கமல் ஹேஷ்டேக்கின் உள்ளர்த்தம் என்ன ?

தனது 63-வது பிறந்தநாளில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த நடிகர் கமல்ஹாசன் பேச்சின் சுருக்கம்:
“20 பேர் கொண்ட குழு மூலம் மக்கள் பிரச்சினைகளை நேர்த்தியாக கையாள கைபேசி செயலி (#maiam whistle) கட்டமைக்கப்பட்டு வருகிறது. சனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும். 25 ஆண்டுகளுக்கு மேலாக கறுப்பு பணம் புரளாமல் ராஜ்கமல் சினிமா நிறுவனம் செயல்பட்டு வந்திருக்கிறது. அதுபோல் கட்சியிலும் தூய்மை நிலவும். எனக்கு தமிழக மக்கள் அளித்த வாழ்கைக்கு கைமாறே இந்த அரசியல் பிரவேசம். ஊழலற்ற வளமான தமிழ்நாடே என் கனவு “
கட்சி பெயரை விட, மக்களின் பிரச்சனைகளை முன்னிறுத்த செயலி ஒன்றை உருவாக்கி வருவது சமூக வலைதலங்களில் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதனுடன், அவர் அறிவித்த ஹேஷ்டேக்குகள் (theditheerpomvaa, virtuouscycles) பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
Theditheerpomvaa (தேடித்தீர்போம் வா ) என்பது நமது பிரச்சினைகளை நாமே தேடி, கூடிப் பேசி தீர்போம் என்ற பொருளில் அமைந்துள்ளது.
Virtuouscycles - இது அதிகம் வழக்கத்தில் இல்லாத ஆங்கிலச் சொல்லாடல். ஒரு குழப்பத்திற்கோ, பிரச்சினைக்கோ கோர்வையான செயல்கள் மூலமாக எட்டப்படும் சிறந்த முடிவு ஏற்படுத்துகின்ற நல்ல அதிர்வலைகள் பிற குழப்பங்களையும் அதே போல் தீர்க்கத் தூண்டும். இதன் பெயரே Virtuouscycles ! தமிழில் நல்ல வட்டம், நல்ல சக்கரம் என்று சொல்லலாம்.
இதற்கு சிறந்த உதாரணம், வாடிக்கையாளர் சேவை. வாடிக்கையாளர் முன்வைக்கும் குறைகளை கூடிப் பேசி ஒழுங்கான முறையில் தீர்ப்பதால் வாடிக்கையாளருக்கு அந்த நிறுவனத்தின் மேல் ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. இது மீண்டும் அந்த நிறுவனத்துடனான தொடர்பை அதிகரிக்கச் செய்யும்.
விழிப்புணர்வு செயலி மூலம், மக்கள் முன்வைக்கும் சமுதாய பிரச்சினைகளை ஒழுங்குபடுத்தி, சீரான இடைவெளியில் அது தொடர்பான தகவல்களை மக்களுக்கு அளித்து... நிரந்தர தீர்வை நாடுவதே இந்த ஹேஷ்டேக்குகள் நமக்கு சொல்லும் செய்தி.
இளைஞர் கூட்டம் ஏங்கும் நவீனம் கலந்த மாற்று அரசியல் பாதையை அமைக்கிறாரா கமல்?
பிரபு