Skip to main content

ஆவினை மிரட்டும் கரோனா!!! லாக்-டவுனில் மாதவரம் பால்பண்ணை?

Published on 03/05/2020 | Edited on 03/05/2020

 

                    

aavin milk



ஆவின் ஊழியர்கள் 3 பேருக்கு கரோனா தொற்று தாக்கியிருப்பதால் அதிர்ச்சியடைந்திருக்கிறது ஆவின் நிர்வாகம். இதனால் இன்று சென்னையில் ஆவின் பால் சப்ளையில் கால தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், சம்மந்தப்பட்ட மாதவரம் பால் பண்ணை லாக் டவுன் செய்யப்படுமா? என்கிற கேள்வி ஆவின் வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. 
                      

சென்னையில் மட்டும் தினமும் 14 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகளை சப்ளை செய்கிறது ஆவின். இதில், மாதம் தோறும் முன்பணம் செலுத்தி பால் கார்டு பெற்றவர்களுக்கு 9 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் பால் விநியோகிக்கப்படுகிறது. மீதியுள்ள 5 லட்சம் லிட்டர் பால் மொத்த வியாபார ஏஜெண்டுகளுக்கு (11 பேர்) தந்து விடுகிறது ஆவின் நிர்வாகம். 
                        

பல்வேறு மாவட்டங்களிலிருந்து டேங்கர் லாரிகள் மூலம் சென்னைக்கு தினமும் கொண்டு வரப்படுகிற பால், மாதவரம், சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய 3 இடங்களிலுள்ள ஆவின் பால் பண்ணைகளில் குளிரூட்டப்பட்டு சென்னை மக்களுக்கு பால் பாக்கெட்டுகளும், பால் மூலம் தயாரிக்கப்படும் உப பொருட்களும் சப்ளை செய்யப்படுகின்றன. 
                           

இந்த நிலையில், மாதவரம் ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் 2 ஊழியர்கள் மற்றும் நந்தனம் ஆவின் தலைமையகத்தில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியர் என 3 பேருக்கு கரோனா தொற்று தாக்கியிருப்பதை நேற்று கண்டறியப்பட்டு மருத்துவமனையில் அவர்கள் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களது குடும்பம் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறது.  
                            
 

aavin milk



கரோனா தொற்று தாக்கியிருப்பதை அறிந்து மாதவரம் பால் பண்ணை ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து ஓடியிருக்கிறார்கள். அவர்களை சமாதானப்படுத்தி அழைத்துவந்து பால் பாக்கெட் அடிக்கும் பணிகள் நேற்று இரவு நடந்திருக்கிறது. இதனால் இன்று காலையில் பால் சப்ளை செய்வதில் சென்னையில் பல்வேறு இடங்களில் கால தாமதம் ஏற்பட்டன.  இந்த நிலையில், மாதவரம் பால்பண்ணையை ஆவின் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 
                          

ஆவின் ஊழியர்களுக்கு கரோனா தொற்று பரவியதால் ஆவின் ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே இனம்புரியாத அச்சம் சூழ்ந்துள்ளதாக வருகிற தகவல்களை அடுத்து, இது குறித்து விசாரித்தபோது, ‘’ ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அத்யாவசிய பொருளாக இருக்கிறது பால். அந்த வகையில் அதன் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை. அதுவும் கரோனா வைரஸ்,  பொருட்களிலும் பரவும் என உலக சுகாதாரத்துறை எச்சரிக்கை செய்துள்ள நிலையில் பால் பாக்கெட்டுகள் விசயத்தில் அதீத கவனம் செலுத்த வேண்டும்.  
                   

பால் லாரி டிரைவர்கள், க்ளீனர்கள், ஆவின் பால் பண்ணையில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள், பால் பாக்கெட்டுகளை விநியோகிக்கும் காண்ட்ராக்டர்களின் 
லாரி ஓட்டுநர்கள், ஒப்பந்தபணி முறையில் பணிபுரியும் தொழிலாளர்கள்  என அனைவரும் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சானிடைஷர்களை பயன்படுத்த வேண்டும். பணியாளர்கள் உடல் கவசங்கள் அணிந்திருக்க வேண்டும். பால் பண்ணைகள், லாரிகள் அனைத்தும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும். இப்படி அனைத்து நிலைகளிலும் பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் இருப்பது அவசியம். ஆனால், ஆவின் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாக தெரியவில்லை.  
                     

