Skip to main content

இத்தனை வயதில் தேர்வு எழுத முடியுமா? மார்க் எவ்ளோன்னு மட்டும் சொல்... குரூப் 4 தேர்வு மோசடி அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 30/01/2020 | Edited on 30/01/2020

டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு மற்றும் குரூப் 4 டைப்ரைட்டிங் தேர்வுகளில் நடந்த முறைகேடுகளை ஏற்கனவே ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியது நக்கீரன். டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும் தொழில் நுட்ப கல்வி இயக்ககமும் தொடர்ந்து காட்டிய அலட்சியத்தால் மேலும் மேலும் மோசடிகள் நடைபெற்று, தற்போது குரூப் 4 தேர்வில் நடந்த மோசடியை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமே ஒப்புக்கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. இப்போதும்கூட, உண்மைக் குற்றவாளிகள் மறைக்கப்படுகிறார்கள் என்கிறார்கள் நேர்மையான அதிகாரிகள்.

குரூப் 1 தேர்வு முறைகேடு! 

மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை டி.எஸ்.பி., வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரகவளர்ச்சி உதவி ஆணையர், மாவட்டப் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளுக்காக 2016 ஜூலை 29,30,31 தேதிகளில் நடந்த குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 பேரில் 62 பேர் சென்னை தி.நகரிலுள்ள ஒரே பயிற்சிமையத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 22 விடைத்தாள்களில் பதிவு எண்கள் அழிக்கப் பட்டு புதிதாக எழுதப்பட்டுள்ளது என்றும், மூன்று பேரின் விடைத்தாள்களில் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டு அதற்குப் பதிலாக வேறு சில பக்கங்கள் இணைக்கப் பட்டதோடு அந்த மூன்று விடைத்தாள்களிலும் ஒரே மாதிரியான கையெழுத்து இருப்பதும் தடயவியல் பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை அசிஸ்டெண்ட் கமிஷனர் ஜெய்சிங் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஜூன் 1-ந் தேதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த மாபெரும் மோசடிகளுக்கு காரணமானவர்கள் யார் யார் என்பதையெல்லாம் விசாரணையில் கண்டுபிடித்த மத்தியக் குற்றப்பிரிவு அதிகாரிகளான டி.சி. ஷ்யாமளாதேவி, ஏ.சி. மகேஸ்வரி, இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் உள்ளிட்டவர்களை இடமாற்றம் செய்துவிட்டு உண்மைக்குற்றவாளிகளை காப்பாற்றிவிட்டது காவல்துறை. அப்போதிருந்து இப்போதுவரை இப்படித்தான் நடைபெறுகிறது.

 

tnpsc



குரூப் 4 முறைகேட்டில் அலட்சியம்! 

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 4 தேர்வானது தற்போது சி.சி. எஸ். தேர்வு என பெயர்மாற்றம் செய்யப் பட்டுள்ளது. இத்தேர்வில், ஜூனியர் அசிஸ்டெண்ட், டைப்பிஸ்ட், ஸ்டெனோ (ஷார்ட் ஹேண்ட்), சர்வேயர், வி.ஏ.ஓ., ட்ராஃப்ட் மேன் (வரைவாளர்), டேக்ஸ் கலெக்டர் (வரித்தண்டளர்) உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகள் ஒன்றாக நடத்தப்பட்டு வருகின்றன. இதில், டைப்பிஸ்ட் எனப்படும் தட்டச்சுப் பணியாளர் தேர்விற்கு விண்ணப்பிப்பவர்கள் ஏற்கனவே தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் நடத்தும் டைப் ரைட்டிங் தேர்வில் தேர்ச்சிபெற்றிருந்தால் சுமார் 10 மதிப்பெண்களிலிருந்து 20 மதிப்பெண்கள் கூடுதலாக கிடைக்கும். இதைப் பயன்படுத்திதான் எக்கச்சக்க மோசடி. டைப் ரைட்டிங் தேர்வில் பாஸ் செய்த தகுதி வாய்ந்தவர்கள் உள்ள நிலையில், அந்தத் தேர்வே எழுதாமல் 10 மார்க் வாங்குவதற்காக வருபவர்களுக்கு சில தனியார் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுகள் கைகொடுக்கின்றன.

