புதிய கல்விக்கொள்கை விவகாரம் தொடர்பான கருத்து தெரிவித்த நடிகர் சூர்யாவுக்கு பாஜக மற்றும் தமிழக அமைச்சர் தரப்பில் இருந்து கடும் கண்டனம் தெரிவி்க்கப்பட்டது. புதிய கல்விக்கொள்கை தொடர்பாக அதிகம் பேசப்படாமல் இருந்த சூழ்நிலையில், சூர்யாவின் பேச்சுக்கு பிறகு தமிழகம் முழுவதும் புதிய கல்விக்கொள்கை தொடர்பான விவாதங்கள் எழுந்து வருகிறது. அவரின் இந்த கருத்தை தமிழ் திரையுலகின் முக்கிய நபர்களும் ஆதரித்து உள்ளனர். குறிப்பாக கமல், அமீர், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் அவரின் கருத்தை ஆமோதித்தனர்.
இந்நிலையில், 'காப்பான்' பட விழாவில் பேசிய நடிகர் ரஜினி, கல்விக்கொள்கை தொடர்பாக சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அதுதொடர்பாக பேசிய அவர், சூர்யாவின் இந்த கருத்து பிரதமர் மோடிக்கு சென்றிருக்கும் என்று கூறினார். இதுதொடர்பான வாத பிரதிவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், பிரபல ஆர்.ஜே ராஜவேலிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். இந்த பிரச்சனை தொடர்பாக பேசிய அவர் ' நடிகர் ரஜினிகாந்த் இதுதொடர்பாக சூர்யாவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்தார் என்பது தவறான புரிதல். அந்த விழாவில் பேசிய கபிலன் வைரமுத்து இந்த சம்பவத்தை நினைவுப்படுத்தி பேசினார். அதற்கு பதிலளிக்கும் பொருட்டு ரஜினிகாந்த் இந்த கருத்தை தெரிவித்துள்ளார். அப்படி தான் இதை பார்க்க வேண்டும். ஏனெனில், அவர் சூர்யாவுக்கு ஆதரவு கொடுப்பதாக இருந்தால் இந்த பிரச்சனை தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே அதனை செய்திருக்கலாம், அல்லது நடிகர் கமல்ஹாசன் சூர்யாவின் கருத்தை ஆதரித்து அறிக்கை விட்டபோதாவது கூறியிருக்கலாம். இதையும் தாண்டி நடிகர் ரஜினிகாந்த் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவருக்கு சூர்யாவை ஆதரித்து ஒரு டுவிட் போடுவது சிரமமாக இருக்காது. ஆகையால் கபிலனின் கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார் என்றுதான் இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அதையும் தாண்டி அவர் எப்போதும் பாஜக ஆதரவு மனநிலையில் இருப்பவர் தான். இதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் நேரில் பார்த்திருக்கிறோம். குறிப்பாக கூட்டணி தொடர்பாக பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பிய போது, 10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என்று கேட்டு தன்னுடைய பாஜக ஆதரவு நிலையை வெளிப்படையாக காட்டினார். எந்த ஒரு முக்கிய விவகாரத்திலும் பாஜகவை எதிர்த்து ரஜினி இதுவரை கருத்து தெரிவித்ததில்லை. ஆகையால், சூர்யாவுக்கு பதில் நீங்கள் பேசியிருந்தீர்கள் என்றால் அது மோடி வரை எதிரொலித்திருக்கும் என்ற கபிலன் வைரமுத்துவின் பேச்சுக்கு பதில் சொல்லும் விதமாகவே ரஜினியின் பேச்சை நாம் அணுக வேண்டுமே தவிர புதிய கல்விக்கொள்கையை அவர் எதிர்ப்பதாக இருந்தால் முன்பே இதுதொடர்பாக அவர் கருத்து தெரிவித்திருக்கலாம்" என்றார்.