Skip to main content

குமரியில் கடுமையான போட்டியா ? - கள நிலவரம்

Published on 11/04/2019 | Edited on 11/04/2019

கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க., அ.ம.மு.க. உட்பட இதர கட்சிகள், சுயேட்சைகள் என 15 பேர் வேட்பாளர்களாக களத்தில் நிற்கின்றனர். பதினைந்து பேரில் நானா- நீயா என துவந்த யுத்தம் நடப்பது காங்கிரசின் வசந்தகுமாருக்கும் பா.ஜ.க.வின் மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கும்தான்.

 

ponnar



இதில் பா.ஜ.க.வின் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சில பாஸிட்டிவ் அம்சங்கள் இருக்கின்றன. கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று மத்திய அமைச்சரானவர். தற்சமயம் தமிழகத்தில் ஆட்சியமைத்திருக்கும் அ.தி.மு.க.வுடனான கூட்டணி. ஆனால் இரண்டு அரசுகளின்மீது ஆட்சிக்கெதிரான அலையிருப்பதுதான் அவரது பலவீனம்.

 

ponnar 1



குமரி மாவட்டத்தில் ஆரம்பத்தில் பா.ஜ.க.வுக்கு அடித்தளம் போட்டு, கிராமம் கிராமமாக கட்சியை வளர்த்தெடுத்தவர் எம்.ஆர்.காந்தி. ஆனால் இன்றைக்கு அவரும் அவரது ஆதரவாளர்களும் பதவியின்றி குமுறலில் இருந்தனர். இந்தக் குமுறலையறிந்த பொன்.ராதாகிருஷ்ணன் தானே நேரடியாக எம்.ஆர். காந்தியைத் தேடிச்சென்று, அரவணைத்து எம்.ஆர்.காந்தி தரப்பினரின் குமுறலைக் குறைத்திருக்கிறார்.

 

vasanthakumar



பிரச்சார விவகாரத்திலும் கட்சியினரின் விருப்பப்படி போகாமல், அ.தி.மு.க.வினரின் போக்குக்கிணங்க பொன்னார் போவது விரிசலை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசுக்கு இணையாக கிறித்தவர்களின் வாக்கை வாங்கிவிடலாமென அ.தி.மு.க.வினர் கிறிஸ்தவப் பிரமுகர்கள், பாதிரியார்கள் நடுவில் அழைத்துச் செல்ல, தீவிர இந்து ஆதரவாளர்களும் பா.ஜ.க.வினருமே பொன்னாரை வித்தியாசமாகப் பார்க்கின்றனர். ஆரம்பத்தில் கிறித்தவ ஆலயம் பக்கம் தலைகாட்டிய பொன்னாரின் மனப்போக்கில் ஏற்பட்ட மாறுதல்களை கிறித்தவர்களும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றனர்.

40 ஆயிரம் கோடி வளர்ச்சித் திட்டங்களைக் கூறி பொன்னார் வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகையில், "ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு கடந்த ஐந்தாண்டுகளில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?' என கேள்வியெழுப்புகின்றனர். "காங்கிரஸ்தான் அதற்கு முட்டுக்கட்டை போட்டது என்றால்... ஆட்சியிலில்லாத காங்கிரஸ் எப்படி முட்டுக்கட்டை போட்டது, அதை ஏன் உங்களால் சமாளிக்க முடியவில்லை' என எதிர்க்குரல்கள் எழுவது பா.ஜ.க.வினரை வேர்த்து விறுவிறுக்க வைக்கிறது.

கன்னியாகுமரி தொகுதிக்கு மட்டும் காங்கிரசில் 56 பேர் முட்டிமோதியதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், மீண்டும் ஜாக்பாட் அடித்திருப்பது வசந்தகுமாருக்குத்தான். வசந்தகுமார் பெயர் அறிவிக்கப்பட்டதிலிருந்து நிகழ்வுகள் எதிலும் கலந்துகொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரின்ஸ் ஒதுங்கியே இருந்தார். அவரை தற்போதுதான் சரிக்கட்டியிருக்கிறார்கள். அதுபோல விஜயதாரணி எம்.எல்.ஏ. வசந்தகுமாருக்கு சால்வை போர்த்தியதோடு சரி, இதுவரை பிரச்சாரத்தில் தலையைக்கூட காட்டவில்லை.

சொந்தக் கட்சி மனக்கசப்பே மாறாத நிலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் இழுத்த இழுப்புக்கு வருவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சீட் அறிவித்ததிலிருந்து வசந்தகுமாருடன் இருந்த மற்றொரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ராஜேஷ்குமார், தி.மு.க.வினருக்கும், பூத் கமிட்டிக்கும் தன் மூலம் வைட்டமின்  சப்ளை நடக்குமென நம்பியிருந்தார். அதை தானே பார்த்துக்கொள்வதாக வசந்தகுமார் சொல்ல, ராஜேஷ்குமார் முகம் சுண்டிச் சுருங்கிவிட்டதாகப் பேசிக்கொள்கிறார்கள்.

சீட் கிடைத்த வசந்தகுமாரைத் தவிர, மற்ற எம்.எல்.ஏ.க்கள் நமக்கு ஏன் கிடைக்கவில்லை, என்ன தகுதிக் குறைச்சல் என மனசுக்குள்ளே மருகிக்கொண்டிருக்க, ஆரம்பத்திலிருந்தே வசந்தகுமார் ஜெயித்துவிடுவார் என்ற பேச்சு தொகுதி முழுக்கவும் ஓடுவதால் சென்ற முறை போலில்லாமல் தொண்டர்களிடையே கஞ்சத்தனத்தைக் காட்டுகிறாராம்.

இந்த ஏடாகூடங்கள் பிரச்சாரத்திலும் சுணக்கமாக வெளிப்பட, பொன்.ராதாகிருஷ்ணனுக்கு இது சாதகமாகிவிடுமோ என உண்மையான தொண்டர்கள் கலங்கிநிற்கின்றனர்.ஆனால், தன்மீதும் வாக்காளர்கள் மீதும் நம்பிக்கை வைத்துப் பேசும் வசந்தகுமார், தான் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவிக்கிறார். "ரூ.40 ஆயிரம் கோடியில் திட்டங்களை கொண்டுவந்ததாகக் கூறும் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த திட்டங்களை பற்றி என்னுடன் விவாதிக்க தயாரா' என்கிறார் சவாலாக.

பரிசுப் பெட்டி புகழ் அ.ம.மு.க. வேட்பாளர் லெட்சுமணன், மக்களுக்கு பரிசு கொடுக்கிறாரோ… இல்லையோ… ரெண்டு பெரிய கட்சிகளுக்கும் பிரச்சாரத்தில் டஃப் கொடுக்கிறார்.. அ.ம.மு.க. தொண்டர்களும் மண்டைபிளக்கும் வெயிலிலும் சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் ஆர்வம்காட்டிவருகின்றனர். தாமரை மலரப் போகிறதோ… கை ஓங்கப் போகிறதோ… என்கிற கவலையின்றி, கரன்ஸி வெள்ளம் எப்போது பாயப் போகிறது என்ற எதிர்பார்ப்பே பெரும்பாலானவர்களிடம் வெளிப்பட்டதையும் களத்தில் காணமுடிந்தது.