 

tnpsc



புதிதாக டைப் தேர்வுக்கு வருபவர்களுடன், ஏற்கனவே டைப் ரைட்டிங் தேர்வில் நன்றாக எழுதி தேர்ச்சிபெற்ற, ஸ்பீடாக டைப் செய்யத்தெரிந்த 10 பேர் கூடுதலாக விண்ணப்பிப்பார்கள் இன்ஸ்டிடியூட் உரிமையாளர்கள். ஹால் செலக்ஷன் உள்ளிட்ட பலவும் இன்ஸ்டிடியூட்டுகள் வசம்தான். அதனால், குறுக்குவழியில் தேர்ச்சிபெறப் போகிறவரின் பக்கத்தில் போலி தேர்வர்களும் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு ஷீட்டில் தேர்வில் பங்கேற்பவர் குறித்த விவரங்களை எழுதவேண்டும். இரண்டாவது ஷீட்டில், 10 நிமிடத்தில் டைப் செய்யவேண்டும். பக்கத்தில் இருப்பவர் கச்சிதமாக டைப் செய்த ஷீட்டுடன், புதியவரின் விவரம் அடங்கிய ஷீட் இணைக்கப்பட்டுவிடும். நினைத்தபடி, 10 மார்க் கிடைத்துவிடும். தனியார் இன்ஸ்டிடியூட்டுகளிடம் பணம் வாங்கிக்கொண்டு இந்த வேலை தொடர்ந்து நடக்கிறது.

கடந்த 2019 பிப்ரவரி 23 மற்றும் 24 தேதிகளில் நடந்த டைப் ரைட்டிங் தேர்வில் மதுரையிலுள்ள ஒரு டைப் ரைட்டிங் இன்ஸ்டிடியூட் ஏற் கனவே தேர்ச்சிபெற்ற விக்னேஷ் மற்றும் இன்னொருவர் என இரண்டுபேரை மீண்டும் தேர்வு எழுதவைத்து முதல்நாள் 5 பேட்ச் தேர்வுகளில் 10 பேரையும், இரண்டாவதுநாள் 4 பேட்ச் தேர்வுகளில் 8 பேரையும் என 18 பேருக்காக தேர்வு எழுதியிருக்கிறார்கள் என்று ஆதாரத்துடன் நக்கீரனில் அம்பலப்படுத்தினோம். ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்ககமும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமும் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது நடந்த முறைகேடு! 

தமிழகம் முழுக்க நடந்த குரூப் 4 தேர்வில்தான், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களில் தேர்வெழுதிய 99 பேர் டாப் ரேங்க் எடுத்து மோசடியாக தேர்ச்சிப் பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனூரைச் சேர்ந்த திருவராஜ் என்பவர் தனது மதிப்பெண்ணைப் பார்க்க அரசு இ-சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள பெண்ணிடம் தன்னுடைய மதிப்பெண் குறித்து கேட்கிறார். அப்போது, அந்தப் பெண் "உங்கள் வயது என்ன?'’என்று கேட்டிருக்கிறார். இவர் 46 என்று சொன்னதால், "இத்தனை வயதில் தேர்வெல்லாம் எழுத முடியுமா?'’என்று கேட்க... "உனக்கென்ன? மார்க் எவ்ளோன்னு மட்டும் சொல்' என்று சீறியுள்ளார். "சிவகங்கையை விட்டுவிட்டு ஏன் ராமேஸ்வரத்திற்கு வந்து தேர்வெழுதுகிறீர்கள்?' என்று சந்தேகத்துடன் கேட்ட அந்தப் பெண், மதிப்பெண்களை பரிசோதித்தபோது குரூப் 4 தேர்வில் முதல் ரேங்க்கே திருவராஜ்தான் என்பது தெரியவந்துள்ளது.


1606 தான் முதல் நம்பர். அதிலிருந்து இருக்கக்கூடிய டாப் 100 தேர்வானவர்களில் 39 பேர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள். திருவராஜ் உட்பட இவர்கள் யாருமே ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. வேலூர், திருநெல்வேலி, கடலூர் என்று வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இதனால், தேர்வு எழுதிய மாணவர்கள் மத்தியில் தகவல் தீயாய் பரவ டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் விசாரணையில் இறங்குகிறது.

