எதிர்க்கட்சிகளின் கூட்டணி மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை கிருத்திகா தரண் பகிர்ந்துகொள்கிறார்
எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது பெங்களூரு மாநகரமே திருவிழா நடப்பது போல் காட்சியளித்தது. திருமாவளவன் வெறும் கட்சித் தலைவர் மட்டும் அல்ல. மிகப்பெரிய சமுதாய சீர்திருத்தவாதி. அவர் போன்றவர்களும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். ஆம் ஆத்மி கட்சியும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டது. காங்கிரஸ் கட்சியை எதிர்த்து அரசியல் செய்த பலர் இன்று காங்கிரசை ஆதரிக்கின்றனர். மக்களைக் காப்பாற்றவே அனைவரும் ஒன்றுகூடியுள்ளனர். அனைத்து வித்தியாசங்களையும் கடந்து இவ்வளவு கட்சிகள் ஒன்றாக வந்ததே பெரிய விஷயம்.
இது கொண்டாடப்பட வேண்டும். இங்குள்ள தலைவர்கள் சுதந்திரமாக சிந்திக்கின்றனர். பாஜகவுடன் இருக்கும் கட்சிகள் ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாகவே அங்கு இருக்கின்றன. இந்தியத் தேர்தல் முறையில் மக்களவை உறுப்பினர்களால்தான் பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே பிரதமர் பதவி என்பது இங்கு முக்கியமான பிரச்சனை அல்ல. பிரதமர் வேட்பாளர் உள்ளிட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் விவாதிப்பார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்பது நிச்சயம் சர்ப்ரைசாக இருக்கும்.
இவ்வளவு நாட்கள் நம்மை இந்தியாவுக்கு எதிரானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு 'இந்தியா' எனப் பெயர் வைத்தவுடன் இந்தியாவிற்கு எதிரானவர்களாக மாறிவிட்டார்கள். நாம் கேள்வி கேட்க வேண்டியது எதிர்க்கட்சிகளைப் பார்த்து அல்ல. பாஜகவின் சர்வாதிகாரத்தை எதிர்த்து நாம் கேள்வி கேட்க வேண்டும். உதிரிக் கட்சிகளை வைத்துக்கொண்டு 36 கட்சிகள் கூட்டணி என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் எங்கள் பக்கம் பெரிய கட்சிகள் இருக்கின்றன. விலைக்கு வாங்கப்பட்டவர்களை வைத்துதான் பாஜக தனது கூட்டணியை உருவாக்கியுள்ளது.
நம் நாட்டைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. அதனால்தான் பிரதமர் பதவி கூட தேவையில்லை என்கிற எண்ணத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. பாஜகவைச் சேர்ந்த அசாம் முதலமைச்சர் "இந்தியா என்கிற பெயர் வெள்ளைக்காரர்கள் நமக்கு சூட்டியது. பாரத் என்பதுதான் நம் நாட்டின் பெயர்" என்கிறார். இவ்வளவு நாட்கள் இந்தியாவை நாங்கள்தான் காப்பாற்றுகிறோம் என்றார்கள். இப்போது இந்தியா என்கிற வார்த்தையே அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவர்களின் சாயம் வெளுத்ததில் உள்ளபடியே எங்களுக்கு மகிழ்ச்சி. எங்களுடைய கூட்டணியைப் பார்த்து பாஜக மிகுந்த அச்சத்தில் இருக்கிறது.