சூரியவள்ளி என்ற பெண்மணி மிரட்சியுடன் பேசும் ஒரு வீடியோ, நாகர்கோவில் பகுதியைப் பரபரப்பில் மூழ்கடித்து வருகிறது.
விசாரணைக்கு வந்தவர்களை சித்திரவதை செய்து, கற்களால் பற்களை உடைத்த அம்பாசமுத்திரம் ஏ.எஸ்.பி. பல்பீர்சிங் விவகாரத்தின் தகிப்பு எகிறிக் கொண்டிருக்கும் நிலையில், நாகர்கோவில் அருகே உள்ள வடசேரி காவல்நிலையத்திலும் இதேபோன்ற சித்ரவதைச் சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பதை அந்த வீடியோ பதிவு உறுதிப்படுத்தியது.
அந்த வீடியோவில் பேசிய சூரியவள்ளி, அந்தப் பகுதியில் உள்ள ராஜாவூரைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மனைவி. அவர் அந்த வீடியோவில், “இரும்பு ஆக்கர் கடை நடத்திவரும் என் கணவரைத் தேடி 11 ஆம் தேதி மதியம், மஃப்டியில் 6 போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது சாப்பிட்டு விட்டு படுத்திருந்த என் கணவரை, ‘கஞ்சா விற்கிறியா’ன்னு கெட்டவார்த்தையில் பேசி, ‘உனக்குக் கூட்டாளி யாரெல்லாம் இருக்காங்க... சொல்லு’ன்னு கேட்டு மாறி, மாறி அடிச்சாங்க. உடனே நான் சத்தம் போட... அதைப் பார்த்த, தரையில் உட்கார்ந்திருந்த மாற்றுத்திறனாளியான என் மகள் தங்கசெல்வியும் அழுது கதற, எங்க ரெண்டு பேரையும் அந்த போலீஸ்காரங்க மிரட்டி அடிக்க வந்தார்கள்.
பின்னர் என் கணவரைப் பிடித்துச் சென்ற அந்த போலீஸ்காரங்க, ‘விசாரிச்சிட்டு 5 மணிக்கு விட்டுருவோம். இதுபற்றி எந்த வக்கீல்கள்கிட்டயும் சொல்லக்கூடாது. சொன்னால் நடக்கிறதே வேற’ என்றும் எச்சரித்தனர். ஆனால், இரவு ஆன பிறகும் அவர்கள் என் கணவரை விடாததால் போலீசில் போய் கேட்டோம். ‘நாங்க யாரும் பிடிச்சிட்டு வரலைன்னும், ஸ்பெஷல் டீம் புடிச்சிருப்பாங்க’ன்னும் சொன்னாங்க. ஆனால், மறுநாள் மதியம் 12 மணிக்கு வடசேரி போலீசில் இருந்து ஃபோன் செய்து, ‘உன் கணவர் இங்குதான் இருக்கிறார். கஞ்சா கேஸ் போட்டிருக்கோம். ஸ்டேஷன் ஜாமீனிலயே விடுகிறோம். வந்து கூட்டிட்டுப் போ’ன்னு சொன்னாங்க. நானும், என் தங்கச்சியும் போலீஸ் ஸ்டேஷன் போய் அவரை கூட்டிட்டு வர்ற வழியிலேயே, என் கணவர் மயக்கம் போட்டு கீழே விழுந்தாரு. உடனே திருப்பதிசாரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு ஸ்கேன் எடுத்துப் பார்த்தபோது, போலீஸ் தாக்கியதில் என் கணவருக்கு 6 இடத்தில் விலா எலும்பு முறிந்துள்ளதும் அதேபோல் போலீசார் அடித்த அடியில் என் கணவரின் கிட்னி பாதிக்கப்பட்டிருப்பதும், அவர் காது கிழிந்திருந்ததும் தெரியவந்தது.
