1947ல் ராஜகுமாரி படத்தில் வசனகர்த்தாவாக கலைஞர் அறிமுகமாகும்போது அவருக்கு 23 வயதுதான். அந்தக் காலத்தில் இதுவே சாதனைதான். மந்திரிகுமாரியில் எம்ஜிஆரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தும் அளவுக்கு அவருக்கு முக்கியத்துவம் இருந்தது. கதாசிரியர்களுக்குப் கதாநாயகனுக்கு நிகரான முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொடுத்தவர் கலைஞர்.
திமுக தேர்தலில் போட்டியிட முடிவுசெய்த முதல் தேர்தலிலேயே கலைஞர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அப்போது அவருடைய வயது 33. திரைப்படத்துக்கு வசனம் எழுதி கோபாலபுரம் வீட்டை வாங்கினார். என்.எஸ்.கிருஷ்ணன் தனது படத்துக்கு சம்பளமாக விலையுயர்ந்த காரை வாங்கிக் கொடுத்தார். திமுகவில் கார் வைத்திருந்த தலைவர் கலைஞர்தான் என்பார்கள்.
போட்டியிட்ட தேர்தல்களில் எல்லாம் வெற்றிபெற்ற சாதனையாளர்கள் எத்தனை பேர் இருப்பார்கள் என்று தெரியாது. ஆனால், கலைஞர் 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியி்ட்டு அனைத்திலும் வென்றவர் என்ற பெருமையை பெற்றவர்.
1957ம் ஆண்டு தனது முதல் தேர்தலை குளித்தலைில் சந்தித்தார். அதன் பிறகு அவர் 1962ல் தஞ்சாவூர், 1967ல் சைதாப்பேட்டை, 1971ல் சைதாப்பேட்டை, 1977ல் அண்ணா நகர், 1980ல் அண்ணா நகர், 1989ல் துறைமுகம், 1991ல் துறைமுகம், 1996ல் சேப்பாக்கம் 2001ல் சேப்பாக்கம், 2006ல் சேப்பாக்கம், 2011ல் திருவாரூர், 2016ல் திருவாரூர் என போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றிபெற்றார்.
1984ம் ஆண்டு நடந்த தேர்தலில் கலைஞர் போட்டியிடவில்லை. அப்போது அவர் எம்எல்சியாக இருந்தார். கலைஞரின் இந்த வரலாற்று சாதனையை இனி யாரேனும் முறியடிக்க முடியுமா என்பது சந்தேகமே.
13 தேர்தல்களில் வெற்றிபெற்ற கலைஞர் 5 முறை முதல்வராக பொறுப்பு வகித்திருக்கிறார். தமிழகத்தில் மிக நீண்டாகாலம் அதாவது 19 ஆண்டுகள் முதல்வராக ஆட்சி செய்திருக்கிறார். இதுவும் அவருடைய சாதனை ஆகும்.
மிக இளம் வயதிலேயே பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், திரைப்பட வசனகர்த்தா, திமுக எம்எல்ஏ, திமுக பொருளாளர், இந்தியாவிலேயே மிக இளம் வயதில் முதல்வரானவர் என்ற பெருமைகள் கலைஞரைச் சேரும்.
பொதுவாழ்வில் 80 ஆண்டுகள், சட்டமன்றத்தில் 60 ஆண்டுகள், திமுக தலைவராகவே 50 ஆண்டுகள், திரைத்துறையில் 60 ஆண்டுகள் என கலைஞரின் சாதனைகள் எவையும் இனி யாராலும் முறியடிக்க முடியாதவை.