அரை நூற்றாண்டுக்கும் மேலாக திமுகவின் தலைவராகவும், போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒருமுறை கூட தோல்வியைச் சந்திக்காமலும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராகவும் இருந்தவர் கலைஞர். அவரின் 100வது பிறந்தநாளை திமுகவினர் கலைஞர் நூற்றாண்டாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், கலைஞரின் நூற்றாண்டில் கலைஞருடன் பயணித்தவர்களையும், கலைஞர் குறித்து நூல்களை எழுதியவர்களையும் நக்கீரன் யூடியூப் பிரத்தியேகமாகப் பேட்டி கண்டு வருகிறது. அந்த வகையில் கலைஞருடன் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்த பேராசிரியர் நாகநாதன் நக்கீரன் யூடியூபுக்கு பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதியை நக்கீரன் வாசகர்களுக்காகத் தருகிறோம்.
பேராசிரியர் நாகநாதன் கூறியதாவது; “நெருக்கடி காலகட்டத்தில் என் திருமணம் ஏப்ரல் மாதம் 30ம் தேதி நடைபெற்றது. திமுக அப்போது ஆட்சியில் இருக்கிறது. எனது மாமனாரும், காமராஜரும் இரண்டு வருடங்கள் ஒரே சிறையில் இருந்தவர்கள். திருமணம் முடிந்து காமராஜரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ‘தமிழ்நாட்டில் சினிமா மோகம் இருக்கிறது. நான் கோவைக்கு சென்றிருந்தபோது, அதனை ஒரு காவல்துறை அதிகாரி வழியாக பார்த்தேன்.
என் கூட்டத்திற்கு கூடிய கூட்டத்தை விட எம்.ஜி.ஆர்.க்கு இரண்டு மடங்கு கூடியதாக அந்த போலீஸ் அதிகாரி சொன்னார். எம்.ஜி.ஆர். வருவதை தடுக்க முடியாது. நடிகரோடு (எம்.ஜி.ஆர்.) விட்டுவிட்டால் பரவாயில்லை; ஆட்சிக்கு நடிகை வந்துவிடக்கூடாது’ என விளையாட்டாக சொன்னார்.
காமராஜர் மீது கலைஞர் கொண்ட அன்பு - வரலாற்றைச் சொல்லும் நாகநாதன்
இதுமட்டுமின்றி, இன்னொன்றும் காமராஜர் சொன்னார். ‘ஒரு பெரும் ஊடகத்தின் ஆசிரியரும், நிறுவனருமான அவரின் பெயரை குறிப்பிட்டு, அவரிடம் கலைஞரை எச்சரிக்கையாக இருக்க சொல்லுங்கள். அவர் கலைஞரை காட்டிக்கொடுத்துவிடுவார். இதனை முதலமைச்சரிடம் சொல்லுங்க’ என்று சொன்னார். அதேபோல், நெருக்கடி நிலையில் கலைஞரின் ஆட்சி நீக்கம் செய்யப்படுகிறது. காமராஜர் சொன்னது போலவே அந்த ஊடக நிறுவனர் கலைஞருக்கு எதிராக செயல்படுகிறார். இதற்கிடையில் கமாரஜார் இறந்துவிட்டார். அந்தச் சம்பவம் நடந்ததும் கலைஞர், ‘காமராஜர் சொன்னது தான் நடந்திருக்கிறது. எவ்வளவு பட்டறிவு அவருக்கு’ என்று சொன்னார்.