இதற்கெல்லாம் தனியார் ஆஸ்பத்திரியில் செலவு செய்யும் அளவுக்கு வசதி இல்லாததால், ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரிக்கு என் கணவரைக் கொண்டு போனோம். அங்கு சரியான சிகிச்சையளிக்காததால், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்” என்று பதற்றம் மாறாமலேயே பேசியிருந்தார் அவர்.
அந்தப் பேச்சே, என்ன நடந்திருக்கும் என்பதை உணர்த்தியது. இதே போல் தாக்குதலுக்கு ஆளான ஆறுமுகத்தின் மகள் தங்கசெல்வியும் ஒரு வீடியோவில் பேசியிருக்கிறார். அதில் அவர், “எங்க கண் முன்னையே போலீசார் பயங்கரமாக அப்பாவைத் தாக்கினார்கள். இதில் எங்க அப்பா பலத்த காயம் அடைந்தார். அதனால் எங்களுக்கு நியாயம் வேண்டும்” என்று கண்ணீருடன் தேம்பி இருக்கிறார். இதைத் தொடர்ந்து, ஆறுமுகத்தின் மனைவி சூரியவள்ளியை நாம் தொடர்பு கொண்டபோது, தன்னுடைய தம்பி சுபாஷிடம் பேசும்படி சொன்னார். அதன்படி நாம் சுபாஷை தொடர்புகொண்டோம். அவரோ, “நாளை பேசுங்கள்” என்று ஃபோனை கட் பண்ணிவிட்டார்.
சொன்னது போலவே மறுநாள் அவரை, நாம் தொடர்பு கொண்டபோது, “வடசேரி இன்ஸ்பெக்டர் சமரசம் பேசிக்கொண்டிருக்கிறார். அவருடைய பதிலைக் கேட்டுவிட்டு, உங்களிடம் பேசுகிறோம்” என்றார் கவலையாக. மறுபடியும் அவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் நம்மைத் தவிர்ப்பதிலேயே குறியாக இருந்தார். ஆறுமுகத்தை நேரில் சந்தித்து முழு விவரத்தையும் தெரிந்துகொள்ளலாம் என்று அவரை சந்திக்க நாம் மருத்துவமனைக்குச் சென்றபோது, நம்மைச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக சிகிச்சை பெற்ற அறையையே அவர்கள் மாற்றியிருந்தார்கள். இதுகுறித்து சுபாஷிடம் நாம் கேட்டபோது, ஏதேதோ சொல்லி மழுப்பப் பார்த்தார். ஏற்கனவே போலீஸ் தாக்குதல் குறித்த ஆதாரங்கள் இருப்பதாக கூறியதையும் மறுத்துப் பேசியதில், காவல்துறையோடு ஏதோ சமரசத்துக்கு வந்திருப்பதை புரிந்துகொள்ள முடிந்தது.
பின்னர் ஆறுமுகத்தின் வழக்கறிஞரிடம் நாம் பேசியபோது, நாம் நினைத்தது போலவே அவரும் தெளிவுபடுத்தினார். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்றபடி தயக்கத்தோடு பேசிய அவர், “போலீசாரால் தாக்கப்பட்ட ஆறுமுகத்தை, தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்துவிட்டு, அவர் மனைவி என்னிடம் பேசினார். அப்போது நான் புகார் கொடுப்போம் என்று சொன்னேன். இதைத் தொடர்ந்து, ஆறுமுகம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார். அவர் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார். அதற்கு ஆதாரமான சி.சி.டி.வி. ஃபுட்டேஜ் இருக்கிறது. அவரை வீட்டில் வைத்துத் தாக்கியதோடு நிறுத்தாமல், ஆலம்பாறை பகுதியில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டுபோய் வைத்தும் கடுமையாகத் தாக்கி, அவர் விலா எலும்பை முறித்திருக்கிறார்கள். அதன் பிறகும் விடாமல், அந்தப் பகுதியில் 100 கிராம் கஞ்சாவுடன் ஆறுமுகம் நின்றதாக செட்டப் செய்து, வடசேரி எஸ்.ஐ. ஜெசி மேனகாவை வைத்து கேஸ் போட்டிருக்கிறார்கள். இந்த ஜெசி மேனகா, ஆறுமுகத்தைத் தாக்கிய எஸ்.ஐ. மகேஷ்வரனின் மனைவி ஆவார்.
