Skip to main content

33 லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தையின் எலும்புக்கூடு!!!

Published on 05/07/2018 | Edited on 05/07/2018

39 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியாவில் வாழ்ந்த ஆஸ்ட்ரலோபிதிகஸ் அஃபெரென்ஸிஸ் என்ற இனம் மனித இனத்தின் முன்னோடி என்று கருதப்படுகிறது.

 

bone


 

 

 

அந்த இனத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தையின் எலும்புக்கூடு எத்தியோப்பியாவில் உள்ள டிகிக்கா என்ற இடத்தில் கிடைத்துள்ளது. இந்த குழந்தையின் எலும்புக்கூடுக்கு செலம் என்று பெயரிடப்பட்டுள்ளது. எத்தியோப்பிய மொழியான அம்ஹரிக்கில் இதற்கு அமைதி என்று அர்த்தம்.

 

1974 ஆம் ஆண்டு இதே பகுதியில்தான் ஆஸ்ட்ரலோபிதிகஸ் இனத்தை சேர்ந்த முதிர்ந்த லூசி என்று பெயரிடப்பட்ட எலும்புக்கூடை மானுடவியலாளர்கள் அறிமுகப்படுத்தினார்கள்.

 

இப்போது அறிமுகப்படுத்தியுள்ள செலம் எலும்புக்கூடு 2000மாவது ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. மிகக் கவனமாக மணல் படிமத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, இப்போது அதன் வயது உள்ளிட்ட விவரங்களை மானுடவியலாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

 

 

 

இந்த இனம் ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆஸ்ட்ரலோபிதிகஸ் இனம் இரண்டு காலில் நடந்தன என்றாலும், மரங்களில் ஏறும் ஆற்றலும் பெற்றிருந்தன. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள மூன்று வயதுக் குழந்தையின் எலும்புகூடின் குதிகால் தனது தாயை நன்கு கவ்விப்பிடிக்க வசதியாகவும், அதேசமயம் தரையிலும் உறுதியாக கால்பதித்து நடக்க வசதியாக அமைந்திருக்கிறது.

 

bone



இது நிஜமாகவே பரவசமூட்டும் கண்டுபிடிப்பு என்று நியூயார்க்கைச் சேர்ந்த மானுடவியலாளர் வில் ஹர்கோர்ட் ஸ்மித் கூறியிருக்கிறார். இப்போது கண்டுபிடித்துள்ள எலும்புக்கூடு மனிதனுக்குரியதாக இருந்தாலும், சிம்பன்சிக்கு உரிய குதிகாலை பெற்றுள்ளது.

 

அதாவது, இந்த உயிரினம் நிறைய நடக்கவும், சமயத்தில் தன்னை தப்பித்துக்கொள்ள மரங்களில் ஏறவும் வசதியாக குதிகாலைப் பெற்றுள்ளது. மரங்களில் ஏன் ஏறியிருக்கும் என்பதற்கும் சில விளக்கங்களை கூறுகிறார்கள். 33 லட்சம் ஆண்டுகளுக்கு முன் நெருப்புக்கோ, கட்டுமானப் பணிகளுக்கோ வாய்ப்பில்லை. எனவே, உணவுக்காகவோ, உயிர் பிழைப்பதற்காகவோ மரங்களில் ஏறும் வகையில் பாதம் அமைந்திருக்கிறது.

 

 

 

இந்த உயிரினம் வாழ்ந்த காலத்தில் பிரமாண்டமான வேறு சில விலங்குகளும் வாழ்ந்திருக்கின்றன. அவற்றிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள இரவு நேரங்களில் இவை மரங்களில் ஏறித் தங்கியிருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

 

இப்போது கிடைத்துள்ள எலும்புக்கூடு மண்டையோடு, முதுகெலும்பு, பாதம், தோள்பட்டை, இடுப்பெலும்பு உள்பட கிட்டத்தட்ட முழுமையாக இருக்கிறது. இந்த கண்டுபிடிப்பின் மூலம், 33 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே, ஒரு குழந்தை நடக்கும் ஆற்றலைப் பெற்றிருக்கிறது என்ற உண்மையை அறியமுடிகிறது.