உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.47 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 50க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பலரும் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள அவரவர்களுக்கு முடிந்த வகையில் முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்.உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன் உச்சகட்டமாக இந்தியா முழுவதும் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை உத்தரவு அமலில் இருந்தும் சாலைகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்படுகின்றது. இதனைக் குறைக்க மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கரோனா தொற்று தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில்,இந்த சர்ச்சைகள் தொடர்பாக ஆளூர் ஷாநவாஸிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,
கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்கத்தின் அந்தெந்த மாநில அரசுகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றது. இந்நிலையில், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் முஸ்ஸிம் அமைப்புகள் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்து அந்த கூட்டம் கடந்த மாதம் 8ம் தேதி முதல் 20 வரை நடந்து முடிந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 50 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தின் காரணமாகவே கரோனா தொற்று பரவுவதாகச் செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றது. இதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
நீங்கள் கூறும் இந்தக் காலகட்டத்தில் தடை என்பதே கிடையாது. அந்தக் கூட்டம் நடைபெற்ற காலத்தில் நாடாளுமன்றம் நடைபெற்றது. சட்டமன்றம் நடைபெற்றது. எனவே அப்போது கூட்டம் கூடக்கூடாது என்ற எந்தச் சட்டமும் இல்லை.மத்திய அரசு ஊரடங்கு பிறப்பித்த பிறகு இந்தக் கூட்டம் நடைபெறவில்லை.அப்படி நடைபெற்றால் கூட இதை ஒரு காரணமாகச் சொல்லலாம்.ஆனால், கூட்டம் கூடுவது தடை செய்யப்படாத காலகட்டத்தில் ஏன் கூடினீர்கள் என்று தற்போது கேள்வி எழுப்பப்படுகின்றது.வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் கலந்து கொண்டார்களே? என்று ஒருசிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் அந்தக் கூட்டத்தில் மட்டும் தான் கலந்து கொண்டார்களா? அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வந்தாரே, அவரை வைத்து மிகப்பெரிய கூட்டத்தைக் கூட்டினார்களே அது ஞாபகம் இல்லையா? அந்த நேரத்தில் இந்தியாவில் வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டு தானே இருந்தது. எப்பொழுது இருந்து வெளிநாட்டினர் இந்தியா வர தடை போட்டார்கள், விசா கொடுக்க மறுத்தார்கள்? எல்லாம் இந்த ஒரு வாரக்காலத்தில் தானே? பிறகு எப்படித் தடை உத்தரவுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தை, தற்போது பிடித்துக்கொண்டு தொங்குவது எதற்காக?
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பதை அரசாங்கம் அடையாளப்படுத்தி இருக்கின்றதே?
எல்லா இடத்திலும் தான் அந்த பாதிப்பு இருக்கின்றது. இன்றைக்கு ஃபீனிக்ஸ் மால்-ஐ அரசாங்கம் அடையாளப்படுத்தி இருக்கின்றது. 11ம் தேதி முதல் 17ம் தேதி வரை அந்த மாலுக்கு வந்தவர்கள் எல்லாம் தங்களை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. ஏன் என்றால் அங்கே பாதிக்கப்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். நிலமை இப்படி இருக்க அங்கே ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்களே அவர்களை எப்படிச் சோதிக்க போகிறீர்கள், முதலில் அவர்களை எப்படிக் கண்டுபிடிப்பீர்கள். டெல்லிக் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பெயர் பட்டியல் இருக்கின்றது. அதன் மூலம் அவர்களை அடையாளப்படுதுகிறீர்கள். ஆனால் இந்த மாதிரி மால்களில் கூடியவர்கள் எப்படிக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்.
அரசாங்கம் தான் அவர்களைத் தாங்களே சோதித்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்களே?
அந்த வரைமுறைதானே இந்தக் கூட்டத்துக்கும் பொருத்தும். அதான் அழகாக சொல்லிவிட்டீர்களே? அரசாங்கம் என்ன செய்ய முடியும், அவர்களாகவே வந்தால் தானே முடியும் என்று.அப்புறம் எதற்கு இந்தக் கூட்டத்தை ஒரு சமூக விரோத செயல் போல சித்தரிக்க வேண்டும்.அவர்களால்தான் இந்த தொற்று பரவியதைப் போல் ஏன் தகவல்களைப் பரப்பிவிட வேண்டும்.வெளிநாட்டில் இருந்து வந்திருக்கார்கள் என்றால் அனுமதி இருந்தது அதனால் வந்திருக்கிறார்கள். அதில் என்ன தவறு இருக்கின்றது.
அவர்கள் வந்ததை அரசுக்கு முறையாகத் தெரிவிக்கவில்லை என்று கூறுகிறார்களே?
வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எப்படி அரசுக்குத் தெரியாமல் வர முடியும். இங்கிருப்பவர்கள் கூடுவதைச் சொன்னால் கூட ஏற்க வாயப்புள்ளது. அதுவும் கூட டெல்லி மாதிரி ஒரு பெரிய இடத்தில் ஒரு கட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் கூடும் போது அது எப்படி அரசுக்குத் தெரியாமல் நடக்க முடியும். உள்ளூர் காவலர்களுக்குத் தெரியாமல் நடக்க முடியும்? அவர் கூட்டம் கூட்டியது ஊரடங்கிற்கு முன்பு. கூட்டம் கூடுவதற்கு அப்போது அனுமதி உண்டு. ஆனால், மாநாட்டை ஏற்பாடு செய்தவர்கள் மீது வழக்குப் போடுவேன் என்று சொல்வதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
எதற்காக, என்ன சொல்லி வழக்குப் போடுவார்கள்? ஊரடங்கிற்கு முன்னால் நாடாளுமன்றத்தில் கூடியிருக்கிறார்களே, சட்டசபை கூடியிருக்கிறதே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? அரசாங்கமே மக்கள் கூடியிருக்கிறார்கள் என்று வணிவ வளாகங்களைக் கைக்காட்டுகிறது. இந்தியா முழுவதும் மக்கள் கூடி கலைந்திருக்கிறார்கள். அப்படி இருக்கையில் இதைப் பெரிது படுத்த வேண்டிய அவசியம் எங்கிருந்து வந்தது.