Skip to main content

"இந்த நரிகளின் வாலை ஓட்ட நறுக்கி விரட்டாதவரை இந்த இழிநிலை துடைத்து எறியப்படாது” - சீமான்

Published on 05/12/2018 | Edited on 05/12/2018

சி.பி.சி.இ பாடத்திட்டத்தில் தமிழினத்தின் வரலாறு தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்றும், தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகிறது என்றும் அதற்கு காரணமாக இருக்கும் தேசியக் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தமிழ்நாட்டில் கால் ஊன்றவிட விடமாட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதில் இருந்து.   

 

 

s

 

 

இந்தப் பாடத்திட்டத்தை நீக்கவில்லை என்றால் தமிழ்நாட்டு அரசியலில் இருந்து உன்னை அறவே நீக்குவோம் என்று மக்களாகிய நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். பாஜகவாக இருந்தாலும் சரி, காங்கிரஸாக இருந்தாலும் சரி என்னை இழிவுபடுத்திய அவனுக்கு என் நிலத்தில் ஒற்றை ஓட்டுக்கூட இல்லை என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுக்காதவரை உன் மானம் காப்பாற்றப்படாது. தமிழன் இழிவானவன் அல்ல பெருமைக்குரியவன். தமிழ் குடியில் பிறந்ததனாலே அவன் பெருமைக்குரியவன் என்கிறார் புரட்சிப்புலவர் பாரதிதாசன். அவர் சொல்கிறார், 


பண்டைப் பெரும் புகழ் உடையோமா, இல்லையா?
பாருக்கு வீரத்தை சொன்னோமா, இல்லையா?
எண்டிசை வாய்மையால் ஆண்டோமா, இல்லையா?
எங்கட்கும் இங்குற்ற நரிகளால் தொல்லையா? என்கிறார்.


இந்த நரிகளின் வாலை ஓட்ட நறுக்கி விரட்டாதவரை இந்த இழிநிலை துடைத்து எறியப்படாது, நீ கெஞ்சிக்கொண்டிருந்தால் அவன் உன்னை மிஞ்சிக்கொண்டே இருப்பான். இது தமிழினத்தின் தன்மான இழப்பு. அந்தப் பாடத்தை நீக்கு என்று சொன்னோம் அப்போது அவன் கேட்கவில்லை, இப்போது நாம் என்ன செய்வது என்றால் முட்டுக்கு முட்டுத்தானே வேறென்ன செய்வது. நீ என்னை இழிவு செய்ய நினைத்தால், என் தாய் மண்ணில் உன்னை இழிவுபடுத்தி அழித்து ஒழித்துவிடுவேன், இதுதான் ஒவ்வொரு தமிழ் மகனும் உறுதியாக எடுக்க வேண்டிய நிலைப்பாடு. கெஞ்சி பார்ப்போம், கேட்டுப் பார்ப்போம், கோரிக்கை வைத்துப் பார்ப்போம் எதற்கும் ஒத்துவரவில்லை என்றால் துடைத்து எறிந்து விடவேண்டியதுதான். சி.பி.எஸ்.இ பாடத்தில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை கட்டாயமாக படிக்கவேண்டும். இதன் மூலமாக ஒரு தேசிய இன மக்களை, தமிழனை தன் தாய் மொழியில் இருந்து வெளியேற்றுகிறான், அடுத்தது வரலாற்றிலிருந்து வெளியேற்றுகிறான். ஓர் இனம் தன் மொழியிலிருந்தும் வரலாற்றிலிருந்து வெளியேறுகிறது என்றால் அது செத்துவிடும். இவன், வல்லபாய் பட்டேலை படிக்க வைப்பான். ஆனால், நமது தாத்தன் வ.உ.சி.யை படிக்க வைக்கமாட்டான். நீ ஜான்சிராணியை படிப்பாய். ஆனால், வேலுநாச்சியாரை படிக்க மாட்டாய். பாலகங்காதர திலகரை படிப்பாய். ஆனால், உன் பாட்டன் காமராஜரை படிக்க மாட்டாய். ஏனென்றால் அந்தப் பாடத்திட்டத்தில் அது இருக்காது. இந்தப் புரிதல் எப்போது நமக்கு வருகிறதோ அப்போதுதான் அவனை துடைத்து எறிய முடியும்.

 

 

ss

 

 

 இங்கிருக்கும் ஆட்சியாளர்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு என்று பெயர் வைத்தது நாங்கள்தான் என்பார்கள். ஆனால், தமிழ்நாடு எனப் பெயர் வைக்கச் சொல்லி 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனார் எனும் பெரும் தமிழன் என்பதை மறந்துவிடக்கூடாது. அந்தத் தமிழன் தான் தமிழ்நாட்டிலே இழிவுபடுத்தப்பட்டு இருக்கிறான் என்பதை என் உயிரினும் இனிய தம்பி, தங்கைகள், என் அன்பு சொந்தங்கள் அறிந்துகொள்ள வேண்டும். அவன், அரசியலால் நம்மிடமிருந்த அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டுபோய், நமது வாக்கினால் வலிமை பெற்று, நம்மையே இழிவு செய்கிறான். நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் அதே அரசியல் தளத்தில் அவனை விழுத்தி முடிப்பதைத் தவிர வேறு வழியில்லை. இதுதான் ஒவ்வொரு மானத் தமிழனின் பிறவிக்கடன், வரலாற்றுக் கடமை என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் இழிவாக எழுதி விட்டதனால் நாம் இழிவானவர்கள் அல்ல. நம்மை இழிவாக சிந்தித்து எழுதியவன்தான் இழிவானவன் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நமது பாட்டி ஔவ்வை,
 

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் 
நீதி வழுவா நெறிமுறையின் மேதனியில்
இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.  என்கிறாள்.
 