இந்த நிலையில், அம்பாசமுத்திரத்தில் ஏ.ஏஸ்.பி. விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை உடைத்த விவகாரம் விசுவரூபம் எடுத்ததால், ஆறுமுகம் சம்பவமும் அந்த மாதிரி போய் விடக்கூடாதே என்று பயந்துபோய், ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜ் டாக்டரிடம் பேசி, ஆறுமுகத்தின் உடம்பில் எந்தக் காயமும் இல்லை என்று போலீஸ் தரப்பு ரிப்போர்ட் வாங்கியிருக்கிறது. இதுவும் மோசமான குற்றச்செயலாகும். இது பற்றி மெடிக்கல் காலேஜ் டீனிடம் நாம் கேட்டபோது, “அது போலீஸ் விசயம் என்பதால் என்னால் தலையிட முடியாது” என்று சொன்ன டீன், இருந்தாலும் நான் விசாரிக்கிறேன்னு சொன்னார். இந்த விவகாரத்தை நான் கிளறியதால், போலீஸ் தரப்பில் இருந்து என்னிடம் சமரசம் பேசினார்கள். நான் இதற்கு சம்மதிக்க முடியாது என்றதால், நேரடியாக ஆறுமுகத்தின் மனைவி மற்றும் மைத்துனரிடம் டி.எஸ்.பி.யும், இன்ஸ்பெக்டரும் பேசி, அவர்களை சமாதானத்திற்கு சம்மதிக்க வைத்துவிட்டனர். பின்னர், ஆறுமுகத்தை போலீஸ் செலவில் பார்வதிபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்து சிகிச்சை கொடுத்து வருகிறார்கள்
கட்டப்பஞ்சாயத்து பாணியிலான இந்த சமாதானத்தில் எனக்கு உடன்பாடு இல்லாததால், இந்த விசயத்தில் இருந்து நான் ஒதுங்கிக்கொண்டேன். ஆறுமுகத்தின் மீது வேறுவேறு வழக்குகளைப் போட்டு, குண்டாசில் உள்ளே தள்ளிவிடுவோம் என்று போலீஸ் மிரட்டியதால்தான், ஆறுமுகம் குடும்பத்தினர் பயந்து போய் சமரசத்துக்கு ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். மனித உரிமைக்கு விரோதமாக ஆறுமுகத்தைத் தாக்கி அவர் எலும்புகளை முறித்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல் நடிக்கிறது போலீஸ். இது மிகப்பெரிய கொடுமை” என்றார் வருத்தமாய்.
இதுகுறித்து நம்மிடம் ஏரியா முக்கியஸ்தர்கள் சிலர், “பாவம் அந்த ஆறுமுகம். அநியாயமாக அவரை அடித்து, உதைத்து எலும்பை நொறுக்கிவிட்டார்கள். இப்போது மருத்துவ செலவுக்காக மட்டுமே சில லட்ச ரூபாய்களைக் கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். போலீஸுக்கு உடந்தையாக மருத்துவமனை நிர்வாகமும் செயல்பட்டிருக்கிறது” என்றார்கள். இது குறித்து வடசேரி விசாரணைக் காவலர்களோ, “ஆறுமுகத்தின் மீது ஏற்கனவே 6 கஞ்சா வழக்குகள் இருக்கின்றன. அன்றும் அந்தப் பகுதியில் கஞ்சா பொட்டலங்களோடு சுற்றித் திரிந்ததால்தான், நாங்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தோம். அவரை நாங்கள் தாக்கவில்லை” என்றார்கள் அழுத்தமாக.
“ஏறத்தாழ இன்னொரு அம்பாசமுத்திரம் சம்பவம்தான் வடசேரி காவல்நிலையத்தில் நடந்திருக்கிறது. இதையும் விசாரிக்க வேண்டும்” என்கிறார்கள் ஏரியா வாசிகள்.