"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.!” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்
"எஸ்.பி.பிக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்!" - பகிராததை பகிரும் கவிப்பேரரசு வைரமுத்து
கடந்த இரண்டு பகுதிகளில் கவிப்பேரரசு பகிர்ந்த நினைவுகளின் தொடர்ச்சியாக எஸ்.பி.பியின் பண்புகள் குறித்துப் பகிர்கிறார்...
"அவர் இரக்கமுள்ள பாடகர். ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடலைப் பாடி முடித்ததுமே, ஊதியத்துக்காகக் காத்திருக்காமல் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். இதைப் பார்த்த நான், ஒருமுறை அவரிடமே, "ஊதியத்தில் நீங்கள் நெகிழ்வாக நடந்துகொள்வீர்களா? கெடுபிடி யாக நடந்துகொள்வீர்களா?' என்று கேட்டேன். எஸ்.பி.பி. சொன்னார், "பணம் வேண் டும்தான். ஆனால் ஒரு கலைஞன் பணம் மட்டுமே தேவை என்று, ஒரு வடநாட்டுப் பாடகர் போல் நடந்துகொள்ளக் கூடாது'' என்றார். "வடநாட்டுப் பாடகர் யார்?' என்றேன். "வாய் தவறிச் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள்'' என்றார். நான் விடவில்லை. அவர் பாடி முடித்துக் கிளம்பிய போது, அவர் காரில் நான் ஏறி அமர்ந்துகொண்டு, "அந்த வடநாட்டுப் பாடகர் விவகாரம் பற்றி நீங்கள் சொன்னால்தான் காரை விட்டு இறங்குவேன்" என்றேன்.
அதன்பின் இறங்கிவந்தவர், அந்தப் பாடகர் ஒரு பாடலைப் பாடப் போனால், ஒலிப்பதிவுக் கூடக் கண்ணாடி வழியே, தன் உதவியாளரைப் பார்ப்பார். அவர், கட்டைவிரலை உயர்த்திக் காட்டினால் பணம் வந்துவிட்டது என்று அர்த்தம். உடனே பாடலைப் பாடிக்கொடுப்பார். கட்டை விரலை அவர் காட்டாவிட்டால் பணக்கட்டு வரவில்லை என்று அர்த்தம். உடனே, தொண்டை சரியில்லை என்று அவர் கிளம்பிவிடுவார்'' என அந்த ரகசியத்தைச் சொன்ன எஸ்.பி.பி, அதன் பின் சொன்னதுதான் உச்சம். "ஒரு ரெக்கார்டிங்கின் போது உதவியாளரை அந்தப் பாடகர் பார்த்தார். உதவியாளர் கட்டைவிரலை உயர்த்தவில்லை. அதனால் தொண்டை சரியில்லை என்று அவர் காரில் ஏறிக் கிளம்பி விட்டாராம். காரில் போகும் போது அவரது உதவியாளர், நீங்கள் ஏன் பாடவில்லை? என்று கேட்க, நீ கட்டை விரலைக் காட்ட வில்லையே என்றா ராம் பாடகர். அதற்கு அந்த உதவியாளர் சொல்லியிருக்கிறார்… சார்! எப்படிக் கட்டை விரலைக் காட்ட முடியும். இது நமது சொந்தப் படம்.'' நாங்கள் அப்போது சிரித்த சிரிப்பில் ஸ்டுடியோ வேப்பமரத்திலிருந்து பறவைகளும் பறந்துவிட்டன.
அவர் என்னிடம் நிறையப் பகிர்ந்திருக்கிறார். அவற்றில், நெஞ்சில் நிலை நிறுத்தக்கூடிய செய்திகளும் உண்டு. ஒருமுறை கே.வி.மகாதேவனுடன் எஸ்.பி.பி. காரில் போய்க்கொண்டிருந்தாராம். அப்போது காரில் ஒரு பாடல் ஒலிக்க, "யார் பாட்டுப்பா இது? ரொம்ப நல்லா இருக்கே"ன்னு எஸ்.பி.பி.யிடம் மகா தேவன் கேட்டிருக்கிறார். இதைக்கேட்டுத் திகைத்துப் போன அவர், "மாமா, உங்களுக்கு நினைவு இல்லையா? இது நீங்கள் போட்ட பாட்டுதான். எப்படி இதை மறந்தீங்க மாமா''ன்னு எஸ்.பி.பி.கேட்க, மகாதேவனோ, "இப்படி மறக்குறதுதான் நல்லதுப்பா. ஒரு பாட்டை இசையமைத்துப் பாடி முடிச்சதும், அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒதுங்கிடணும். அதுதான் கர்வத்திலிருந்து வெளியேறும் வழி. இல்லைன்னா, கர்வம் நம் தலையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, நம்மைப் படுத்த ஆரம்பிச்சிடும்''னு சொல்லியிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன எஸ்.பி.பி., "கே.வி.மகா தேவன் சொன்ன இந்தக் கருத்தைத்தான் நான் தலையில் ஏற்றி வச்சிருக்கேன். அதனால்தான் எனக்குத் தலைக்கனம் வரலை''ன்னு சொன்னார். சொன்ன மாதிரியே, கடைசி வரை எளிமையாக வாழ்ந்துகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்.
அதேபோல் ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு எஸ்.பி.பி.க்கு போன் வந்திருக்கிறது. எதிர்முனையில் அவர் அதிகம் மதிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன். உடனே பதறிப்போய் அவர் என்னவோ ஏதோ என்று திகைக்க, எம்.எஸ்.வி.யோ., "ராஜா! எப்படிடா இந்தப் பாடலை இப்படிப் பாடினே...? கேட்கக் கேட்க அசந்து போறேண்டா. எப்படிடா உனக்கு இப்படி ஒரு திறமை? கொன்னுட்டடா"ன்னு... பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். அப்படி நள்ளிரவில் எம்.எஸ்.வி அழைத்துப் பாராட்டிய அந்தப் பாடல்... 'நிழல் நிஜமாகிறது' என்ற படத்தில் இடம்பெற்ற 'கம்பன் ஏமாந்தான்' பாடல். அந்த மகிழ்ச்சியை அந்த நள்ளிரவிலேயே கொண்டாடியிருக்கிறார் எஸ்.பி.பி."