மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் இரண்டு மாதங்களுக்கு முன் ஒருவருக்கு கூட கரோனா பாதிப்பு இல்லை. கடந்த மாதம் ஓய்வுபெற்ற ஆசிரியர் பால் கிறிஸ்டோபர் திடீரென இறந்ததை கண்டு அவரது குடுபத்தினரை சுகாதாரத்துறை ஆய்வு செய்தபோது நான்கு பேருக்கும் கரோனா இருப்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த ஆசிரியரின் இறுதி சடங்கில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரவி இருப்பது தெரியவே, நகர் முழுவதும் சுகாதார துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, வெளியூர்க்காரர்கள் யாரும் கொடைக்கானலுக்கு வரக்கூடாது என நகராட்சி கமிஷனர் நாராயணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் சுப்பையா குழு தடைவிதித்தது.
கடந்த 15ம்தேதி கொடைக்கானல் அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதியான தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரிக்கு நடிகர்கள் விமல், சூரி உள்பட 4 பேர் அனுமதி இல்லாமல் சென்று, மீன் பிடித்து அதை இணைய தளத்திலும் வெளியிட்டனர். இந்த விஷயம் கொடைக்கானல் மக்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலரான பேத்துப்பாறை மகேந்திரனுக்கும் எட்டியதின் பெயரில்தான் இந்த ஊரடங்கு நேரத்தில் அனுமதி இல்லாத பகுதிக்கு சென்று மீன் பிடித்த நடிகர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, தடை செய்யப்பட்ட பேரிஜம் ஏரிக்கு அவர்களை அழைத்து சென்ற வனத்துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடமும் மாவட்ட வனத்துறை அதிகாரியிடமும் புகார் கொடுத்தனர். மாவட்ட வன அதிகாரி தேஜஸ் வியோ, விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பகுதிக்கு சென்ற நடிகர்கள் நான்கு பேருக்கு தலா இரண்டாயிரம் ரூபாய் அவதாரம் விதித்தாரே தவிர எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. துணைபோன வனத்துறை சுற்றுச் சூழல் காவலர்களான சைமன், அருண். செல்வம் ஆகிய மூன்று பேரை மட்டும் தற்காலிக பணி நீக்கம் செய்து பைலை குளோஸ் செய்து விட்டார்.
"இதே பேரிஜம் ஏரி பகுதிக்கு உள்ளூரை சேர்ந்த 7 பேர் அப்பகுதியில் கடந்த மாதம் நடந்து சென்றனர். அதைக் கண்ட வனத்துறையினர் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் 7 பேர் (வின்சன்ட், தங்கேஸ்வரன், சங்கர் கணேஷ், அந்தோணி, கோவிந்தன், ரமேஷ், பிரபு) நுழைந்ததாக கூறி அவர்களை கைதுசெய்து கொடைக்கானல் வனஅலுவலகம் முன் கொலை குற்றவாளிகள்போல் உட்கார வைத்து, சுற்றி டி.எப்.ஓ. உட்பட அதிகாரிகள் நின்று ஃபோட்டோவுக்கு போஸ் கொடுத்த பின் அந்த ஏழு பேரையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்தனர்.
சாதாரண மக்களை கம்பி எண்ண வைத்த வனத்துறையினர், நடிகர்கள் தங்கள் உல்லாசத்தை உலகம் முழுக்க வாட்ஸ்ஆப்பில் பரப்பிய பிறகும் அபராதம் மட்டும் விதித்து விட்டுவிட்டனர். நடிகர்களுக்கு ஒரு நீதி? உள்ளூர் மக்களுக்கு ஒரு நீதியா?
பேரிஜம் போகும் வழியில் உள்ள இரும்பு கேட்டின் சாவி, வனத்துறை அதிகாரிகளிடம்தான் இருக்கிறது. அவர்களின் அனுமதியின்றி எதுவும் நடக்காது. எனவே நடிகர்கள் மீதும் அவர்களுக்கு உதவிய வனத்துறையினர் மீதும் வனத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் மக்களைத் திரட்டி போராட்டம் நடக்கும்'' என்றார் சமூக ஆர்வலரான பேத்துப்பாறை மகேந்திரன்.
இது சம்பந்தமாக சுகாதாரத்துறை ஆய்வாளர் சுப்பையாவிடம் கேட்ட போது, "ஓய்வு பெற்ற ஆசிரியர் இறந்ததிலிருந்தே நகரில் எந்த ஒரு நல்லது கெட்டது நடந்தாலும் நகராட்சியில் அனுமதி பெற வேண்டும் என்று கூறியிருக்கிறோம். வெளியூர் மக்கள் உள்ளூருக்குள் அனுமதிக்காத வகையில் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அப்படி இருக்கும்போதுதான் உள்ளூர் பிரமுகர் மூலம் நடிகர்கள் இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்து, தடையை மீறி பேரிஜம் ஏரிக்கு சென்றதன் மூலம்தான் பிரச்சனை பெரிதாகியுள்ளது. இது சம்பந்தமாக ஆர்.டி.ஓ.வும் வழக்குப்பதிவு செய்துள்ளார். நாங்களும் விசாரணை செய்து வருகிறோம்'' என்று கூறினார்.
இது பற்றி வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனிடம் கேட்டபோது, "சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தான். அதனால வனத்துறையில் உள்ள பேரிஜம் ஏரிக்கு சென்று மீன் பிடித்த நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்படுவார்கள். அதற்கான நடவடிக்கையை எடுக்க வனத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறேன். அதோடு இனி யாரும் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நுழையாத அளவுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். நடிகர்கள் விவகாரம் கொடைக்கானல்வாசிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.