கரோனா தொற்று தாக்கியதற்கு பிறகுதான், இன்று காலையில் அனைத்து ஆவின் மேலாளர்களுக்கும் ஒரு அவசர உத்தரவை வாட்ஸ் அப்பில் அனுப்புகிறது ஆவின் நிர்வாகம். அதில், லாரி டிரைவர்கள் மற்றும் க்ளீனர்களுக்கு முக கவசம், சானிடைசர் ஆகியவைகளை கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்க தவறினால் அதனை நிர்வாகமே கொடுத்து விட்டு அதற்கான தொகையை லாரி உரிமையாளர்களிடமிருந்து பில்லில் கழித்துக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 
 

அப்படியானால், இதுவரை லாரி டிரைவர்களுக்கும் க்ளீனர்களுக்கும் முக கவசம் கொடுக்கப்படவில்லையா? ஆவின் பணியாளர்களும் முக கவசம் அணிவதில்லையா? என்கிற கேள்வி எழுகிறது. முக கவசம், சானிடைசர்கள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகள் எங்களுக்கு கிடைக்கவில்லை; ஆவின் நிர்வாகமே இவைகளை தர வேண்டும் என ஆவின் நிர்வாகத்திடம் லாரி உரிமையாளர்கள் ஆரம்பத்திலேயே கோரிக்கை வைத்திருக்கிறார்கள். ஆனால், இதனை அலட்சியப்படுத்தியுள்ளது ஆவின் நிர்வாகம். 
                  

சென்னையில் கரோனா தொற்று சமூக பரவலாக மாறியிருப்பதன் அடையாளம் தான்  சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்க காரணம். அந்த வகையில் தற்போது ஆவின் பால் பண்ணை ஊழியர்கள் வரை கொரோனா ஊடுறுவியிருப்பதால் பயப்பட வேண்டியதிருக்கிறது. இதன் சீரியஸ்னசை உணர்ந்து, மாதவரம் பால்பண்ணையை முழுமையாக கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தி பண்ணையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்படும் வரை அந்த பால்பண்ணையை லாக் டவுன் செய்யப்பட வேண்டும். பண்ணையில் நிரந்தரமாக  மருத்துவ குழுவினரை அமர்த்த வேண்டும். ஆனால், இதற்கான முயற்சிகளை ஆவின் நிர்வாகம் எடுப்பதாக தெரியவில்லை. பொதுவாகவே, ஆவின் அதிகாரிகளிடம் அலட்சியம் அதிகமாகவே இருக்கிறது ‘’ என்கிறார்கள் விசயமறிந்த ஊழல்களுக்கு எதிரான அமைப்பின்  சமூக ஆர்வலர்கள். 
                   
 

aavin milk



இது குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் துறையின் செயலாளர் கோபால் ஐ.ஏ.எஸ். ஆகியோரிடம் கேட்டபோது, ‘’ கரோனா விவகாரம் துவங்கியபோதே ஆவின் பால் பண்ணைகள் தொடங்கி பால் பாக்கெட்டுகள் மக்களிடம் சேரும் வரை அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அனைத்து நிலைகளிலுமுள்ள ஆவின் ஊழியர்கள்  அனைவருக்கும் பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. கரோனா மட்டுமல்ல எந்த ஒரு வைரஸும் தாக்காமல் இருக்கும் வகையில் பால் பண்ணைகள் பாதுக்காக்கப்பட்டுள்ளன. அதனால் மக்கள் எந்த சூழலிலும் பால் பாக்கெட் விசயத்தில் பயப்படத் தேவையில்லை. தற்போது ஊழியர்கள் மூவரை தொற்று தாக்கியிருப்பதாக வந்த தகவலை அடுத்து முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தியிருக்கிறோம். அதேபோல, லாரி டிரைவர்களுக்கு முக கவசம், சானிடைசர்கள், கபசுர குடிநீர் உள்ளிட்டவைகள் வழங்க ஏற்கனவே மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு அவர்கள் தேவையான கவசங்களை வழங்கியிருக்கிறார்கள். இருப்பினும் அதில் தடையேதும் இருந்தால் அதனை களைந்து அனைவருக்கு முக கவசம் கொடுக்கப்படும். தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆவின் பால் பாக்கெட் விசயத்தில் மக்களுக்கு அச்சம் தேவையில்லை ‘’ என்கிறார்கள் உறுதியாக.


