இன்று (21-02-2018) காலை ராமேஸ்வரத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்தில் அவரது சகோதரரிடம் ஆசி பெற்று அதிகாரப்பூர்வ அரசியல் பயணத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல். மாலை, மதுரை மண்ணில் கட்சியின் பெயரையும் கொள்கைகளையும் வெளியிட்டு கொடியை ஏற்றப் போகிறார். இந்நிலையில் கட்சியின் பெயர் இதுவாக இருக்குமா அதுவாக இருக்குமா என்று பல யூகங்கள் சமூக ஊடகங்களில் உலவுகின்றன. அதில் முக்கியமாக இரண்டு பெயர்கள் பேசப்படுகின்றன. 'மய்யம்' என்பதும் 'திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' என்பதும் தான் அந்த பெயர்கள்.
'மய்யம்' என்ற பெயர் நெடுங்காலமாக கமலுடன் பயணித்து வருகிறது. ஆரம்பத்தில் நடத்திய இதழுக்கும் பின்னர் அவர் தொடங்கிய இணைய இதழ், யூ-ட்யூப் சானல் அனைத்திற்கும் 'மய்யம்' என்ற பெயரையே பயன்படுத்தினார். அரசியலுக்கு வருவதை உறுதி செய்து கடந்த நவம்பர் 7 அன்று தனது பிறந்த நாளில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் அறிமுகப்படுத்திய ஆண்ட்ராய்ட் செயலியின் பெயர் 'மய்யம் விசில்' என்றே இருக்கிறது. அவர் ஒரு வார இதழில் எழுதும் தொடரும் 'என்னுள் மையம் கொண்ட புயல்' என்ற பெயரில் இருக்கிறது. இவ்வாறு 'மய்யம்' என்ற பெயர் கமலின் மனதுக்கு மிகவும் நெருக்கமான பெயர்.
அடுத்த யூகமாக இருக்கும் 'திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்' என்பது தற்போது இருக்கும் பல திராவிட கட்சிகளின் பெயர்களின் சாயலில் இருக்கிறது. ஒரு புதிய மாற்றமாக தன்னை நிறுத்த விரும்பும் கமல், அரசியல் நடவடிக்கைகளை 'ஆப்' (app) சுற்றுப்பயணம், இளைஞர் படை, என புதுமையாகவே செய்து வருகிறார். அப்படி இருக்கும்போது கட்சியின் பெயரை 'திராவிட' மற்றும் 'கழகம்' போன்ற வார்த்தைகளுடன் இருக்கும் கட்சிகளை நினைவு படுத்தும் வகையில் வைப்பாரா என்பது கேள்விக்குறியே. அதே நேரம், "தேசிய கீதத்தில் திராவிடம் இருக்கும் வரை தேசத்திலும் இருக்கும்" என்று கூறி, திராவிடம் மீதுள்ள தன் ஒப்புதலையும் தெரிவித்திருந்தார். எனவே சில புதிய காட்சிகள் போல திராவிடம் மீது வெறுப்பு கொண்டவரல்ல கமல். இதனிடையே ஏற்கனவே திராவிட மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் ஒரு கட்சி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது. எனவே இந்தப் பெயர் எந்தளவுக்கு சாத்தியம் என்பது கேள்விக்குறியே.
இதனிடையே தனது பயணத்துக்கு 'நாளை நமதே' என பெயர் வைத்திருப்பதால், எதிர்கால நம்பிக்கையை குறிக்கும் வார்த்தைகளும் பெயரில் இருக்கலாம் என்பது ஒரு கணிப்பு. ஏற்பாடுகள் இன்று மாலை அத்தனை கேள்விகளுக்கும் விடை கிடைக்கும் என்று நம்பலாம்.