
சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றம் மையம் எனும் அரசு சாரா சிந்தனைக் குழு சார்பில் அன்மையில், ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பிரதமர் அலுவலக முன்னாள் இணைச் செயலாளரும், நிதி ஆயோக்கின் தலைமை செயல் அதிகாரியுமான பி.வி.ஆர். சுப்பிரமணியம் பங்கேற்றார். அந்த கருத்தரங்கில் அவர் வெளிபடுத்திய கருத்துகளால் தற்போது ஒன்றிய அரசின் மீது விமர்சனங்களும், விவாதங்களும் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தற்போது அரசியலில் பெரும் சர்ச்சையும் எழுந்துள்ளது.
அதில் அவர் பேசிய கருத்துகள் ஒரு யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகியுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு, ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ (The Reporters’ Collective) எனும் அமைப்பு பிரதமர் அலுவலகத்திற்கு விளக்கம் கேட்டு கேள்விகளை அனுப்பியுள்ளது. இந்தக் கேள்விகள் அனுப்பப்பட்ட சில மணி நேரத்தில் அந்த யூடியூப் சேனலில் இருந்து வீடியோ நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக சர்வதேச ஊடகமான அல் ஜஸீரா ஒரு நீண்ட கட்டுரையை வெளியிட்டுள்ளது. மேலும், அந்தக் கருத்தரங்கில் பி.வி.ஆர். சுப்பிரமணியம் பேசியிருப்பதையும் வெளியிட்டுள்ளது. அதன்படி சுப்பிரமணியம் கூறியதாவது; “2013ம் ஆண்டு 14வது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி, பிரதமர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவந்தார். அந்த சமயம், ஒன்றிய அரசின் வரியில் 50 விழுக்காடு மாநில அரசுக்கு கொடுக்க வேண்டும் என வலியுறுத்திவந்தார். ஆனால், மோடி பிரதமரான பிறகு அவரின் சிந்தனை செயல்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்றதும், மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டைக் குறைக்க நிதி ஆணையத்திடம் பிரதமர் மோடி திரைமறைவு பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு முயற்சி செய்தார். மத்திய அரசு 14 நிதிக் குழு அளித்த அறிக்கையில், மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக அதிகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடியும் அவரது நிதி அமைச்சகமும் 33 சதவீதமோ அல்லது அதற்கும் கீழ் குறைக்கவும் விம்பினர்.

ஆனால், இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி, அரசாங்கத்திற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒன்று நிதி ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்க வேண்டும் அல்லது அவற்றை நிராகரித்துவிட்டு புதிய ஆணையத்தை அமைக்க வேண்டும். ஆனால், நேரடியாகோ அல்லது மறைமுகமாகவோ பரிந்துரைகளின் மீது விவாதிப்பதோ, பேச்சு வார்த்தை நடத்துவதோ கூடாது.
இதனால், அப்போது பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பணியாற்றிய என் மூலம், நிதி ஆணையம் தலைவர் ஒய்.வி. ரெட்டியிடம், பிரதமர் நரேந்திர மோடி திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இரண்டு மணிநேரம் பேச்சு வார்த்தை நீடித்தது. ஆனால், நிதி ஆணையத்தின் பரிந்துரையில் அதன் தலைவர் ஒய்.வி. ரெட்டி உறுதியாக இருந்தார். இதன் காரணமாக இரு தினங்களில் ஒன்றிய நிதி நிலை அறிக்கை மறுசீரமைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதி உதவி குறைக்கப்பட்டது.

நிலைமை இப்படி இருக்க, 2015ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தில், ‘தேசத்தை வலிமைப்படுத்த நாம் மாநிலங்களை வலிமையாக்க வேண்டும். நிதி ஆணைய உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கலாம். நாங்கள் செய்யவில்லை. ஆனால், மாநிலங்கள் வளப்படுத்தப்பட வேண்டும், பலப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக, மாநிலங்களுக்கு 42 சதவீத வழங்கினோம். இவ்வளவு நிதியை வைத்துக்கொள்ள சில மாநிலங்களில் கருவூலம் கூட இல்லை ’ என்று பேசினார். இதற்கு பா.ஜ.க. உறுப்பினர்கள் சிரித்து கைதட்டினர்.
நிதி ஆணையத்தின் பரிந்துரையை வேறு வழியின்றி ஏற்றதால், ஒன்றிய நிதி நிலை அறிக்கையில், மகளிர் மற்றும் குழந்தைகள் நலநிதி 36 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 18 ஆயிரம் கோடி ரூபாயாக குறைக்கப்பட்டது. அரசாங்கத்தின் கணக்குகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லை என்றால் ஹிண்டன்பர்க் போன்ற அறிக்கைகள் மூலம் அவை வெளிப்படுத்தப்படலாம். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது உள்கட்டமைப்பு திட்டத்தில் நிதி முறைகேடு நடந்ததுஇவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

2024 - 2025க்கான ஒன்றிய நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கான கூட்டத் தொடர் வரும் ஜனவரி 31ம் தேதி கூட இருக்கிறது. 2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால், இந்த ஆண்டு இடைக்கால நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது. ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நிதி நிலைக் கூட்டத்தொடர் துவங்கவுள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதல் நிதி நிலை அறிக்கை தாக்கல், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் குடியரசுத் தலைவரின் முதல் பேச்சு என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற இருக்கும் நிலையில், நிதி ஆணையத் தலைவருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். மாநிலங்களுக்கான நிதி பகிர்வை குறைக்க முயன்றார். இது அரசியலமைப்பு விதிகளின்படி முறைகேடு என நிதி ஆயோக் சி.இ.ஓ. சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது இந்திய அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர் வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இதனை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கவும் அதிக வாய்ப்பு ஒருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.