ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அந்த நாட்டில் ஆட்சியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றியுள்ளதையடுத்து, அங்குள்ள தங்கள் குடிமக்களை அழைத்து வர பல்வேறு நாடுகள் தொடர் நடவடிக்கை எடுத்துவருகின்றன. அதேபோல் ஆப்கானிஸ்தான் மக்களும் தலிபான்களுக்கு பயந்து, தங்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதேபோல் ஆப்கான் பெண்களின் உரிமைகளும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் அமைந்துள்ள விமான நிலையத்திற்கு வெளியே மனித வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் 60 ஆப்கானிஸ்தானியர்களும், 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்த தாக்குதலை நடத்தியவர்களை வேட்டையாடி, பழிவாங்குவோம் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம், இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தின் ஒரு பகுதியாக செயல்படும் ஐஎஸ்-கோராசன் என்ற அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஐஎஸ்-கோராசன் (ஐஎஸ்-கே) என்பது கோராசன் என்ற வரலாற்று ரீதியிலான மாகாணத்தை குறிப்பதாகும்.
ஐஎஸ்-கோராசன் - தலிபான் மோதல் பின்னணி!
ஐஎஸ்-கோராசன் என்பது பாகிஸ்தானின் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற பயங்கரவாத அமைப்பில் இருந்து அதிருப்தியில் வெளியேறியவர்களும், ஆப்கானிஸ்தான் தலிபான் அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் சேர்ந்து உருவாக்கிய பயங்கராவத அமைப்பாகும். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்போம் என கூறி இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. பின்னர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கம், ஐஎஸ்-கோராசன் தீவிரவாதிகளை தங்கள் இயக்கத்தில் இணைத்துக்கொண்டத்தோடு, ஐஎஸ்-கோராசனை மத்திய ஆசியாவில் தங்களது நீட்சியாக அறிவித்தது.
இதன்பின்னர் ஐஎஸ்-கோராசன், ஆப்கானிஸ்தானில் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வந்தது. ஐஎஸ்-கோராசனுக்கும் தலிபான்களுக்கும் மோதல் ஏற்பட காரணம் மத அடிப்படைவாதம் தொடர்பானது. தலிபான்கள், ஐஎஸ்-கோராசன் தீவிரவாதிகள் இருவரும் இஸ்லாமின் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள்.
ஆனால் தலிபான்கள், இஸ்லாமிய கொள்கைகளுக்கு புத்துயிர் ஊட்ட சன்னி பிரிவுக்குள் தொடங்கப்பட்ட இயக்கமான தியோபாண்டி (Deobandi) இயக்கத்தை பின்பற்றுபவர்கள். ஐஎஸ்-கோராசன் அமைப்பினரோ சன்னி பிரிவுக்குள் தொடங்கப்பட்ட இன்னொரு மறுமலர்ச்சி இயக்கமான சலாபிஸ்ட் இயக்கத்தை பின்பற்றுபவர்கள். ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், தலிபான்களை விடவும் தீவிரமாக மத அடிப்படைவாதத்தை பின்பற்றுபவர்கள். தாங்களே உண்மையான ஜிஹாத்தை மேற்கொள்வதாக நம்புகிறவர்கள். இதனையடுத்து இவர்களுக்கும் தலிபான்களுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.
தெற்கு ஆப்கானிஸ்தானில் அதிகளவில் இருக்கும் இந்த ஐஎஸ்-கோராசன் அமைப்பினர், ஒருகட்டத்தில் வடக்கு ஆப்கானிஸ்தான் மாகாணங்களில் சில பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஆனால் அமெரிக்க படைகளின் தாக்குதலாலும், தலிபான்களின் தாக்குதலாலும் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை இழந்தனர்.
ஐஎஸ்-கோராசன் என்பது தலிபான்களை விட மிகவும் சிறிய அமைப்பாகும். கிழக்கு ஆப்கானிஸ்தானில் 1,500 முதல் 2,200 ஐஎஸ்-கோராசன் அமைப்பின் உறுப்பினர்கள் இருக்கலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று கூறுகிறது. தற்போதைய நிலையில் தலிபான்களுக்கும் - ஐஎஸ் கோராசன் அமைப்பினருக்கும் மோதல் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே தலிபான் எதிர்ப்பு குழுவிற்கும் தலிபான்களுக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலை நீடிக்கிறது. அதேபோல் காபூல் தாக்குதலை நடத்தியவர்களை பழி வாங்குவோம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இவையனைத்தும் தலிபான்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியாக கருதப்படுகிறது. ஆனால் இந்த சூழல் தலிபான்களை விட அப்பாவிகளையே அதிகம் பாதிக்கும் என்பதுதான் வேதனை.