Skip to main content

கொடநாடு! சிக்கிய சாட்சியம்! கைதாகப்போகும் முக்கிய புள்ளி?

Published on 13/12/2022 | Edited on 13/12/2022

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

“கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் முதற்கட்டமாக ஒரு பெரிய கைதினை சி.பி.சி.ஐ.டி. போலீஸார் செய்யப்போகிறார்கள்” என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.

 

கோவை ஐ.ஜி. சுதாகர் தலைமையில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட சாட்சிகளையும் அவர்களது வாக்குமூலங்களையும் ஊட்டி கோர்ட்டில் ரகசிய ஆவணமாகச் சமர்ப்பித்தார் ஐ.ஜி. சுதாகர். தற்பொழுது சி.பி.சி.ஐ.டி. போலீசார் எடுத்துவரும் நடவடிக்கைகள், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலங்களில் என்ன இருந்தது என்பதை நிரூபித்து வருகிறது என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.

 

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த காலகட்டம் முதல் இன்றுவரை அவருக்கு மூன்று செக்யூரிட்டி ஆபீசர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பெயர் ரெட்டி. இரண்டாவது நபர் கிருஷ்ணராஜ். மூன்றாவது நபர் தர்மராஜ். இதில் ரெட்டி என்பவர் வழுக்கைத் தலையோடு இருப்பார். இரண்டாவது நபரான கிருஷ்ணராஜ் சேலத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் தர்மராஜ் திருநெல்வேலியைச் சேர்ந்தவர். எடப்பாடி எங்குச் சென்றாலும் இந்த மூவரும் உடன் செல்வார்கள். ரெட்டியும் தர்மராஜும் முறையே எடப்பாடிக்கு வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் மூன்று அடி தொலைவில் நிற்பார்கள். கிருஷ்ணராஜ் அருகில் நிற்பார்.

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

விழாக்களில் கலந்துகொள்ளும் எடப்பாடி, யார் எதைக் கொடுத்தாலும் சாப்பிடமாட்டார். அவர் சாப்பிடும் தண்ணீரைக் கூட கிருஷ்ணராஜ் கொடுத்தால்தான் எடப்பாடி வாங்குவார். எடப்பாடிக்கு கிருஷ்ணராஜ் மீது அவ்வளவு நம்பிக்கை என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். சேலத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜின் குடும்பம், எடப்பாடிக்கு மிக நெருங்கிய குடும்பம். அவரிடம் எடப்பாடி மட்டுமல்ல, அவரது குடும்பத்தினரும் மிகவும் நெருங்கிப் பழகுவார்கள். எடப்பாடி மகன் மிதுன் மற்றும் உறவினரான சம்பந்தி ராமலிங்கம் ஆகியோருடன் நெருங்கிப் பழகுவார் கிருஷ்ணராஜ். சேலம் இளங்கோவன், கிருஷ்ணராஜ் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வார். ஆறுகுட்டி எம்.எல்.ஏ., அனுபவ் ரவி போன்றவர்களும் கிருஷ்ணராஜுவுடன் நன்றாகப் பழகுவார்கள். இந்த கிருஷ்ணராஜைக் குறிவைத்து தமிழக போலீஸ் நகர்ந்து கொண்டிருக்கிறது. “இவருக்கும் கொடநாடு வழக்கிற்கும் தொடர்பு இருக்கிறது. விரைவில் இவர் சிக்குவார்” என்கின்றது தமிழக காவல்துறை வட்டாரம்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது, முக்கியமான விஷயங்களைப் பேசும்போது தனது செல்போனை உபயோகிக்கமாட்டார். அதேபோல் கொடநாடு கொள்ளை சம்பவத்தின்போது அந்தக் கொள்ளையை நடத்திய கனகராஜ் மற்றும் அந்தக் கொள்ளைக்கு பேருதவியாக இருந்த அனுபவ் ரவி, ஆறுகுட்டி ஆகியோரிடம் பேச, தனது பாதுகாவல் அதிகாரிகளாக இருந்தவர்களின் செல்போனை எடப்பாடி உபயோகித்துள்ளார். அதில் ரெட்டி, தர்மராஜ், கிருஷ்ணராஜ் ஆகியோரது செல்போன்களை உபயோகித்துத்தான் எடப்பாடி பேசியிருப்பார். அதில் கிருஷ்ணராஜின் செல்போன் எண்ணை எடப்பாடி உபயோகித்தார் என ஆறுகுட்டியும், அனுபவ் ரவியும் போலீசில் போட்டுக் கொடுத்துள்ளனர்.

 

Kodanadu estate case police investigate to edappadi special security

 

கொடநாடு கொலை வழக்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களையாவது பெறவேண்டும் என, கோர்ட்டிலேயே சி.பி.சி.ஐ.டி. சமீபத்தில் நடந்த வாய்தாவின்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறது. அதில் எடப்பாடிக்கு செக்யூரிட்டி ஆபீஸராக இருந்தவர்களின் செல்போனும் ஒன்று என்கிறது காவல்துறை வட்டாரம்.

 

முதல்வரின் செக்யூரிடிகள், முதல்வரின் நடவடிக்கை குறித்து உளவுத்துறை தலைவரிடம் சொல்ல வேண்டும். அமைச்சர்களின் செக்யூரிட்டிகளை வைத்துதான் அமைச்சர்களின் நடவடிக்கைகளை உளவுத்துறை கண்காணிக்கும். அவர்களது செக்யூரிட்டி ஆபீசர்களை முதல்வருக்கு நெருக்கமானவர்கள்தான் தேர்ந்தெடுத்து அமைச்சர்களுக்கு நியமிப்பார்கள்.

 

எடப்பாடி முதல்வராக இருந்தபோது, உளவுத்துறை தலைவராக இருந்தவர் சத்தியமூர்த்தி. அவரும் முதல்வர் எடப்பாடியிடம் சொல்லவேண்டிய சில விஷயங்களை அவரது செக்யூரிட்டி ஆபீசர்கள் மூலமாகத்தான் சொல்வார். முதல்வர் பேசுவதை யார் டேப் செய்வார்கள்? டேப் செய்யும் பொறுப்பிலுள்ள சத்தியமூர்த்தியே நம்மிடம் பேசுகிறார் என்கிற தைரியத்தில் செக்யூரிட்டி ஆபீசர்கள் அலட்சியமாக இருந்தனர். ஆனால், எடப்பாடி கொடநாடு கொலை, கொள்ளை பற்றி முழுவதும் செக்யூரிட்டி ஆபீசர்களின் செல்போனை உபயோகித்துப் பேசியுள்ளார். எனவே, எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசர்கள் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சிக்கியுள்ளனர்.

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த ஐ.ஜி. சுதாகர் டீம் இந்த உண்மை பற்றி ஸ்மெல் செய்து கண்டுபிடித்துவிட்ட நிலையில், விசாரணை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. விரைவில் எடப்பாடியின் செக்யூரிட்டி ஆபீசர்கள் போலீஸ் விசாரணைக்கு உள்ளாவார்கள். அவர்கள் கைது செய்யப்படலாம் என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

 

செக்யூரிட்டி ஆபீசர்கள் கைது செய்யப்பட்டால், எடப்பாடி மீதான பிடி கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இறுகும். இது அரசியல் ரீதியான பழி வாங்கல் என எடப்பாடி பிதற்றுவார் என்பதால், அரசின் அனுமதி வேண்டிக் காத்திருப்பதாகக் கூறுகிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.