Skip to main content

ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தவே அதிக நேரம்!!! சாதித்தாரா எடப்பாடி? காத்திருக்கும் சவால்கள்!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020
ops eps

 

முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி அ.தி.மு.க.வில் நடந்துவந்த அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக பானங்களுடன் தொடர்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் போட்டியில் நானும் இருக்கிறேன் என கோதாவில் குதித்திருந்த ஓ.பி.எஸ்., சமீபத்தில் நடந்த கட்சியின் செயற்குழுவில் காரசாரமாக தனது உணர்வுகளை கொட்டியதுடன், வழிகாட்டுக் குழுவை அமையுங்கள்; முதல்வர் வேட்பாளரை அப்புறம் முடிவு செய்துகொள்ளலாம் என போர்க்கொடி உயர்த்தியிருந்தார். இதனை எதிர்த்து எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் மல்லுக்கட்ட, மோதல்கள் வெடித்தன.

 


இரு தரப்பையும் சமாதானப்படுத்த எடப்பாடியையும் பன்னீரையும் சந்தித்து கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட சீனியர்கள் போராடினார்கள். சென்னையிலிருந்து தேனிக்கு ஓ.பி.எஸ். புறப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் அவரை சந்தித்த சீனியர்கள், ""வழிகாட்டு குழு அமைக்கணும்ங்கிற உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். அதேசமயம், நான்காண்டு காலம் முதல்வராக இருக்கும் அவர் (எடப்பாடி), தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆளானப்பட்ட தி.மு.க.வில் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின்தான் தி.மு.க.வின் தலைவர்ங்கிறதும் தி.மு.க. ஜெயித்தால் அவர்தான் முதல்வர்ங்கிறதும் எல்லோருக்குமே தெரியும். அப்படியிருந்தும் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்கிற ரீதியில்தானே தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சொல்கின்றன. அதனால், நம் கட்சியிலும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது தானே சரியாக இருக்க முடியும்? அதை தவிர்த்துவிட்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல்வரை தேர்வு செய்யலாம் என சொன்னால், அது கட்சிக்குத்தானே பலவீனம். அதனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிப்பதற்கு சம்மதியுங்கள்'' என்று வாதிட்டனர்.

 

ops

 

அதற்கு ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்., ""என்னை சமாதானப்படுத்தி ஏற்க வைத்தது போல வழிகாட்டு குழு அமைக்க அவரிடம் சம்மதம் வாங்குங்கள். அதற்குள் ஊருக்குச் சென்று வருகிறேன்'' என சொல்லிவிட்டு மிக இயல்பாகவே தேனிக்கு விரைந்தார். போகும் போதே, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

இதற்கிடையே, ஓ.பி.எஸ். சமாதானமான விசயத்தை எடப்பாடியிடம் விவரித்த கே.பி.முனு சாமி, வைத்தியலிங்கம், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர், ஓ.பி.எஸ்.சின் கோரிக்கையான வழிகாட்டு குழு அமைப்பதற்கு எடப்பாடியை சம்மதிக்க வைக்க கடும் பிரயத்தனம் செய்தனர். அப்போது எடப்பாடி, ""குழு அமைக்க சம்மதிக் கிறேன். ஆனால், குழுவில் அவர் சார்பில் யார் யாரை சிபாரிசு செய்கிறார் என்கிற முடிவைப் பொருத்து அதன் பிறகு பேசுவோம்'' என்றிருக்கிறார் எடப்பாடி.

 

dddd

 

இதனையடுத்து திங்கட்கிழமை சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ். அவரை சந்தித்த சீனியர்கள் நடந்ததை விவரித்திருக்கிறார்கள். டென்ஷனான பன்னீர், ""எனது சாய்ஸ்சை அவர் கேட்கும் போது அவரது சாய்ஸ் யார் என்பதை நானும் கேட்கலாம்தானே'' என்று சொல்ல, வழிகாட்டு குழுவில் இடம் பெறுபவர்களை மையப்படுத்தி சர்ச்சைகள் வெடித்தன. இதனால்தான் முடிவுகளை தீர்மானிப்பதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுதாண்டி, புதன் அதிகாலை வரை இழுபறி நீடித்தது.

 

இதுகுறித்து கட்சியின் சீனியர் களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, ""வழிகாட்டு குழுவுக்கு ஓ.பி.எஸ். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மோகன் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர். அதேபோல, எடப்பாடி தரப்பிலிருந்து, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகிய 6 பேரை வழிமொழிந் திருந்தார். இருவரின் சிபாரிசுகளும் ஓ.பி.எஸ்.சிடமும், இ.பி.எஸ்.சிடமும் மாற்றிக் கொள்ளப்பட்டன.

 

eps

 

ஓ.பி.எஸ்.சின் சிபாரிசைப் பார்த்த எடப்பாடி, பண்ருட்டி ராமச்சந்திரன், நத்தம் விஸ்வநாதன் இருவரின் பெயரையும் அடித்தார். பண்ருட்டியார் இருப்பது தமக்கு பெரிய தலைவலி என நினைத்து அவரை கட் பண்ணுவதில் சீரியஸ் காட்டினார் எடப்பாடி. அதேபோல, வழிகாட்டுக் குழுவில் திண்டுக்கல் சீனிவாசன் அவசியம் இருக்க வேண்டும். அதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் தேவையில்லை. ஒரே மாவட்டத்தில் இரண்டு பேருக்கு வாய்ப்புத் தர முடியாது. இவர்கள் இருவருக்குப் பதிலாக வேறு நபர்களை சொல்லச் சொல்லுங்கள் என கடுமைக் காட்டினார் எடப்பாடி.