 

Next Story

பிரதமரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ போராட்டம்! (படங்கள்)

Published on 27/04/2024 | Edited on 27/04/2024

 

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கூறிவருகின்றனர்.

இந்த நிலையில், மோடியின் மதவெறுப்பு பிரச்சாரத்தை கண்டித்து, எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அருகே பேரணியாக நடந்து சென்று  தேர்தல் ஆணையம் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தினர். அப்போது எஸ்.டி.பி.ஐ கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட  போராட்டக்காரர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர்.

Next Story

தண்ணீர் தட்டுப்பாடு ; தாக்குபிடிக்குமா 'சென்னை'

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Water scarcity; Attacking 'Chennai'

கோடைகால வெயிலின் தாக்கம் தீவிரமடைந்திருக்கும் நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசும் மேற்கொண்டு வருகிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்கும் உப்பு சர்க்கரை கரைசல் எனும் ஓ.ஆர்.எஸ் கரைசலை ஆயத்தமாக வைத்திருக்க தமிழக சுகாதாரத்துறைக்கு அரசு அறிவுறுத்தல் கொடுத்துள்ளது. 

கோடை காலங்களில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் வெயிலின் தாக்கத்தை தனித்து கொள்வதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தாண்டி மூன்றாவது காரணியாக பார்க்கப்படுவது குடிநீர் தட்டுப்பாடு. சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக காலி குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம் நடத்துவது போன்ற செய்திகள் தென்படுவதே இதற்கான சான்று. அதேபோல் கோடை காலங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டை அதிகம் கையாளும் இடமாக சென்னை உள்ளது. பல்வேறு ஏரிகளில் உள்ள நீர் இருப்பை நம்பியே சென்னையின் குடிநீர் தட்டுப்பாடு நீக்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்குவதில் மிக முக்கியமான ஏரி புழல் ஏரி. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. தற்போது புழல் ஏரியில் இருக்கும் நீரின் அளவு 2,942 மில்லியன் கன அடி ஆகும். வினாடிக்கு 570 கன அடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 217 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அடுத்து சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது சோழவரம் ஏரி. 1,080 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் தற்போது 118 மில்லியன் கன நீர் மட்டுமே உள்ளது. தற்போது நீர்வரத்து இல்லாத நிலையில் சோழவரம் ஏரியில் இருந்து 168 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.  அடுத்தது செம்பரம்பாக்கம் ஏரி. சென்னை குடிநீர் தேவையில் முக்கிய பங்காற்றுகிறது. மொத்தம் 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது நீர் இருப்பு 2,384 மில்லியன் கன அடியாக இருக்கிறது. நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 46 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையின் அடுத்த குடிநீர் ஆதாரம் பூண்டி ஏரி. 3,231 மில்லியன் கன அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு 978 மில்லியன் கன அடியாக உள்ளது. இந்த ஏரிக்கும் நீர்வரத்து இல்லாத நிலையில் வினாடிக்கு 525 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டு காணப்படும் நிலை இருக்கிறது. 1,475 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் நீர் இருப்பு கணக்கிட முடியாத அளவிற்கு மிகவும் குறைவாக இருக்கிறது. வீராணம் ஏரியில் நீர்வரத்தும் இல்லை நீர் வெளியேற்றமும் இல்லாத சூழ்நிலை இருக்கிறது.

இப்படி மொத்தமாக சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.75 டிஎம்சி ஆக இருக்கிறது. இதில் வீராணம் ஏரி முற்றிலும் வறண்டு விட்ட நிலையில் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் உள்ளிட்ட ஏரிகளில் தற்பொழுது 6.88 டிஎம்சி நீர் மட்டுமே இருக்கிறது. வரும் கோடை காலத்தில் இந்த அளவு தண்ணீரே சென்னையின் குடிநீர் பிரச்சனையை தீர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.