மதுக்கடைகளுக்கு எதிராகவும், சமூகப் பிரச்சனைகளுக்காகவும், மத்திய - மாநில அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தொடர்ச்சியாகப் போராடி பல வழக்குகளை சந்தித்து வரும் சமூக ஆர்வலர் நந்தினி நேற்று இரவு அவரது தந்தை ஆனந்தனுடன் டில்லியில் உள்ள பிரதமர் வீட்டின்முன் உண்ணாவிரதம் இருப்பதற்காக மதுரை ரயில்வே நிலையத்தில் வைத்து இருவரையும் கைது செய்தனர். மதுவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராக செயல்பட்டதாகக்கூறி இதுவரை 70 முறை கைதாகி உள்ளார். வழக்கறிஞரான நந்தினி 23 வயதில் தன் வாழ்நாளில் மக்கள் பிரச்சனைகளுக்காக ஒற்றை ஆளாக காவல்துறையின் அச்சுறுத்தலுக்கும், அடக்குமுறைக்கும் பயப்படாமல் தொடர்ந்து போராடி வருகிறார்.
இவருக்கு போலிஸார் பல்வேறு வகையில் தினந்தினம் தொந்தரவு கொடுத்து வருகின்றனர். கடந்த மூன்று வருடத்தில் 10 முறை வீட்டை காலி செய்திருக்கிறார். இவர் வாடகைக்கு எந்த வீட்டிற்கு சென்றாலும் போலிஸார் வீட்டின் உரிமையாளரை மிரட்டிவிடுகின்றனர். இவரின் தந்தை ஆனந்தனோ "என் மகள் பாரதி கண்ட புதுமைப்பெண். என் வம்சத்தில் இவ்வளவு தைரியமான, படித்த உணர்வோடு உண்மையாக மக்கள் பிரச்சனைகளுக்காக தன்னை அர்பணித்து வாழ்ந்தவர் எவரும் இல்லை. வெளியிலும் எனக்கு தெரிந்து யாரையும் பார்க்கவில்லை என்பதில் பெருமையாக இருந்தாலும் ஒரு தகப்பனாக பார்க்கும் போது அவளுக்கு துணை தேடுவது மிக கஷ்டமாக இருக்கிறது. பொதுவாழ்வில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திகொள்வது அவரின் பாதுகாப்புக்கு கேள்விகுறியாகவே உள்ளது.
ஒரு பக்கம் போலிஸாரும், ஒரு பக்கம் அரசியல் ரவுடிகள் என்று தொடர்ந்து அச்சுறுத்தல் இருந்து கொண்டே இருக்கிறது. வேண்டாம்மா போதும் உன் வாழ்கையை பாரு நீ ஒரு பெண் இப்படியே போராடிக்கொண்டே இருக்கமுடியுமா? என்று உறவினர்கள் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அநியாயத்தை கண்டு காந்திய வழியில்கூட போராடக்கூடாதா, உண்மைக்காக என் வாழ்நாள் முழுவதும்கூட போராட தயார் என்கிறார். என்னால் ஒன்றும் சொல்லமுடியவில்லை. நான் எந்த சொத்தும் சேர்க்கவில்லை. என் மகள்தான் எல்லாம். அவள் பாதுகாப்பிற்காக கூடவே இருக்கிறேன். மதுரை மீனாட்சி உருவத்தில் என் மகள் மக்களை காப்பாள் என்று அழுகிறார் தந்தை ஆனந்தன்....