ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் பா.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வெளிநாடு சென்று இந்தியா திரும்புகையில் சென்னை விமான நிலையத்தில் சிபிஐ-யால் திடீரென கைது செய்யப்பட்டார்.
![Karthi Chidambaram arrest](http://image.nakkheeran.in/cdn/farfuture/3k2Rr0rtNb_Kd04isHhO7BbFWOzjPTmdFhlDqOZfJVQ/1533347656/sites/default/files/inline-images/karthi%20chidambaram.jpg)
அவரது இந்த அதிரடி கைதுக்கான காரணமாக கூறப்படும் குற்றச்சாட்டு இதுதான்...
ஐ.என்.எக்ஸ் மீடியா என்ற நிறுவனம் மொரீஷியஸ் நாட்டிலிருந்து முதலீடுகள் பெற்றுள்ளது. அப்படி பெறும்பொழுது வரையறைகளையும் விதிகளையும் மீறியுள்ளது. அப்படி மீறியதற்காக எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, அட்வான்டேஜ் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டிங் லிமிட்டட் (Advantage Strategic Consulting Limited) என்ற நிறுவனத்திற்கு பணம் அளித்துள்ளது. இந்த நிறுவனம் கார்த்திக் சிதம்பரத்துக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது. இவ்வாறு, அந்நிய முதலீட்டு மோசடிக்கு தன் தந்தை ப.சிதம்பரத்தின் பதவியைப் பயன்படுத்தி, பணம் பெற்றுக் கொண்டு அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக சட்ட விரோதமாக உதவியிருக்கிறார் கார்த்திக் சிதம்பரம்.
கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மொரீஷியஸ் நாட்டிலிருந்து வரும் முதலீடுகளுக்கு வரி உள்ளிட்ட விதிகள் தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடந்து வருகிறது. கார்த்திக் சிதம்பரம் தனது மகனை கேம்ப்ரிட்ஜ் பல்கலை கழகத்தில் சேர்க்க பிரிட்டன் செல்லவேண்டுமென்று அனுமதி கோரினார். கார்த்திக் சிதம்பரம் மற்றும் ஐ.என்.எக்ஸ்.மீடியா இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்ததால் அவர் வெளிநாடு செல்ல அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி வந்தது. அங்கு சென்றால், தனது வங்கிக் கணக்குகளை மாற்றி அமைக்கக்கூடும் என்றும் கூறியிருந்தது.
![chidambaram with karthi](http://image.nakkheeran.in/cdn/farfuture/FM1QuxV01qa3nCEPISVQ5sf-0soIUSBy3Nx5d7cj01s/1533347646/sites/default/files/inline-images/dc-cover-6a8i0m2sng9dds6hag47vlktg3-20160301172120.medi_.jpeg)
கார்த்திக் சிதம்பரம் விசாரணைக்கு ஆஜராகாததால், கண்காணிக்கபடும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது. இதை ரத்து செய்யக்கோரி கார்த்திக் சிதம்பரம் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்துக்கு மாற்றப்பட்டது. மேலும், தான் வெளிநாடு செல்ல அனுமதி வேண்டும் என்றும் கார்த்திக் சிதம்பரம் மனுதாக்கல் செய்திருந்தார். வரும் 28-ஆம் தேதிக்குள் நாடு திரும்பவேண்டும் என்ற நிபந்தனையோடு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கார்த்திக் சிதம்பரத்திற்கு அனுமதி வழங்கினார். மேலும் அவர் வெளிநாட்டில் தங்கப்போகும் இடங்கள் பற்றிய விவரங்களை சிபிஐக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்திராணி முகர்ஜி இந்த வழக்கில் சில வாக்குமூலங்களை அளித்திருப்பதாகவும் அதனால் தான் லண்டன் சென்றுவிட்டு நாடு திரும்பிய கார்த்திக் சிதம்பரத்தை இன்று (28 பிப்ரவரி 2018) காலை, விமான நிலையத்திலேயே சிபிஐ கைது செய்தது.