சினிமா பாடல்களை அப்படியே ரீ-கிரியேசன் செய்து இணையத்தில் உலாவவிட்டு பிரபலமடைந்து வருகிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்; பலர் இதனை கொண்டாட்டமாகவே செய்தாலும் சிலருக்கோ அது தனது வலியினை மறைப்பதற்கான ஒன்றாக உள்ளதாகவும் இருக்கிறது என்கின்றனர் சிலர். அந்த வகையில் தன்னுடைய அனுபவங்கள் பலவற்றையும் நம்முடைய நேர்காணலின் மூலம் டான்ஸர் ஷர்மிளா நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.
ஏதாவது ஒன்று சாதிக்க வேண்டும் என்கிற எண்ணம் சிறுவயதிலிருந்தே எனக்கு இருந்தது. சென்னை வந்த பிறகு ஆக்டிங், டான்ஸ் என்று பலவற்றிலும் ஈடுபட்டு வருகிறேன். பள்ளிக்காலங்களில் பல்வேறு போட்டிகளில் நான் கலந்துகொள்வேன். இதுதான் செய்வேன் என்று எப்போதும் என்னை நான் சுருக்கிக்கொண்டது கிடையாது. அனைத்து விதமான கலைகளிலும் என்னால் என்னை ஈடுபடுத்திக்கொள்ள முடியும். சமூக வலைதளங்களால் இன்று வாய்ப்புகள் கிடைப்பது எளிமையாகி இருக்கிறது.
அம்மா, அப்பாவுக்கு இடையில் பிரச்சனைகள் இருந்ததால் சிறுவயது முதல் நான் ஹாஸ்டலில் இருந்தேன். தலைமையாசிரியரின் உதவியால் தான் என்னுடைய பள்ளிப்படிப்பை நான் முடித்தேன். அடுத்தகட்ட படிப்புக்கு கோர்ட் உத்தரவு மூலம் என்னுடைய தந்தை மாதாமாதம் கொடுத்த ஜீவனாம்ச பணம் உதவியது. அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக வீடியோக்கள் செய்ய ஆரம்பித்து சென்னை வந்தேன். எனக்கு கிடைத்த ஆயுதம் போன் தான். இரவெல்லாம் கண்விழித்து வீடியோக்கள் செய்வேன்.
நம்பிக்கையும் உழைப்பும் தான் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான விஷயங்கள். கொரோனா காலத்தில் என்னுடைய திறமைகளைப் பார்த்து எனக்குக் கிடைத்த வாய்ப்பு தான் லெட்ஸ் டான்ஸ் 360. ஒவ்வொருவருக்கும் என்னுடைய ஒவ்வொரு பர்ஃபாமன்ஸ் பிடிக்கும். சிலருக்கு என்னுடைய நடிப்பும் சிலருக்கு என்னுடைய நடனமும் பிடிக்கும் என்று சொல்வார்கள். என்னுடைய டீமிடமிருந்து எனக்கு எப்போதும் நல்ல சப்போர்ட் கிடைக்கும். என்னை அவர்கள் நன்றாக ஊக்குவிப்பார்கள்.
பறை இசை வாசிக்கும்போது எமோஷனலாக இருக்கும். நெகட்டிவ் கமெண்டுகள் வரும்போது அதைப் புறந்தள்ள வேண்டும் என்று தோன்றும். ஆனால் அது கடினம். பள்ளியில் இருக்கும்போது மற்ற மாணவர்கள் அவர்களுடைய பெற்றோருடன் பேசுவதைப் பார்க்கும்போது எனக்கு ஏக்கமாக இருக்கும். ஆனால், எனக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தால் தான் என்னால் நிறைய சாதிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். எனக்கு இரண்டு நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தான் எனக்கு எப்போதும் ஆதரவு. என்னுடைய வீடியோக்கள் பற்றி என் பெற்றோரிடம் சிலர் கூறியுள்ளனர். ஆனால் அவர்களுக்கு யூடியூப் குறித்து தெரியாது.
என்னுடைய வீடியோக்களைப் பார்த்துவிட்டு என்னுடைய ஆசிரியர்கள் பாராட்டுவது பெருமையாக இருக்கும். என்னுடைய வீடியோக்களுக்காக அதிகமான முன்தயாரிப்புகளில் நான் எப்போதும் ஈடுபடுவேன். யூடியூபில் சில்வர் பட்டன் கிடைத்த நாள் மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. என்னைப் போன்று இந்தத் துறைக்குள் வரவேண்டும் என்று நினைப்பவர்கள் பாலா சாரின் 'இவன்தான் பாலா' என்கிற புத்தகத்தைப் படிக்க வேண்டும்.