இந்திய மற்றும் தமிழக அரசியல் களம் குறித்து மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர் காந்தராஜை நாம் சந்தித்துப் பேசினோம். அப்போது பல்வேறு சுவாரஸ்ய தகவல்களை விரிவாக உரையாடினார் மூத்த அரசியல் விமர்சகர் டாக்டர். காந்தராஜ்.
“10 வருடங்களாக மோடியால் ஊழலையும் வாரிசு அரசியலையும் ஒழிக்க முடியவில்லை என்பதை அவருடைய பேச்சு காட்டுகிறது. அம்பானி, அதானியைத் தவிர வேறு யாரும் இங்கு நிம்மதியாக இல்லை. இன்று இந்திய பொருளாதாரத்தை சோமாலியா நாட்டின் பொருளாதாரத்துடன் ஒப்பிடுகின்றனர். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வைத் தான் இவர்கள் பொருளாதார உயர்வு என்று கூறி வருகின்றனர். இந்தியாவில் தீவிரவாத தாக்குதல்களை ஆர்எஸ்எஸ் இயக்கமே தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வளவையும் செய்துவிட்டு மீண்டும் ஓட்டுப் போடுங்கள் என்றால் யார் போடுவார்கள்?
வெளிநாட்டில் கூட மோடிக்கு அவமானம் தான் ஏற்படுகிறது. இவர்கள் விரும்பும் ரிசல்ட்டை கொடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தையும் இவர்கள் கட்டுப்படுத்துவார்கள். கர்நாடகாவிலும் இவர்கள் இதை முயற்சி செய்தனர். ஆனால் அது நடக்கவில்லை. சமீபத்தில் வெளியான டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு ஒரு செட்டப் தான். அனைவரும் நம்ப வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டில் திமுக வெல்லும் என்றும், மத்தியில் பாஜக வெல்லும் என்றும் சொல்கிறார்கள். தேர்தல் ஆணையரை தேர்ந்தெடுக்கும் குழுவில் உச்சநீதிமன்ற நீதிபதி இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவையே இவர்கள் நீக்கிவிட்டனர். நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சர் ஒருவரை அதில் சேர்த்துள்ளனர். இதன் மூலம் இவர்கள் விரும்பும் நபர்களைத் தேர்தல் ஆணையராக நியமிக்கலாம். இவர்கள் மக்களை நம்பவில்லை.
ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வந்த பிறகு மோடிக்கு பயம் அதிகரித்துவிட்டது. அதனால் தான் நாடாளுமன்றத்துக்கே அவர் வர மறுக்கிறார். கேட்ட கேள்விகள் எதற்கும் மோடியால் பாராளுமன்றத்தில் பதில் சொல்ல முடியவில்லை. பப்பு என்று சொல்லப்பட்ட ராகுல் காந்தி., மோடிக்கு ஆப்பு வைத்துவிட்டார். அதிமுக மாநாட்டுக்காக நிறைய செலவு செய்தனர். பழனிசாமியைப் பார்த்தால் பாவமாக இருக்கிறது. இருக்கிற பணம் அனைத்தையும் செலவு செய்துகொண்டிருக்கிறார். ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என்று அண்ணாமலை சொன்னபோது அதிமுகவிலிருந்து 10 பேர் கூட போராடவில்லை. அதிமுகவினர் அத்தனை பேரும் எங்கே போனார்கள்? அதுபற்றி எடப்பாடி பழனிசாமி இன்று வரை பேசவில்லை. செலவு செய்து தான் இவர்கள் மாநாட்டுக்கு கூட்டத்தைக் கூட்டுகிறார்கள். வசந்த மாளிகை மாதிரி ஒரு வேனை ஏற்பாடு செய்து அதில் பாதயாத்திரை நடத்தி வரும் அண்ணாமலை பற்றி யாருமே பேசுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு கிலோ மீட்டர் கூட அவர் நடப்பதில்லை. அவர் தன்னைத் தானே அசிங்கப்படுத்தி வருகிறார்” என்றார்.