சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள், தேவைப்பட்டால் சந்திப்போம், வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக அதிமுக முன்னாள் எம்.பி கே.சி பழனிசாமி அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம்.
நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில் வருமாறு, " சென்ற முறை டெல்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சென்று சந்தித்தார். அப்போது எடப்பாடியின் உறவினர்கள் வீட்டில் எல்லாம் ரெய்டு நடந்துகொண்டிருந்தது. இந்த முறை அப்படி எந்த ரெய்டும் நடைபெறவில்லை. அதனால் அமித்ஷாவை அவர் சந்திக்கவில்லை. அப்படி ரெய்டு நடைபெற்று வந்தால் அவர் இந்த முறையும் அவரை சென்னையில் சந்தித்திருப்பார்.
அவருக்கு வேண்டியவர்களிடம் ரெய்டு போகச் செய்தால் உடனடியாக அவர் எங்கே இருந்தாலும் சந்திப்பார். அப்போது எல்லாம் அவர் தனிக்கட்சி நான் தனிக்கட்சி என்று பேசமாட்டார். பக்குவமாக நடந்துகொள்வார். அதிமுக தொண்டர்கள் பாஜக கூட்டணியை விரும்பவில்லை. எடப்பாடி தன்னுடைய சுயநலத்திற்காக இந்தக் கூட்டணியை முன்பு அமைத்தார். தேவையில்லை அதனால் அமித்ஷாவை சந்திக்கவில்லை என்று கூறும் இவர், இதற்கு முன்பு ஓடி ஓடி எதற்காக அவரை டெல்லி போய் சந்தித்தார்.தன்னுடைய தேவைக்கு மட்டும் எத்தனை தடவை வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று எடப்பாடி நினைக்கிறாரா?
டெல்லியில் சந்தித்தபோது தமிழக மக்கள் நலனில் அக்கறை காட்டுவதைப் போல பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை அவரிடம் கொடுத்ததாகக் கூறினாரே அந்த விஷயத்தில் இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமித்ஷாவிடம் நேரில் கேட்கலாமே? அதையாவது கேட்டாரா? பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பார்கள். எடப்பாடி பழனிசாமி அதையாவது ஒழுங்காகச் செய்ய வேண்டும். இப்படி ஏடாகூடமாகப் பேசி மாட்டிக்கொள்ள வேண்டாம். அவருக்குக் கட்சியைப் பற்றியோ தொண்டர்களைப் பற்றியோ சிறிதும் கவலை இல்லை. தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைத் தாண்டி வேறு எந்த குறிக்கோளும் அவருக்கு இல்லை.
சசிகலா, தினகரன், எடப்பாடி, பன்னீர்செல்வம் என பாஜக நான்கு அடிமைகளைத் தமிழகத்தில் வைத்துள்ளது. இவர்களில் யார் சிறந்த அடிமை என்ற போட்டி அவர்களுக்குள் தற்போது ஏற்பட்டுள்ளது. அதில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்ற போட்டி அவர்கள் நான்கு பேரிடமும் இருக்கிறது. ஆகையால் பாஜக இவர்களை வைத்து பூச்சாண்டி காட்டப் பார்க்கிறது. அதில் அவர்களால் வெற்றிபெற முடியாது. இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் பாஜகவால் தமிழகத்தில் வெற்றிபெற முடியாது. அதை பாஜகவுக்கு விரைவில் மக்கள் புரிய வைப்பார்கள்.