 

இதனை வைத்து ஓ.பி.எஸ்.சிடம் சீனியர்கள் விவாதிக்க, ""ஒரே மாவட்டத்தில் இரண்டு பேர் இருக்கக் கூடாதுன்னா, சீனிவாசனை கட் பண்னுங்கள்; நத்தம் இருக்கட்டும். அதேபோல, வேலுமணியை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக செங்கோட்டையனையோ, தம்பிதுரையையோ (இருவருமே எடப்பாடிக்கு எதிரானவர்கள்) போடுங்கள். அதேசமயம் பன்ருட்டியாரை மாற்ற முடியாது'' என கச்சைக் கட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

 

ddd

 

இதனை எடப்பாடியிடம் சீனியர்கள் விவரிக்க, ஓ.பி.எஸ்.சின் வாதத்தை எடப்பாடி ஏற்கவில்லை. மேலும், ""கொங்கு வேளாளர்களில் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என நான் முடிவு செய்து கொள்கிறேன். அதனால், தங்கமணி, வேலுமணி மட்டுமல்ல எனது பட்டியலில் உள்ளவர்களை யாரையும் மாற்ற முடியாது. சி.வி.சண்முகம் இருக்கும்போது பன்ருட்டியாரை கொண்டு வருவது சரி கிடையாது. அவரது பட்டியலை மாற்றச் சொல்லுங்கள்'' என பிடிவாதம் காட்டினார் எடப்பாடி. வழிகாட்டு குழுவில் பண்ருட்டியார் வந்து விடக்கூடாது என்பதற்காகவே தனது பட்டியலில் சி.வி.சண்முகத்தை எடப்பாடி இடம்பெறச் செய்தார். அதுமட்டுமல்லாமல், பண்ருட்டியாரை நீக்கச் சொல்லி சி.வி.சண்முகத்தையே ஓ.பி.எஸ்.சிடம் விவாதிக்க அனுப்பியும் வைத்தார் எடப்பாடி.

 

இப்படி இரு தரப்பிலும் மல்லுக்கட்டு அதிகரித்ததால் இழுபறியும் நீடித்தது. இதனால் ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தவே அதிக நேரம் எடுத்துக்கொண்டனர் சீனியர்கள். ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ். இறங்கிவர, பண்ருட்டி மற்றும் நத்தத்திற்கு பதிலாக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனையும், எம்.எல்.ஏ. மாணிக்கத்தையும் தனது பட்டியலில் இணைத்தார். இரு தரப்பிலும் பட்டியல் ஓ.கே. ஆனது. இதனையடுத்து, வழிகாட்டு குழுவுக்கு என்னென்ன அதிகாரம் என ஓ.பி.எஸ். கேட்க, தனித்து அக்குழுவுக்கென அதிகாரம் தேவையில்லையே என ஆரம்பித்து அது குறித்த விவாதங்கள் 2 மணி நேரம் நடந்தது. ஒரு வழியாக இரு தரப்பிலும் விட்டுக்கொடுத்து சமாதானமானார்கள்.

 

ddd

 

வழிகாட்டுக்குழுவில் இடம்பெறாத சீனியர்களும் முக்கிய நிர்வாகிகளும் அதிருப்தியடைந்திருப்பதால், அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், இனி அடுத்தடுத்து அமைக்கப்பட விருக்கும் மற்ற குழுக்களில் வாய்ப்பளிக்கலாம். யாரையும் புறக்கணிக்கிற எண்ணமில்லை என்று அதிருப்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது''’என்று இழுபறியின் பின்னணிகளை விவரித்தனர்.

 

கடந்த 10 நாட்களாக நடந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்று ஓ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சின் கோரிக்கையான வழிகாட்டுகுழுவை எடப்பாடியும் அறிவித்து முடித்தனர். அறிவிக்கப்பட்ட பட்டியலில், அமைச்சர்களை எடப்பாடியும், சமூக பிரதிநிதித்துவம் சார்ந்து ஓ.பி.எஸ்.சும் தங்களது ஆட்களை இடம்பெற செய்திருக்கிறார்கள்.

 

eee

 

அறிவிக்கப்பட்ட முடிவு குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியிடம் கேட்டபோது, ""கட்சிக்கு தேவைப்பட்ட முடிவுகளை உரிய நேரத்தில் எடுத்து சுமுகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் கட்சியின் நலன்சார்ந்து எடுக்கப் பட்டவை. கட்சியை அமைப்பு ரீதியாக ஆரோக்கியமாக செயல்பட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் காலங்களிலும், தேவைப்படும் நேரங்களிலும் இந்த குழுவை பயன்படுத்திக் கொள்வோம்'' என்றார்.

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, ""கலைஞர், ஜெயலலிதா போல ஒரு லீடராக வர வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் நோக்கம். அந்த நோக்கத்தில் படிப்படியாக முன்னேறி தற்போது முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கச் செய்ததில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால், இனிதான் அவருக்கு பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர்கள் தேர்விலும் அவருக்கு நிறைய சிக்கல் உண்டு. எதிர்ப்பு வாக்குகள் உள்ள கட்சிகளை சேர்ப்பதினால் அ.தி.மு.க.வின் அடிப்படை பலம் தகர்க்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் கூட்டணி கட்சிகளை தேர்வு செய்வது அவருக்கு பெரிய சிக்கல். அடுத்து, ஓ.பி.எஸ்.சின் தலையீடுகளையும், வழிகாட்டு குழுவின் முடிவுகளையும் மீறி தன்னிச்சையாக வேட்பாளர்கள் தேர்வில் அவர் சாதித்துவிட முடியாது. இந்த தடைகளைத் தாண்டி கட்சியை வெற்றிபெற வைத்து ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகப்பெரிய சவால்'' என்கிறார் அழுத்தமாக.