திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே குற்றச்சாட்டுக்கு உள்ளாகும் அமைச்சர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்தப்பட்டுவருகிறது. எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் தொடங்கிய இந்த ரெய்டு, வேலுமணி, வீரமணி என்று தொடந்து நடைபெற்ற நிலையில், தற்போது சி. விஜயபாஸ்கர் வரை தொடர்கிறது. அரசியலில் இருப்பவர்கள் தொழில் செய்யக் கூடாதா? பணம் சம்பாதித்தாலே அனைவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்று கூறுவது நியாயமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை திமுகவின் ராஜீவ் காந்தியிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தம். நம்முறைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
திமுகவின் இந்த ஐந்து மாத கால ஆட்சியை எப்படி பார்க்கிறீர்கள், சிறப்பாக செயல்படுகிறது என்று உங்கள் கட்சியினர் கூறுவதை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா?
திமுகவின் இந்த ஆட்சியை மக்களுக்கான ஆட்சியாகவே நாங்கள் பார்க்கிறோம். திமுகவுக்கு வருவதற்கு முன்பு எத்தனையோ முறை திமுக உள்ளிட்ட திராவிட இயக்கங்களை நாம் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறோம். அப்போதும் சரி, இப்போதும் சரி நாம் மேடையில் பேசுவது எல்லாம் சரி என்ற மனநிலையில் நான் எப்போதும் இருப்பதில்லை. அது ஏற்படுத்துகின்ற தாக்கம், மக்களின் மனநிலைகளுக்கு ஏற்ப அதில் மாற்றம் தேவைப்பட்டால் என்னை மாற்றிக்கொள்ள நான் எப்போதும் தயாராகவே இருந்திருக்கிறேன். அந்த அடிப்படையில் கருத்துக்களைக் கால சூழ்நிலைகளுக்கு ஏற்ப நாம் சோதித்து மறுபரிசீலனை செய்வதில் தவறில்லை. பாஜக போன்ற மதவெறி இயக்கங்களைத் தத்துவார்த்த ரீதியாக எதிர்கொள்ள திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற இயக்கம் தற்போதைக்குத் தேவை. எனவே மக்கள் நலன் சார்ந்தும், பாசிச சக்திகளுக்கு எதிராகவும் தற்போது திமுக சிறப்பாக செயல்பட்டுவருகிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ந்து ரெய்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதைப் பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக விமர்சனம் செய்துள்ளதைப் பற்றி?
அரசியலில் ஈடுபடுபவர்கள் தொழில் செய்யக் கூடாது என்ற எந்த சட்டமும் இல்லை. எல்லா வகையான தொழிலும் செய்யலாம். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டு நியாயமான வழிமுறைகளில் செய்ய வேண்டும். நான் ஒரு அரசியல்வாதி, நான் வக்கீல் தொழில் செய்கிறேன். எனக்கு கிடைக்கும் ஊதியத்தில் நான் முறையாக வருமான வரி கட்ட வேண்டும். அதுதான் இந்திய அரசியலமைப்பு வகுத்துள்ள சட்டத்திட்டம். எனக்கு ஒருவர் வழக்கிற்காக 2 கோடி பணம் தருவதாக கூறினால், அந்தப் பணத்திற்கு நான் முழுமையான வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும். விஜயபாஸ்கர் அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவருடைய வருமானம் 6 கோடி என்று காட்டியுள்ளார். அதற்காக வருமான வரியும் முறையாக கட்டியுள்ளார். அடுத்தமுறை தேர்தலில் போட்டியிடும்போது அவர் தனக்கு சொத்து மதிப்பு 56 கோடி எனக் கூறி, அதற்கான வருமான வரியைக் காட்டியுள்ளார்.
இவர் அமைச்சராவதற்கு முன்பு தொழில் செய்திருக்கலாம், அதன் மூலம் வருமானம் பார்த்திருக்கலாம். ஆனால் அமைச்சராக இருந்த அந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் இவர் வருமானம் தரும் எந்த தொழிலையும் செய்யக் கூடாது என்று அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இப்படி இருக்கையில், அவர் இந்த அளவு சொத்துக்கு வருமானவரி கட்டியிருந்தாலும் சொத்து எப்படி வந்தது என்ற கேள்வி இயல்பாகவே அனைவருக்கு வரும். அந்த வகையில், இந்த சொத்துக்கள் அனைத்தும் பினாமிகள் மூலம் பெறப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அதிகாரிகள் தற்போது விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதில் அனைத்து தகவல்களும் நிச்சயம் வெளிவரும். வீரமணியிடம் 200 மடங்கு, வேலுமணியிடம் 300 என்று வருமானம் எப்படி அதிகரித்தது என்ற சந்தேகம் இயல்பாகவே அனைவருக்கும் வரும். எல்லாமே பினாமிகள் மூலம் வாங்கப்பட்ட சொத்துக்கள்தான்.
இதை எப்படி கண்டுகொள்ளாமல் ஒரு மக்கள் அரசு செயல்படும். புகாருக்குள்ளாகும் அனைவரும் இந்த சோதனையில் சிக்குவார்கள். அரசியலில் தனிப்பட்ட நேர்மை மிக முக்கியம். இல்லை என்றால் கடுமையான நெருக்கடியை நாமே சந்திக்க வேண்டிவரும். அமைச்சராக இருப்பவர் தொழில் செய்யக் கூடாது, ஆனால் அவரின் வருமானம் மட்டும் 100 மடங்குகளில் அதிகரித்தால் அரசாங்கம் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் நாங்கள் செய்வோம். இதில் அதிமுக தலைமை குற்றம் சொல்வதற்கு இடமில்லை. விஜயபாஸ்கருக்கு கூடுதலாக வந்த 28 கோடி பணத்துக்கு அவர் முறையாக கணக்கு காட்ட வேண்டும். ஆனால் அவரால் கணக்கு காட்ட முடியில்லை. சொத்து சேர்த்தால் லஞ்ச ஒழிப்புத்துறை வரத்தான் செய்யும். அதற்காக அரசைக் குறை சொல்வதை எப்படி புரிந்துகொள்வது எனத் தெரியவில்லை.