மகாபாரதப் போரில் பாண்டவர்கள் வெற்றி பெறுவதற்காக 32 சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய இளைஞனைக் களப்பலி கொடுத்த நிகழ்வை நினைவு கூறும் வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் சித்திரைத் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 18 ஆம் தேதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இவ்விழாவானது 18 நாட்கள் நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்ச்சி நேற்று மாலை (02.05.2023) தொடங்கியது. அப்பொழுது நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கோவிலில் குவிந்தனர். அங்கு சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு கோவில் முன்பாக அமைக்கப்பட்ட கடைகளில் தாலி, வளையல், குங்குமம் உள்ளிட்ட அலங்கார ஆபரண பொருட்கள் விற்கப்பட்டன. அவற்றை வாங்கி அணிந்து கொண்ட திருநங்கைகள் மணப்பெண் கோலத்தில் கோயிலுக்குள் சென்று பூசாரிகள் கையால் தாலி கட்டிக் கொண்டு அரவானைக் கணவனாக ஏற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் கோயில் வளாகத்தில் கும்மியடித்தும் ஆடிப் பாடியும் மகிழ்ந்தனர். இரவு முழுவதும் திருநங்கைகள் மிகவும் சந்தோஷமாகக் கோயில் பகுதியில் சுற்றி வந்தனர். ஒருவரை ஒருவர் நலம் விசாரிப்பது அவரவர் வாழ்க்கை நிலை வேலை பார்க்கும் இடத்தில் உள்ள பிரச்சனைகள் இப்படி திருவிழாவில் கூடும் உற்றார் உறவினர்களிடம் திருநங்கைகள் விடிய விடியப் பேசிக் கொண்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. திருவிழாவில் பொதுமக்களுக்கும் திருநங்கைகளுக்கும் இடையூறு இன்றி சாலையோர கடைகள் வைக்கப்பட்டிருந்தன. தற்காலிக கழிவறைகள் குளியல் அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த விழாவில் பாதுகாப்புப் பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் மற்றும் 4 ஏடிஎஸ்பி 11 டிஎஸ்பி 48 இன்ஸ்பெக்டர்கள் என சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் கோயில் வளாகத்தில் எதுவும் அசம்பாவிதம் நேராத வண்ணம் கோயிலைச் சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் சரவண்குமார், அதிகாரிகளை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி மிகச் சிறப்பான முறையில் விழா நடத்துவதற்கு முன் நின்று ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
காலையில் அரவான் களப்பலி கொடுத்த பிறகு திருநங்கைகள் வெள்ளைச் சேலை உடுத்தி தாலி அறுத்து ஒப்பாரி வைத்து சடங்கு செய்துவிட்டு அவரவர் ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.