நாடெங்கும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இருந்தாலும், வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மக்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக வெளியில் வந்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். இந்த மாதிரி சமயத்தில் தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது சவாலான காரியமாக இருக்கிறது.
குறிப்பாக, சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூடுவதால், கரோனா தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. காற்று போகும் இடைவெளிகூட அங்கு இல்லை என்று, ஏற்கனவே ஏப்ரல் 18 – 21 தேதியிட்ட நக்கீரன் இதழில் எழுதியிருந்தோம். மேலும், இதை கவனிக்க வேண்டிய அதிகாரிகளோ, காவல்துறையினரோ மார்க்கெட் வாசலை தாண்டி உள்ளே வருவதில்லை. இதனால், கூடிய சீக்கிரமே கரோனா பரவலுக்கான ஹாட்ஸ்பாட்டாக கோயம்பேடு மார்க்கெட் மாறப்போகிறது என்று, அங்கு கடை நடத்தி வருபவர்களின் குமுறலை அதில் பதிவு செய்திருந்தோம். அரசு காட்டிய அலட்சியத்தால், அந்தச் செய்தி உண்மையாகி இருக்கிறது.
இரண்டு தினங்களுக்கு முன்னர், மத்தியக் குழுவை சேர்ந்த அதிகாரிகள் சிலர் தமிழகம் வந்து ஆய்வு நடத்தினார்கள். தமிழகத்திலேயே சென்னையில் அதிகமாக தொற்று இருப்பதால், இதை கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு தொடர்ந்தது. அவர்கள் மக்கள் அதிகம் கூடும் கோயம்பேடு மார்க்கெட்டிலும் ஆய்வு முடித்துவிட்டு, முதல்வர் எடப்பாடியை பழனிசாமியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு சென்றார்கள். அன்றைய தினமே, கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருவருக்கு கரோனா தொற்று உறுதியானது. அதற்கு மறுநாள், பூ மார்க்கெட்டில் பூவாங்கி சில்லரையாக விற்கும் பெண்ணுக்கு தொற்று ஏற்பட்டது. அவரும், பாடி குப்பம் பகுதியில் பூ விற்றபோது, அவரால் தொற்று ஏற்பட்ட 30 பேரும் இப்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதன்பிறகு, கோயம்பேடு பூ மார்க்கெட் மாதவரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, கார்ப்பரேஷன் கமிஷனர், சி.எம்.டி.ஏ. கமிஷனர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, 27ந்தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் கடை நடத்துபவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, “கரோனா தொற்று இந்தப் பகுதியில் வேகமாக பரவுவதால், மார்க்கெட்டை தற்காலிகமாக கேளம்பாக்கம் பகுதிக்கு ஷிஃப்ட் செய்யவேண்டும்” என்று அதிகாரிகள் தரப்பு வலியுறுத்தியது. இதை ஏற்காத மார்க்கெட் தரப்பினரோ, “கேளம்பாக்கமெல்லாம் ரொம்ப தூரம். வேண்டுமென்றால், ஆம்னி பஸ்ஸ்டாண்ட் பகுதிக்கு மாற்றிக் கொள்கிறோம். அனுமதி தாருங்கள்” என்று கேட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், “நிலைமை மோசமாகிட்டு இருக்கு. நாளுக்கு நாள் பரவல் அதிகமாகிட்டே வேற வருது. இப்போ இதை சரிசெய்யலைனா, நாளைக்கு கடை திறக்கவே முடியாம போயிடும்” என்று அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால், கூட்டம் மறுநாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது.
பின்னர் 28ந்தேதி மீண்டும் நடந்த பேச்சுவார்த்தை கூட்டத்தில் சி.எம்.டி.ஏ. கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்ட சில அதிகாரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், “நாளையோடு அரசு அறிவித்த நான்கு நாள் ஊரடங்கு முடியப்போகிறது. இப்போது வாங்கி வைத்திருக்கும் காய்கறிகளை அடுத்த மூன்று நாட்களுக்கு, சில்லரை வியாபாரிகள் இங்கு விற்றுக்கொள்ளலாம். மே 1ந்தேதிக்குப் பிறகு, சில்லரை வியாபாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் கடைபோடக் கூடாது. மொத்த வியாபாரம் மட்டுமே நடக்கவேண்டும். சில்லரை வியாபாரிகள் வெளியே கடை அமைத்துக் கொள்ளலாம்” என்று அறிவித்து, பேச்சுவார்த்தையை முடித்து வைத்தனர்.
அதிகாரிகளின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்திருக்கும் சில்லரை வியாபாரிகள், “வெளியே பஸ்-ஸ்டாண்ட் போன்ற பகுதிகளில் கடை போட்டுக் கொள்ளுங்கள் என்று லேசாக சொல்லிவிட்டார்கள். ஆனால், எங்களது குடோன் மார்க்கெட்டிற்கு உள்ளேதான் இருக்கிறது. அங்கிருந்து வண்டி, கூலியாட்கள் வைத்து காய்கறிகளை கொண்டுவந்தால், கண்டிப்பாக விலையை ஏற்றிவைத்து விற்கவேண்டி இருக்கும். இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படும். மேலும், மார்க்கெட்டில் எங்களது கடையில் வியாபாரம் செய்தால், கடையில் பொருட்களை போட்டுவிட்டு அப்படியே கிளம்பிவிடலாம். இப்படி தெருவில் விற்றால், அந்தப் பொருட்களை எப்படி பாதுகாப்பது என்ற அச்சமும், கேள்வியும் எங்களுக்கு எழுகிறது.
இதுபோக, மொத்த வியாபாரிகளிடம் சில்லரை வியாபாரிகளாகிய நாங்கள் பொருட்கள் வாங்கினால்தான், அவர்களுக்கும் வியாபாரம் நடக்கும். எங்களை வெளியேறச் சொல்லி, பொருள் வாங்குவதில் சிரமம் ஏற்படுத்தினால், மொத்த வியாபாரிகளுக்கும் நஷ்டம்தானே ஏற்படும். காய்கறிகள் ஒன்றும் ஆண்டுக்கணக்கில் ஸ்டாக் வைத்து விற்கக்கூடிய பொருள் இல்லையே” என்று வெறுப்புடன் பேசியவர்கள், அதிகாரிகள் சொல்வது போல மே 1ந்தேதியில் இருந்து நாங்கள் மார்க்கெட்டுக்குள் கடை போடமாட்டோம். அதன்பிறகு வரும் இழப்பை பார்த்து, அதிகாரிகளே எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்கிறார்கள் ஏமாற்றத்திலும், நம்பிக்கை குறையாமல்.
இந்நிலையில், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் நடமாடும் சோதனை வாகனம் மற்றும் மருத்துவக் குழுவினரை நியமித்து, அங்கிருப்பவர்களுக்கு கரோனா தொற்று சோதனை எடுக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
மக்களை கரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பது எந்தளவுக்கு முக்கியமோ, அதேபோல், இதுபோன்ற தினசரி வருமானத்தை நம்பி பிழைப்பு நடத்துபவர்களை பாதுகாப்பதும் அரசின் தலையாய கடமை. எல்லாவற்றையும் தாமதமாக உணரும் அரசு, இனியாவது விழித்துக் கொள்ளுமா?