Skip to main content

50 கோடி, 30 கோடி, 20 கோடி!!! அ.தி.மு.க. கமிஷனில் பங்கு கேட்கும் பா.ஜ.க.!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020
ddd


""மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டில் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளை பெறும் ஒப்பந்ததாரர்களிடமிருந்து எங்கள் கட்சிக்கு 5 சதவித கமிஷனை தரவேண்டும்'' என அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவிட்டுள்ளது மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு. தங்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகளிடம், ""நமது கட்சியில் உள்ள தகுதியானவர்களை ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய சொல்லுங்கள்'' எனவும் கூறியுள்ளது.


திடீரென பா.ஜ.க. இதில் கவனம் செலுத்த காரணம் என்னவென பா.ஜ.க. தரப்பில் விசாரித்தபோது, ""கடந்த 9 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க. தமிழகத்தில் எப்படி பலமாகவுள்ளது. பல ஆசைகள் காட்டியும் மா.செக்கள், எம்.எல்.ஏ, எம்.பிக்கள் மட்டுமல்ல அந்த கட்சியின் மாவட்ட பிரமுகர்கள், முன்னாள்கள்கூட ஏன் நம் கட்சிக்கு வர மறுக்கிறார்கள். அதற்கான காரணங்களை சொல்லுங்கள் என சில மாதங்களுக்கு முன்பு எங்கள் கட்சியின் ஆலோசகர்களிடம் கருத்துக்கேட்டது டெல்லியில் உள்ள தலைமை. அதேபோல் மத்திய உளவுத்துறையான ஐ.பியிடமும் கருத்துகேட்டது. இருதரப்பும் ஒரே விஷயத்தை கூறியிருந்தது.

 

அது, தமிழ்நாட்டை தி.மு.க., அ.தி.மு.க. என மாறி, மாறி ஆட்சி செய்கின்றனர். ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கட்சியின் தலைமை மட்டுமல்ல, கீழ்மட்ட நிர்வாகிகள் வரை சம்பாதிக்க வைக்கின்றனர். மாநில அரசின் பணி என்றால் வேலை நடக்கும் தொகுதி எம்.எல்.ஏவுக்கும், மத்திய அரசின் பணி என்றால் அந்த தொகுதி எம்.பி.க்கும், ஊரக வளர்ச்சித்துறை பணி என்றால் சேர்மன், கவுன்சிலர், ஊராட்சி மன்ற தலைவருக்கு கமிஷன் தரப்படும். அதேபோல் திட்டப் பணியின் வேலையை கட்சியின் ஒப்பந்த தாரர்களுக்கு முன்னுரிமை. கட்சி ஒப்பந்ததாரர் இல்லையென்றால் கட்சி விசுவாசிகளாக உள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும்தான் தருவார்கள்.


அ.தி.மு.க., தி.மு.க. எது ஆட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் உள்ளவர்களுக்கு திட்டப்பணிகளில் 20 முதல் 30 சதவிதம் வரை தந்துவிடுவார்கள், இது எழுதப்படாத விதி. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை. 50 கோடி, 100 கோடி என பெரிய பெரிய ஒப்பந்தங்களை எடுப்பவர்கள் தி.மு.க., அ.தி.மு.க.வில் எம்.எல்.ஏ, எம்.பிக்களாக உள்ளார்கள். இப்படி ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம்பாதிக்கும் இவர்கள் கட்சி தலைமை வைக்கும் செலவுகளை தாராளமாக செய்கிறார்கள். ஒவ்வொரு கட்சியும் கட்சிக்கு தொடர்பில்லாத பெரிய பெரிய ஒப்பந்ததாரர்களை பினாமிகளாக உருவாக்கி வைத்துள்ளன. அந்த பெரிய ஒப்பந்ததாரர்கள் எல்லா கட்சிக்கும் நண்பர்களாக இருப்பார்கள். என்ன கேட்டாலும் செய்து தருவார்கள் என விலாவாரியாக அதில் இருந்தது. அதேபோல் தி.மு.க., அ.தி.மு.க.வில் உள்ள ஒப்பந்ததாரர்கள் யார், யார், பினாமி ஒப்பந்த நிறுவனங்கள் எவை, எம்.பி, எம்.எல்.ஏ, அமைச்சர்களாக இருந்துகொண்டு ஒப்பந்த தாரர்களாக உள்ளவர்கள் யார், யார், அவர்களின் சொத்து மதிப்பு போன்றவற்றை துல்லியமாக பட்டியல் தந்தது.

 

இது ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் சந்தோஷ்ஜீ பார்வைக்கு சென்றது. அங்கு நடத்தப்பட்ட ஆலோசனையில், தமிழகத்தில் பா.ஜ.க.வை வளர்க்க தி.மு.க., அ.தி.மு.க. பாலிஸியை நாமும் கையில் எடுப்போம் என முடிவு செய்து கட்சியின் விதிமுறைகள் மாற்றம் செய்யப்பட்டது. பா.ஜ.க.வுக்கு மாற்று கட்சியில் இருந்து யார் வந்தாலும் முன்பெல்லாம், அவர்கள் கட்சியில் இணைந்து 3 ஆண்டுகள் கழித்து தான் பதவி தரப்படும். இப்போது அவர்கள் இணையும் முன்பே பதவி முடிவு செய்யப்பட்டு, கட்சியில் இணைந்தவுடனே பதவியை அறிவிக்கும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் கட்சியில் உள்ள நிர்வாகிகளை சம்பாதிக்க வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