இங்கு இரண்டே இரண்டு சாதிகள்தான் இருக்கிறது. எல்லோரும் ஆண் சாதி பெண் சாதி என்பார்கள். ஆனால் அது சாதி இல்லை பாலினம். சாதி வேறு பாலினம் வேறு, ஒன்று தன்னிடம் இருக்கும் பொருளை மற்றொருவனுக்கு கொடுப்பவன் உயர்ந்த சாதி, மற்றொன்று எல்லாவற்றையும் தனக்கென்று பதுக்குபவன் இழி சாதி, தாழ்ந்த சாதி. தன்னிடம் இருக்கும் பொருளை மற்ற மக்களுக்குக் கொடுப்பவன் எந்தச் சாதி என்று உங்களுக்கு தெரியும், தமிழ் சமூக மக்கள்தான்.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா 
செய்தொழில் வேற்றுமை யான்.


என்று எழுதியது உலகத்திற்கு பொதுமறைகொடுத்த பெருந்தகை நமது வள்ளுவர் பெருமகனார்தான். தமிழ் குடி, என்றும் தாழ்ந்து போகாது அவன் கொடியும், குடியும் என்றும் மேன்மேலும் பறந்து போகும். யார் செய்கிறார்களோ இல்லையோ, இவன் இந்தப் பாடத்திட்டத்தை நீக்கவில்லை என்றால் அவனை எந்த தேர்தலிலும் வெல்வதற்கு நான் விடமாட்டேன். நீங்கள் இதை எல்லாம் கேட்டுவிட்டு, இரண்டு கட்சிகளுக்கு ஓட்டுப்போட்டுவிட்டு படுத்துவிடுங்கள். நாங்கள் அவமானப்பட்டு, வெட்கப்பட்டு, கேவலப்பட்டு வீதிவீதியாக கத்திவிட்டு... தமிழன் என்றாலே மானம், வீரம் இரண்டும் உயிர் என்று வாழவேண்டும் அவன்தான் தமிழன். தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவற்கொரு குணமுண்டு, மானமும் வீரமும் உயிரென்று வாழவேண்டும் அவன்தான் தமிழன். இதற்கு மேலும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் அந்தப் புத்தகங்களை வாங்கி தீயிட்டு கொளுத்துவதைத் தவிர வேறு வழி கிடையாது. அவற்றையெல்லாம் நீங்கள் செய்ய வேண்டாம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் ஏன் என்றால் நீங்கள் படிக்கவேண்டும் வேலைக்கு செல்லவேண்டும். இவர்கள் வழக்கை போட்டு உள்ளே தள்ளி விடுவார்கள். இதற்காகவேதான் எங்களை நேந்த விட்டிருக்கிறார்கள். அதனால், அவற்றை எல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் தமிழ் சமூகம் ஒருமைப்பட வேண்டும், சாதி, மதம் என்று இல்லாமல் தேசிய இன உணர்வுக்குள் திரள வேண்டும், அப்போதுதான் அது சரியாக வரும். இங்கு கூடியிருப்பவர்கள் எல்லாம் சாதிக்காக மதத்துக்காக கூடவில்லை, தமிழ் சமூகம் தமிழ்ப் பெருங்குடி பிரச்சினை என்பதற்காக கூடியிருக்கிறார்கள்.

 

 நான் என் ஆத்தா அப்பனுக்காக அரசியல் செய்யவில்லை, என் தம்பி, தங்கைகளுக்காகவும் அவர்களுக்குப் பின்னால்வரும் தலைமுறைக்காகவும் அரசியல் செயகிறேன். நாம் தமிழர் எனும் கட்சியை நான் தொடங்கவில்லை, தொடருகிறேன். இதைத் தொடங்கியவர் பெருந்தலைவர் சீ.பா.ஆதித்தனார் தொடங்கினார். அவர் கட்சியை கலைக்காமல் திமுகவில் சேர்ந்துவிடுகிறார் அப்போது, "ஐயா நீங்கள் கட்சியை அப்படியே விட்டுவிட்டு திமுகவிற்கு செல்கிறீர்களே, உங்களுக்குப் பின் இந்த கட்சியை யார் நடத்துவார்கள்?" என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அதற்கு அவர் "வழி வழியே வரும் தமிழ் பிள்ளைகள் இதனை எடுத்து நடத்துவார்கள்" என்று பதிலளித்தார். அவர் சொல்லி கால் நூற்றாண்டுக்குப்பின் சிவகங்கையிலிருந்து ஒருவன் வந்து இந்த லட்சிய கனவை நகர்த்திக்கொண்டு போகிறேன். இந்த இழிவு என்பது ஒரு பகுதியே, இவன் இன்னும் நம்மளை கேவலம் செய்வான். சிலை வைக்க ஆயிரம் கோடி ரூபாய்க்கு செலவழிப்பான். ஆனால், ரூ. 300 கோடி மட்டும்தான் நிவாரணம் கொடுப்பான். இவர்களை ஒழிக்காமல் நீ நிம்மதியாக வாழ முடியாது. இன்று சொல்கிறேன் கேட்டுக்கொள்ளுங்கள் அண்ணன், சித்தப்பா என்ற உறவை எல்லாம் பார்க்காதீர்கள். சத்தியம், நேர்மை, உண்மை என்பதைதான் நீங்கள் பார்க்க வேண்டும்.