சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தபோது சந்திக்காதது பற்றிப் பேசினார். இருவரும் வேறு வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் தேவைப்பட்டால் சந்திப்போம். வரும் போதெல்லாம் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் வியப்பை ஏற்படுத்திய நிலையில் இதுதொடர்பாக கண்ணன்ஜி அவர்களிடம் கேள்வி எழுப்பினோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " அண்ணன் சிலுவம் பாளையம் பழனிசாமி தற்போது தான் சரியான திசையை நோக்கிப் பயணிக்கிறார். எப்படி ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடிப்பார்களோ அதைப்போல வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைக்கப் பார்க்கிறார் எடப்பாடி பழனிசாமி.
தனக்கு வாய்ப்பளித்த ஈரோடு முத்துசாமி துவங்கி, இந்த முதல்வர் பதவி அளித்த சின்னம்மா, தினகரன், இந்த 4 வருடம் ஆட்சியைக் காப்பாற்றிய பன்னீர் செல்வம் என அனைவருக்கும் அவர் தன்னுடைய சுய ரூபத்தைக் காட்டினார். இதில் கடைசியாக தற்போது பாஜகவிடம் வந்துள்ளார். பாஜகவிடமும் தன்னுடைய பதவி வெறிக்காக தன்னுடைய அரசியல் வேலையைக் காட்ட ஆரம்பித்துள்ளார். கூட்டணிக் கட்சி என்பதைத் தாண்டி இன்றைக்கு அவர் வேற கட்சி நான் வேற கட்சி என்று அமித்ஷாவைப் பேசுகின்ற அளவுக்கு இன்றைக்கு அவரின் பதவி வெறி கொண்டு வந்துள்ளது. எடப்பாடி பழனிசாமிக்குக் கட்சியைவிட தன்னுடைய பதவி அதிகாரம் என்பதிலேயே குறியாக இருப்பார்.
இவரின் அதிகார வெறி இன்றைக்குத் தன்னைக் காத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்த ஏதோ ஒரு வகையில் உதவியாக இருந்தவர்களைக் கூட எதிர்க்கும் மனநிலைக்கு வந்துள்ளார். ஒரு கட்சியை வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு கட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் அவர் செயல்பட்டு வருவது என்பது எவ்வளவு பெரிய அவமானம். தன்னைவிடக் கட்சி சிறியது, தொண்டர்கள் கீழானவர்கள் என்ற மன நிலையையே அவரை இந்த அளவுக்குக் கொண்டு வந்துள்ளது. எடப்பாடியை எந்த ஒரு அதிமுக தொண்டரும் எப்போதும் மன்னிக்கப் போவதில்லை. வரலாற்றில் அழியாத கறையை அவர் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த நிலைமையில் அவர் மெகா கூட்டணி அமைப்பேன் என்று மார்தட்டுகிறார். அவர் மஹா கூட்டணி வேண்டுமானால் அமைக்கலாம், மெகா கூட்டணி ஒருபோதும் அமைக்க முடியாது. வெறும் வாயால் வடை சுடலாமே தவிர வேறு ஒன்றையும் அவரால் செய்ய முடியாது. எடப்பாடி பழனிசாமியின் அரசியல் தோல்விப் பாதையை நோக்கிச் செல்ல ஆரம்பித்துவிட்டது. அதை அவர் உணர்ந்துவிட்டார். அவர் ஒன்றும் மக்களைச் சந்தித்து முதல்வராகி விடவில்லை. குறுக்கு வழியில் வந்ததால் அதே வழியில் மீண்டும் பதவிக்கு வந்து விடலாமே என்று ஆர்வக்கோளாறுத் தனமாக இருக்கிறார். அவரால் ஒருபோதும் வர முடியாது. அவருக்கு மக்கள் தோல்வியையே பரிசாகக் கொடுப்பார்கள்.