இன்று எங்களால் சம்பாதிக்கும் கார்ப்பரேட் தொழிலதிபர்கள் முதல் சின்ன தொழிலதிபர்கள் வரை தேர்தல் வந்தால் எங்களுக்கு நிதி தருகிறார்கள். ஆனாலும், நினைத்த நேரத்தில் கிடைப்பதில்லை. கட்சியினரை சம்பாதிக்க வைத்தால் தேவையான நேரத்தில் கட்சிக்கு செலவு செய்வார்கள். ஒரு ரூபாய் செலவு செய்தால் 10 ரூபாய் சம்பாதிப்பது தானே அரசியல். பா.ஜ.க.வுக்கு போனாலும் சம்பாதிக்க முடியும் என தெரிந்தால் மற்றவர்களையும் கட்சியை நோக்கி அது இழுக்கும். இது கட்சிக்கு பலமாகயிருக்கும். இன்னும் 10 வருடத்தில் தமிழகத்தில் பா.ஜ.க.வை பலமாக்கி, ஆட்சிக் கட்டிலில் உட்கார வேண்டும் என திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதுக்குறித்து நம்மிடம் பேசிய தமிழக பா.ஜ.க. முக்கிய பிரமுகர் ஒருவர், ""பாரதப் பிரதமர் வீடு வழங்கும் திட்டம், கழிப்பறை கட்டும் திட்டம், பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டம், அந்தியோதயா திட்டம் என 15 திட்டங்கள் மத்திய ஊரக வளர்ச்சித்துறையின் நிதியால் செயல்படுகின்றன. அதேபோல் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் சாலை போடுவது, நேரு யுவகேந்திரா மூலம் இளைஞர் களுக்கான டெவலப்மெண்ட் திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்களில் அந்தந்த தொகுதி எம்.பிக்கள் 10 சதவிதம் கமிஷன் பெற்றுவந்தனர். அவர்கள் கமிஷன் பெறுவது ஒருபுறம். அதே எம்.பி.க்கள் தாங்கள் கைகாட்டும் ஒப்பந்ததாரருக்கே டெண்டரை வழங்க வேண்டும் அல்லது தனது பினாமி நிறுவனத்தின் பெயரில் ஒப்பந்தத்தை எடுத்து சம்பாதிக்கின்றனர். இதை அறிந்த எங்கள் கட்சி தலைமை, மாவட்டத்துக்கு 100 கோடி ரூபாய் மத்திய திட்டப் பணிக்காக நிதி வருகிறது என்றால் மாநிலத்தை ஆளும் கட்சிக்கு 50 கோடி, பிரதான எதிர்கட்சிக்கு 30 கோடி, பா.ஜ.க.வுக்கு 20 கோடி என பிரித்து வழங்க வேண்டும் எனச் சொல்லிவிட்டது. தி.மு.க., அ.தி.மு.க. போல் எங்களிடம் ஒப்பந்ததாரர் இல்லை. அதனால் கட்சி நிர்வாகிகளை ஒப்பந்ததாரராக பதிவு செய்ய சொல்லியுள்ளோம். அவர்கள் பெயரில் ஒப்பந்தம் வாங்கி வெளி ஒப்பந்ததாரர்களுக்கு சப் கான்ட்ராக்டாக தரச்சொல்லியுள்ளது.

 

அதேபோல் அரசு தொடர்பு துறை என எங்கள் கட்சியில் ஒரு அணி உள்ளது. இந்த அணி இங்கு செயல்படாமல் இருந்தது, அந்த அணிக்கு இப்போது நிர்வாகிகளை நியமனம் செய்து, கூட்டங்கள் நடத்த உத்தரவிட்டுள்ளார் மாநில தலைவர் முருகன். மத்திய அரசு அறிவித்துள்ள திட்டங்களை பா.ஜ.க.வை சேர்ந்தவர்களுக்கு வாங்கி தருவது, கட்சியினர் கைகாட்டும் மக்களுக்கு அதை பெற்று தருவது போன்ற பணிகளை செய்யச் சொல்லப் பட்டுள்ளது.

 

உதாரணமாக பாரத பிரமரின் வீடு பா.ஜ.க.வினர் சொல்லும் நபருக்கு அதிகாரிகள் தரவில்லையென்றால், அந்த பட்டியலை கட்சியின் மாவட்ட தலைவரிடம் தாருங்கள். அவர் மாநில தலைமையிடம் தந்து சென்னையில் இருந்தே அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம், மீறி முரண்டு பிடிக்கும் அதிகாரியை நாங்கள் கவனிக்கும் விதத்தில் கவனிப்போம் எனச் சொல்லப்பட்டுள்ளது'' என்றார்.

 

கடந்த காலங்களில் மத்திய அரசின் திட்டங்களில் டெண்டர் எடுக்கும் ஒப்பந்ததாரர், தொகுதி எம்.பிக்கு 10 சதவிதம், மாநிலத்தில் யார் ஆளும்கட்சியாக உள்ளார்களோ அந்த கட்சியின் மா.செவுக்கு 5 சதவிதம், அதிகாரிகளுக்கு 5 சதவிதம் என பங்கு வழங்கினார். மத்திய அரசு நிதியில் செயல்படும் திட்டத்துக்கு எதுக்கு மாநில ஆளுங்கட்சியான அ.தி.மு.க மா.செவுக்கு 5 சதவிதம் பங்கு வழங்க வேண்டும் என கேள்வி எழுப்பிய பா.ஜ.க. ஆலோசகர்கள், இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். மத்தியில் நாம் ஆட்சியில் உள்ளோம், நம் கட்சி மாவட்ட தலைவருக்குத்தான் வழங்க வேண்டும், காங்கிரஸ் இப்படி பங்கு வாங்காததால்தான் தமிழகத்தில் அது வளரவேயில்லை என்றார்களாம். எனவே அ.தி.மு.க கமிஷனில் பங்கு வாங்குதவற்கான வேலைகளில் படுதீவிரம் காட்டுகிறது பா.ஜ.க.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.