Skip to main content

கிரண்பேடியே கிளம்பு! -கொந்தளிக்கும் கட்சிகள்

Published on 29/01/2019 | Edited on 29/01/2019

 

kiran bedi

 

புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்தும், கிரண்பேடி ஆளுநராக பொறுப்பேற்றும் இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் அதிகார போட்டியில் அப்பாவி மக்களும், அரசு நிர்வாகமும் அல்லாடிக் கொண்டிருக்கிறது.

2019 புத்தாண்டை முன்னிட்டு புதுவை ஆளுநர் மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கிரண்பேடி. தனது செயல்பாடுகளின் காணொளிகளை திரையிட்டு பின்னர் பேசினார். அப்போது, “"மத்திய அரசிடமிருந்து எவ்வளவு நிதி பெற்றுத் தந்தீர்கள்? விளம்பரத்துக்காகவே நீங்கள் செயல்படுவதாக முதல்வர் உள்ளிட்ட எல்லோரும் குற்றம்சாட்டுகிறார்களே? நீங்கள் ஆய்வு செய்த இடங்கள் எதுவும் மேம்பட்டதாக தெரியவில்லையே?'’என்று செய்தியாளர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்டதும், "மேற் கொண்டு கேள்விகள் கேட்கக் கூடாது' என்று முடித்துக்கொண்டார்.

கடந்த ஆண்டு நவம் பரில் நிதி அதி காரம் யாருக்கு என்பதில் அரசுக்கும் ஆளுநருக் கும் இடையே மோதல் ஏற் பட்டது. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் போனஸ் வழங்க முதலீட்டு மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கும்படி அரசு அனுப்பிய கோப்பிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் சம்பளம் மற்றும் போனஸ் வழங்க முடியவில்லை என்று முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

"மானிய நிதியை பொறுத்தவரை கவர்னருக்கு மட்டுமே முழு அதி காரம்'’என்று நிதித்துறை செயலாளர் கந்தவேலு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கையை "செல்லத்தக்கதல்ல' என்று முதல்வர் ஆணை பிறப்பித்தார். அதன்பிறகும், "நிதி வழங்கும் அதிகாரம் யூனியன் பிரதேசத்தில் ஆளுநருக்கே உண்டு' என்று போட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டார் கந்தவேலு. இதையடுத்து, கந்தவேலு மீது காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உரிமை மீறல் புகார் எழுப்பினர். பொங்கல் பரிசு தொகுப்பை அனைவருக்கும் வழங்க வேண்டுமென ஆளும் தரப்பு முயற்சி செய்ய, "வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்க முடியாது' என்று கிரண்பேடி விடாப்பிடியாக இருந்தார். இவற்றுக்கெல்லாம் தீர்வு, புதுச்சேரிக்கு “தனி மாநில அந்தஸ்து’’ பெறுவதும், கிரண் பேடியை வெளியேற்றுவதும்தான் என்று டெல்லியில் போராட்டத்தை தொடங்கினார்.

 

kiran bedi
                                               பாஸ்கரன், சலீம், சுவாமிநாதன்



டெல்லி ஜந்தர் மந்தரில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் உள்பட 21 அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் புதுச்சேரி பேரவை எதிர்க்கட்சி யான என் ஆர். காங் கிரஸ் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் பங்கேற்கவில்லை.


இந்த நிலையில்தான் பொங்கல் பரிசு பூகம்பம் மீண்டும் வெடித்தது. கிரண்பேடியின் அதிகார வரம்பு மீறல் குறித்து கருத்தரங்கம், தெருமுனை பிரச்சாரங்களில் கம்யூனிஸ்ட்டுகள் ஈடுபட்டு வருகின்ற னர். அவர்களுடைய எதிர்ப்பு குறித்து, ‘"கம்யூனிஸ்ட்கள் காசு வாங்கிக்கொண்டு ரோட்ல கத்துவாங்க'’என்று கிரண்பேடி சமூக வலைத்தளங்களில் பரப்பியதை கண்டித்து கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள் கூட்டியக்கம் சார்பாக கிரண்பேடியை கண்டித்து போராட்டங்கள் நடை பெற்றன.

இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம் நம்மிடம், “""அரசு ஊழியர்களை மாணவர்கள் போலவும், கிரண்பேடி ஆசிரியர் போலவும் நடத்துவது தவறான முன்னுதாரணம். வளர்ச்சி திட்டங்களுக்கு முட்டுக்கட்டை போட்டு, நிர்வாகத்தை முடக்கப் பார்க்கிறார்''’’என்றார்.


 

narayanasamy



"போட்டி அரசாங்கம் நடத்தும் கிரண்பேடியே வெளியேறு!'’எனும் முழக்கத்தோடு போராட்டங் களை முன்னெடுக்கிறது புதுச்சேரி மாணவர்கள் கூட்டமைப்பு. அதன் தலைவர் சீ.சு.சுவாமிநாதன் நம்மிடம், ""புதுச்சேரியில் புதியதாக 537 காவலர் பணிகள் நியமிக்கப்படவுள்ள தாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. கடந்த 8 ஆண்டுகளாக காவலர்கள் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படாததால் அந்த பணிக்குச் செல்ல தகுதியுடைய பட்டதாரி இளைஞர்கள் காத்திருந்து வயது அதிகரித்துள்ளது. எனவே "வயது வரம்பை தளர்த்த வேண்டும்' என கோரிக்கை விடுத்தோம். தற்போது பொது 18-22, (மிக) பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 18-25, தாழ்த்தப் பட்ட-பழங்குடி இனத்தவருக்கு 18- 27 என வயது வரம்பு உள்ளது. ஆனால் மத்திய அரசின் ரெயில்வே துறைக்கு 2 ஆண்டுகள் அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் புதுச்சேரி மாநிலம் பின்பற்றும் வயது வரம்பைவிட இரண்டு ஆண்டுகள் அதிகமாக உள்ள நிலையில் புதுச்சேரி மாநிலம் மட்டும் இரண்டு ஆண்டு குறைத்து வயது வரம்பை வைத்திருப்பது ஏன்? இந்த விவகாரத்திலும் முதல்வரின் முடிவுகளை கிரண்பேடி ஏற்க மறுத்து முட்டுக்கட்டை போடுகிறார்''’என்றார்.

இந்த முடிவுறா முட்டல், மோதல்கள் குறித்து புதுச்சேரி வளர்ச்சி கட்சி தலைவர் பாஸ்கரன் நம்மிடம், ""அரசியல்வாதிகளும் ஆளுநரும் போட்டி போட்டுக்கொண்டு நிர்வாகத்தை சீர்குலைக்கிறார்கள். ஆளுநரின் அதீதமான தலையீடுகள் அதிகரிக்கும் நிலையில் "கிரண்பேடியே கிளம்பு'’என்று புதுச்சேரி கிளர்ந்தெழும்'' என்கிறார்.

"கிரண்பேடியை விரட்டினால்தான் புதுச்சேரி புத்துணர்ச்சி பெறும்' என்று ஆட்சியாளர்களும், "எங்கள் தேவைகள் எப்பொது நிறைவேறுவது' என்று மக்களும் காத்திருக்கிறார்கள்.