடைப் பக்கம் வரும்போது அங்கேயும் அரிசிக்கொம்பனுக்கு மீண்டும் மயக்க ஊசி போட்டிருக்கிறார்கள். பின்னர் சேரன்மகாதேவி ரவுண்டானாவில் சூட்டைத் தணிக்க அரிசிக்கொம்பன் மீது தண்ணீர் பீய்ச்சியடிக்கப்பட்டு, தொடர்ந்து அம்பை பக்கம் வருகிறபோது மலைவாழ் மக்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்புகள் கிளம்பின. அரிசிக் கொம்பன் இந்தப் பகுதியின் வனத்தில் விடப்படுகிறார் என்கிற உறுதியான தகவலை வெளிப்படுத்தினால் மக்களின் எதிர்ப்பு கிளம்பும் என்பதற்காக, ஏரியாவைக் குறிப்பிடாமல் மணிமுத்தாறு மலையின் கோதையாறு பகுதியில் அரிசிக்கொம்பன் விடப்படுகிறார் என்றும், அம்பையின் முண்டந்துறை புலிகள் சரணாலயம் என்றும், களக்காடு புலிகள் காப்பகம் என்று பல தகவல்கள் பரப்பப்பட்டன.

 

ஆனாலும் உறுதியாக அம்பைப் பக்கமுள்ள மணிமுத்தாறு வழியாக மலையிலுள்ள குளுகுளு தேயிலை எஸ்டேட் பகுதியான மாஞ்சோலை, நாலுமுக்கு, காக்காச்சி, குதிரை வெட்டி கடந்து கோதையாறு வனத்தையொட்டிய முத்துக்குழி வயல் என்று சொல்லப்பட்டதால், இந்தப் பகுதியில் மூர்க்கமான அரிசிக்கொம்பனை விடக்கூடாது. மேற்படி எஸ்டேட்களில் 4000 தேயிலைத் தோட்டக் குடும்பங்கள் வசிக்கின்றனர். கோதையாறில் விடப்படும் அரிசிக் கொம்பன் அங்கிருந்து தொழிலாளர்கள் வாழுகிற எஸ்டேட் பகுதிகளில் நுழைந்து குடியிருப்புகளை துவம்சம் செய்யும். தொழிலாள மக்களின் உயிருக்கு உத்தரவாதமில்லை. எனவே இங்கே விடக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்து மணிமுத்தாறு வாசிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் பீர்மஸ்தான் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாதுகாப்பின் பொருட்டு அங்கு பணியிலிருந்த அம்பை டி.எஸ்.பி. சதிஷ்குமார் தலைமையிலான போலீசார் அவர்களைக் கைது செய்தனர். அதன் பின் மாலை 5.30 மணியளவில் மாஞ்சோலைப் பகுதி செல்வதற்காக அரிசிக் கொம்பன் வாகனம் கிளம்பியது.

 

Kerala, Tamil Nadu rice komban issue

 

இங்கே நிலைமை இப்படியிருக்க கோதையாற்றின் முத்துக்குழி வயல் பகுதி தலைகீழான செங்குத்தான அடர்வனப் பகுதி. அங்கே அரிசிக்கொம்பனை எப்படி கொண்டு செல்ல முடியும். அந்தப் பகுதியில் விட்டால், அரிசிக் கொம்பன் அங்கிருந்து எந்நேரம் எங்கள் பகுதிக்கு வந்துவிடுமோ என்று பயத்திலேயே நாங்கள் இருக்கிறோம். எங்களின் காட்டு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அங்கு செல்லவே எங்களுக்கு அச்சம் எனவே அங்கே விடவேண்டாம் என்று பாபநாசம் மலையிலுள்ள காணியின மக்கள் திரண்டு வந்து பாபநாசம் வனச்சோதனைச் சாவடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

இப்படி இரண்டு பக்கமும் மக்களின் எதிர்ப்பால் பதற்றம் ஏற்பட்ட நிலையில் மாஞ்சோலை கொண்டு செல்லப்பட்ட அரிசிக்கொம்பனின் வாகனத்தை அதற்கு மேலே உள்ள காக்காச்சி சாலைப் பிரிவில் இரவில் நிறுத்தியவர்கள், லைட் வெளிச்சம் அரிசிக்கொம்பனை ஆவேசமடையச் செய்யலாம் என்பதால் அந்தப் பகுதியின் மின் இணைப்புகள் அனைத்தையும் துண்டிக்கச் செய்தனர். இரவில் அங்கிருந்து மணிமுத்தாறுக்கு தரையிறங்கும் அரசுப் பேருந்தையும், காலையில் மலைக்குப் புறப்படும் பேருந்தையும் வரவேண்டாம் என்று தடை போட்டுள்ளனராம்.

 

Kerala, Tamil Nadu rice komban issue

 

தமிழ்நாடா, கேரளாவா என அரிசிக் கொம்பனை எங்கே விடுவது என்கிற விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால், தற்போதைய நிலவரப்படி அரிசிக் கொம்பனின் வாகனம் கோதையாறு வனப்பகுதியின் தடை செய்யப்பட்ட பகுதியில் நிறுத்தப்பட்டு அவருக்காக வரவழைக்கப்பட்ட ஒரு மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருகிறதாம்.

 

இரண்டு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மயக்க ஊசி செலுத்தப்பட்டு மிகவும் தளர்ந்தும், நான்கு நாட்களாக உணவு எடுக்க முடியாமலும், இரண்டு நாட்களாக தண்ணீர் அருந்தாமலும் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு, ஒரு காலின் பாதத்தில் ஒட்டை விழுந்த நிலையில் பலகீனமான நிலையிலிருக்கிறாராம் அரிசிக் கொம்பன்.