 

 

lawyer



இந்நிலையில், முதல் மதிப்பெண் வந்த திருவராஜை பேட்டி எடுக்க ஊடகங்கள் தேடியபோது ஆள் எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பிறகு, அந்த 99 பேரையும் விசாரணைக்கு அழைத்தது டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம். வீட்டுக்குத் திரும்பிய திருவராஜை ஊடகங்கள் பேட்டி எடுத்தபோது, அவரது போலித்தனம் அம்பலமானது. 99 பேரை விசாரணைக்கு வரச்சொன்ன டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தக்குமாரும் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சுதனும் சனிக்கிழமையே ராமநாதபுரம் மாவட்டத்திற்கு விசாரணை செய்ய வந்துவிட்டார்கள்.

எல்லா மையங்களிலும் சோதனை நடத்தியதோடு, விசாரணைக்கு வந்த 39 பேரில் பலரும் முகத்தை மறைத்தபடியே வந்துள்ளனர். அவர்களுக்கு திடீரென விசாரணையின்போதே தேர்வு வைத்துவிட்டார்கள். அதில், அந்த 39 பேரும் தேர்ச்சி பெறவில்லை. தவறு நடந்திருப்பது உண்மை என்று கண்டுபிடித்து, முதன்முதலாக அதனை ஒப்புக்கொண்ட டி.என்.பி.எஸ்.சி நிர்வாகம் சி.பி.சி.ஐ.டியை விசாரிக்கக்கோரியது.


சி.பி.சி.ஐ.டி. விசாரணையில்தான், மோசடியாக தேர்வெழுதிய தேர்வர்கள் அனைவருமே இரண்டு மணிநேரத்தில் அழிந்துவிடும் மை கொண்ட மேஜிக் பேனாவைப் பயன்படுத்தி தேர்வு எழுதியிருக்கும் அதிர்ச்சி தகவலும் அம்பலமானது. மை அழிந்துவிட்ட விடைத்தாள்களை எடுத்து சரியான விடையை நிரப்பி மறுபடியும் உள்ளே வைத்துவிட்டார்கள். இதன் தொடர்ச்சியாக தனிப்படை அதிகாரிகள், முறைகேடாக தேர்வெழுதி வெற்றிபெற்ற திருவல்லிக்கேணியைச் சேர்ந்த நிதீஷ் குமார், இடைத்தரகர்களாக செயல்பட்ட நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக் கல்வி இயக்குனரகத்தில் உதவியாளராக வேலை செய்யும் ரமேஷ், எரிசக்தி துறையில் உதவியாளராக பணிபுரியும் திருக்குமரன் ஆகியோரை அதிரடியாக கைது செய்தது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தாசில்தார்களையும் கைது செய்தது.

இதே ராமேஸ்வரம் மையத்தில் 2017 ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 ஏ தேர்வில் முதல் 50 பேர் இதே மையத்தில் தேர்வெழுதியவர்கள். அப்போதே இதில் முறைகேடு நடந்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது. இடைத்தரகர்களாக செயல்பட்ட பலரும் அதிரடியாக கைதுசெய்யப்பட்டுவரும் நிலையில், டி.என்.பி.எஸ்.சியில் பதிவரை எழுத்தராக பணிபுரியும் ஓம்காந்தன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இவரிடம் நடத்திய விசாரணையில் பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், பழனி என்பவர் ஓம்காந்தனுக்கு அறிமுகமாகியிருக்கிறார். அவர்மூலம் ஜெயக்குமார் என்ற இடைத்தரகர் அறிமுகமாகியிருக்கிறார். ஜெயக்குமார் ஓம்காந்தனிடம் "ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு பணிக்குச் செல்லுங்கள். மற்றதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியதோடு 15 லட்சம் ரூபாய் பேமண்ட் பேசி 2 லட்சம் ரூபாய் அட்வான்ஸும் கொடுத்திருக்கிறார். தேர்வர்களுக்கு மேஜிக் பேனா எல்லாமே கொடுத்தனுப்பியது ஜெயக்குமார்தான்.

