Skip to main content

"இந்தத் தீர்ப்பு எடப்பாடிக்கு மிகப்பெரிய பின்னடைவு; ஆனால் உச்சநீதிமன்றத்தில் வர இருக்கின்ற விசாரணையில் இதையும்..." - எஸ்.பி. லட்சுமணன்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

பரக


கடந்த சில நாட்களுக்கு முன்பு தேவர் ஜெயந்தி நிகழ்ச்சி பசும்பொன்னில் வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் அங்கே சென்று தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார்கள். திமுகவில் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் சென்ற நிலையில் அதிமுகவில் பன்னீர்செல்வம் சென்று மரியாதை செய்தார். எடப்பாடி தரப்புக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் உதயகுமார் தலைமையில் ஒரு அணியும், பன்னீர் தரப்புக்கு ஆதரவாகச் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அங்குச் சென்று மரியாதை செலுத்தினர். 

 

இது ஒருபுறம் இருக்க வருடந்தோறும் அதிமுக சார்பாகத் தேவர் சிலைக்குச் சாத்த தங்கத்திலான கவசத்தைச் சாத்தி மரியாதை செய்வார்கள். இந்த வருடம் யார் அதிமுக என்ற கோஷ்டி சண்டை எடப்பாடிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தங்கக் கவசத்தை எங்களிடம் தர வேண்டும் என்று கூறி எடப்பாடி தரப்பு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் யார் அதிமுக என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள காரணத்தால் இருவரிடமும் வழங்காமல் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கவசத்தை வழங்குமாறு உத்தரவிட்டது. இது எடப்பாடி தரப்புக்குச் சற்று அதிர்ச்சியைக் கொடுத்ததாகச் சொல்லப்பட்ட நிலையில் இதுதொடர்பாக பத்திரிகையாளர் லட்சுமணனிடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம்.

 

நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, " நீதிமன்றம் இந்த விவகாரத்தில் வழங்கிய தீர்ப்பில் இரண்டு விஷயங்கள் பேசப்பட்டுள்ளது. அதில் அதிமுக உட்கட்சி விவரங்களையும் நீதிமன்றம் பேசியுள்ளது. யார் கையில் கொடுக்க வேண்டும், யார் கையில் கொடுக்கக் கூடாது, ஏன் கொடுக்கக் கூடாது என்று ஒரு தரப்பு கூறுகிறார்கள் என்று சகலத்தையும் நீதிமன்றம் அலசியுள்ளது. அதிமுக நிர்வாக ரீதியாக எடப்பாடி வசம் இருக்கிறது, இதைப் பொதுக்குழு நடைபெறுவதற்கு முன்பே கூட நான் கூறினேன். இதை மையப்படுத்தியே இரண்டு நீதிமன்ற தீர்ப்புகளைக் கூட எடப்பாடி வாங்கிவிட்டார். வங்கிக் கணக்குகளைப் பராமரிக்க அவர் தரப்புக்கு நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது. அதைப்போலப் பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பையும் அவர்கள் வாங்கி விட்டார்கள். அப்படி இருக்கையில், நீதிமன்றம் உங்கள் பொருளாளரை அதிகாரப்பூர்வ நிர்வாகியாக ஏன் நினைக்கவில்லை. 

 

நீங்கள் தான் அதிமுக என்று நீதிமன்றம் கருதியிருந்தால் உங்களிடம் கவசத்தைத் தர உத்தரவிட்டிருக்க வேண்டியதுதானே? ஏன் அவர்கள் செய்யவில்லை, ஏனென்றால் இந்த வழக்கு தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அதையும் தாண்டி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டு முதல் கட்ட விசாரணை நடைபெற்ற போதே இந்த வழக்கை நாங்கள் முழுமையாக விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறது என்று கூறி ஒரு புள்ளி வைத்துவிட்டார்கள். அப்படியென்றால் இதற்கு முன்பு நடைபெற்ற இரண்டு பொதுக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்தையும் நாங்கள் விசாரிப்போம் என்று அவர்கள் தெளிவாகக் கூறியிருக்கிறார்கள். இந்த விசாரணையை நவம்பரில் ஆரம்பிக்கிறோம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்து இருந்தது. 

 

உச்சநீதிமன்றத்தின் இந்தக் கருத்தை உயர்நீதிமன்ற நீதிபதி எடுத்துக்கொண்டுள்ளார். இறுதித் தீர்ப்பு வராத ஒரு நிலையில், அதில் சிவில் கோர்ட் தான் இறுதித் தீர்ப்பு கொடுக்கும் என்பதை, எடப்பாடி பழனிசாமிக்கு இதற்கு முன்பு ஆதரவாகத் தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம் தற்போது கூறியுள்ளது. இதை எல்லாவற்றையும் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆராய்ந்துள்ளார். அதனால் பன்னீர்செல்வம் வைத்த கோரிக்கையை ஏற்று அதிகாரிகளிடம் கவசத்தை வழங்க உத்தரவிட்டார். பன்னீர்செல்வம் கூட அவர் கவசத்தை எங்கள் தரப்புக்கு வேண்டும் என்று கேட்கவில்லை, அவருக்குக் கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கையைத்தான் ஓபிஎஸ் பிரதானமாக வைத்தார். என்னைப் பொறுத்த வரையில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்குக் கிடைத்த மிகப்பெரிய பின்னடைவு.