கடந்த அக்டோபர் 9ஆம் தேதியன்று சென்னையிலிருந்து புனே செல்வதற்காக சென்னை விமான நிலையம் சென்ற நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபாலை எந்த வித நெறிமுறைகளையும் பின்பற்றாமல், காரணமும் சொல்லாமல், உடன் வந்தவர்களுக்கும் தகவல் சொல்ல விடாமல் கைது செய்தது தமிழக காவல்துறை. எங்கு கொண்டு செல்கிறோம் என்றே தெரிவிக்காமல், சில மணிநேர அலைக்கழிப்புக்குப் பிறகு சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்று, ஆளுநர் மாளிகையிலிருந்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் சட்டப்பிரிவு 124ன் கீழ் வழக்குப் பதிவு செய்து எழும்பூர் அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது காவல்துறை.
நீதிமன்றத்தில் ஆசிரியர் நக்கீரன் கோபால் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், 'சட்டப்பிரிவு 124 என்பது, குடியரசுத்தலைவரையோ ஆளுநரையோ பணி செய்யவிடாமல் தடுத்தல், தாக்குதல் போன்ற குற்றங்களுக்கானது. இந்த இரண்டு செயல்களுக்கும் சற்றும் தொடர்பில்லாத நக்கீரன் கோபாலை, அடிப்படையே இல்லாமல் போடப்பட்டுள்ள இந்த வழக்கின் கீழ் கைது செய்தது தவறு' என வாதிட்டார். இந்த வாதத்துக்கு மிகுந்த பலம் சேர்த்தது, நீதிமன்றத்தில் 'தி இந்து குழும'த்தின் தலைவரான ராம் முன்வைத்த கருத்துகள். இந்த வழக்கின் விசாரணையின் போது, மூத்த பத்திரிகையாளர் என்ற முறையில் ராமின் கருத்துகளைக் கேட்டார் நீதிபதி. அப்போது, 'சட்டப்பிரிவு 124இன் கீழ் ஒரு பத்திரிகையாளர் கைது செய்யப்படுவது மிகத் தவறான முன்னுதாரணமாகிவிடும்' என்று பத்திரிகை சுதந்திரத்தை முடக்கும் அதிகார வர்க்கத்துக்கு எதிராக தீர்க்கமாக தன் கருத்துகளைக் கூறினார். இந்த வழக்கில் நக்கீரன் கோபாலை கைது செய்ய முடியாது என்று கூறி அவரை விடுவித்தார் நீதிபதி கோபிநாத்.
பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான இந்த அடக்குமுறையின்போது தானே முன்வந்து அதைக் காக்க உறுதுணையாக இருந்த இந்து என்.ராம் இல்லத்தில் கடந்த வியாழன் அன்று அவரை சந்தித்து மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தார் நக்கீரன் ஆசிரியர். குடும்பத்துடன் சந்தித்த அவர்கள், காலை உணவுடன், கருத்து சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக சமீப காலமாக வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்தும் அவற்றை ஒன்றாக நின்று எதிர்கொள்வது குறித்தும் உரையாடினர்.