தேர்வு முடிந்தபிறகு தேர்வுத்தாளை பார்சல் மூலம் எடுத்துவந்த ஓம் காந்தன் ஜெயக்குமாருக்கு தகவல் கொடுத்துவிடவே, காரில் பின் தொடர்ந்திருக்கிறார் ஜெயக்குமார். பார்சல் வாகனம் சிவகங்கை அருகே வரும் போது, ஓம் காந்தனுடன் வந்த டைப்பிஸ்ட் உட்பட மற்ற அரசுப் பணியாளர்களை சாப்பிட அழைத்துசென்றிருக்கிறார். அந்த நேரம் பார்த்து ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மைய விடைத்தாள்களை மட்டும் ஜெயக்குமாரிடம் கொடுத்துவிடுகிறார் ஓம்காந்தன். மீண்டும் பார்சல் வாகனத்தை காலையில் 5.30 மணிக்கு விக்கிரவாண்டியில் நிறுத்துகிறார்கள். அதற்குள் விடைத்தாள்களை எடுத்துச் சென்ற ஜெயக்குமார் யார் யாரெல்லாம் பணம் கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கெல்லாம் விடையை நிரப்பி திரும்ப கொண்டுவந்து அதே வாகனத்தில் வைத்துவிட்டார்.

சென்னையிலுள்ள ஓம்காந்தனை தொலைவிலுள்ள -குறிப்பாக ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையங்களுக்கு செல்ல அனுமதித்தது யார்? மேலும், 2018 ஆம் ஆண்டுதான் ஜெயக்குமாரும் ஓம்காந்தனும் நண்பர்களாகியிருக்கிறார்கள். ஆனால், 2017 ஆம் ஆண்டே இதே மையங்களில் குரூப்-2 ஏ தேர்வு சர்ச்சையாகியிருக்கிறதே? அப்படியென்றால், ஓம்காந்தனுக்கு முன்பு ஜெயக்குமாருக்கு உதவியது யார்? ஜெயக்குமாரால் எப்படி சம்பந்தப் பட்டவர்களின் விடைத்தாள்களை குறுகிய இடைவெளியில் எடுத்து, திருத்த முடிந்தது. ஒரே ஹாலில் எழுதுபவர்களுக்கிடையே நான்கு விதமான கேள்வித்தாள்கள் உள்ள நிலையில், அத்தனையையும் சரியாக நிரப்பியது எப்படி? டி.என்.பி.எஸ்.சி. தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளின் உதவி இல்லாமல் இது எதுவும் நடக்காது என்கிறார்கள் தேர்வுத் துறையினர்.

ஜெயக்குமாரும், 2017 வரை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக இருந்த பன்னீர்செல்வத்தின் மருமகன் ரமேஷும் தோஸ்துகள். இவர்கள் நட்பில் பல மோசடிகள் நடந்துள்ளன.

நம்மிடம் பேசிய வழக்கறிஞர் கண்ணனோ, "200 கேள்விகள் கொண்ட ஒரு விடைத்தாளில், விடையே கையில் வைத்து திருத்தினாலும் ஒரு பேப்பரை திருத்த ஏறக்குறைய 30 நிமிடமாகும். இந்த 99 பேப்பர்களை திருத்த எவ்வளவு நேரம் ஆகும்..? மறையும் மையை கொண்டு எழுதினார்கள் என்றாலும் கூட மிகுந்த பாதுகாப்பில் இருக்கும் கேள்விக்கான ஆன்ஸர் கீ அவர்களுக்கு எவ்வாறு கிடைத்தது..? பிரிக்கப்பட்ட கவரில் சீல் வைக்கப்பட்டது எவ்வாறு..? இந்த மோசடிக்கு பின்னால் மிகப்பெரிய அதிகாரிகள் உள்ளனர். அவர்களுக்கு உறுதுணையாக அமைச்சர்களும இருக்கின்றனர். இந்த வழக்கு நீண்டால் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என்பதால் இத்தோடு வழக்கை முடிக்க நினைக்கின்றது அரசு'' என்கிறார்.

இதே தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ரமேஷ் சந்த்மீனா அதிகாரியாக இருந்தபொழுது வினாத்தாள்கள் லீக்கானது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்பொழுது அந்த விவகாரத்தில் அடிபட்ட அவருடைய டிரைவர் காணாமல் போனார். இன்று வரை கண்டுபிடிக்கப்படவேயில்லை. அதுபோல் தான் இதுவும். ஊழியர்களை மாட்டிவிட்டு தப்ப நினைக்கிறார்கள் பலர்.

அரசு வேலை என்கிற எளிய மக்களின் நேர்மையான முயற்சியை சிதைத்துள்ள மோசடிப்பேர்வழிகளில் தற்போது சிக்கியிருப்பவை மேம்போக்காக மேய்ந்த ஆடுகள் மட்டுமே. சிக்காத உயர்பதவி ஓநாய்களை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கண்டுபிடித்தால்தான் மோசடிகள் முற்றுப்பெறும்.