அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று உண்மை நிலையை அறிவித்து மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கைமீறி போய் பதறி உபயோகமில்லை. எனவே, உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அரசை, மாவட்ட தி.மு.க.வின் சார்பாக வலியுறுத்துகிறேன் என மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை கோயம்பேட்டில் கரோனா பாதிப்பு அதிகமாகி, கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் ஊர் திரும்பியபோது, கோவிட் டெஸ்ட் எடுத்துக்கொள்ள தாங்களாக முன் வந்தார்கள். ஆனால் மாவட்ட மருத்துவத்துறை அவர்களை டெஸ்ட் எடுக்காமல் வீட்டுக்கு அனுப்பி விட்டது, அப்போதே எச்சரித்தோம். ஆனால் சிமெண்ட் ஆலைகள் இயங்குவதற்காக, அரியலூரை பச்சை மண்டலமாக வைத்துக்கொள்ள அரசு வழிகாட்டுதல்படி செயல்பட்டார்கள். அதனால், அரியலூர் மாவட்டத்தில் பரிசோதனை எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
கோயம்பேட்டில் இருந்து வந்த தொழிலாளர்கள் எண்ணிக்கை கிட்டத்தட்ட 4,000 பேர். ஆனால் அவர்களில் அரசு டெஸ்ட் எடுத்தவர்கள் எண்ணிக்கை 500 பேர் தான். இதையும் அரசின் செய்தி குறிப்பாக அவர்களே வெளியிட்டார்கள். இந்த 500 பேரில் 360 பேர் பாசிட்டிவ், அதாவது கரோனா தொற்றியவர்கள். பரிசோதிக்கப்பட்டவர்களில் 70% பேர் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பரிசோதிக்காமல் வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் எவ்வளவு பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதை நாமே கணக்கிட்டுக் கொள்ள வேண்டியது தான்.
சென்னையில் கடந்த ஜூன் 19 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் அங்கிருந்து 10 லட்சம் பேர் வெளியேறினார்கள். அப்போது அய்.டி. நிறுவனங்களில், தொழிற்சாலைகளில், சிறு வணிக நிறுவனங்களில் பணியாற்றுவோர், சிறு தொழில் புரிவோர் தத்தம் மாவட்டத்திற்கு திரும்பினார்கள். அதில் நம் மாவட்டத்திற்கும் ஆயிரக்கணக்கானோர் திரும்பினார்கள். அப்போதும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை.
அதன் விளைவை இப்போது அரியலூர் மாவட்டம் அனுபவிக்கிறது. எங்கு பரிசோதனை செய்தாலும் கொத்து, கொத்தாக கரோனா எண்ணிக்கை வெளிப்படுகிறது. அரியலூர் நகரத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற துணிக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள் 55 பேர் கரோனாவால் பாதித்துள்ளார்கள். அந்த கடையில் பணியாற்றிய ஒருவர் முதலில் உடல் நலம் குன்றி பக்கத்து மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்காமல், இறந்தவுடன் அவரது உடலை மருத்துவமனை நிர்வாகத்தினரே கொண்டு வந்து புதைத்துவிட்டனர்.
அடுத்த வாரம் அதே கடைத்தெருவில் பூக்கடை வைத்திருந்தவர் ஜுரத்தால் பாதிக்கப்பட்டார். அவர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றார். பரிசோதனையில் கரோனா உறுதியானது, சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அதற்கு பிறகுதான் அந்த துணிக்கடையில் பணியாற்றுபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
முதலில் ஒருவருக்கு கரோனா என்று உறுதியானது. பிறகு 20 பேருக்கு கரோனா தொற்று என்று அறிவித்தார்கள். பிறகு கொஞ்சம், கொஞ்சமாக பட்டியல் வெளியிடப்பட்டு எண்ணிக்கை 55 என்று வந்துள்ளது. ஒரே நாளில் எடுக்கப்பட்டு, ஒரே நேரம் சோதிக்கப்பட்ட சோதனையை மொத்தமாக அறிவிக்காமல் விட்டு, விட்டு அறிவிப்பது என்ன தந்திரம் எனப் புரியவில்லை. அதை முறையாக அறிவித்தால், அந்த பத்து நாட்களில் கடைக்கு வந்து போன வாடிக்கையாளர்கள் எச்சரிக்கையாக இருக்க உதவியாக இருக்கும். ஆனால் அது குறித்த கவலை எல்லாம் அரசுக்கு இல்லை.
அரியலூர் நகரில்தான் இந்த பாதிப்பு என்று இல்லை. ஜெயங்கொண்டம் நகரிலும் திட்டு, திட்டாக பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. அங்கு வணிகர் சங்கம் கூடி, நகரில் உள்ள வணிக நிறுவனங்களின் வேலை நேரத்தை குறைத்து விட்டார்கள். தங்களை தாங்களே பாதுகாத்துக் கொள்வது தான் வழி என்ற நிலைக்கு வந்து விட்டார்கள்.
"பாதிப்பு அதிகமாவதற்கு காரணம், மக்கள் தான்", என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சொன்னது போல, அதிகாரிகளும் சொன்னார்கள். மற்றப் பகுதிகளில் வந்த பாதிப்பு கடைசியாக மாவட்ட நிர்வாகத்தையும் தாக்கி விட்டது.
முதலமைச்சர் அலுவலகம் போலவே அரியலூர் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகமும் மிகுந்த பாதுகாப்போடு செயல்பட்டது. யாரும் அநாவசியமாக நடமாடாமல் பார்த்து கொண்டார்கள். மாவட்ட ஆட்சியர் யாரையும் சந்திப்பது இல்லை. பத்து நாட்களுக்கு முன், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் ஒருவருக்கு தொற்று உறுதியானது. மூன்று நாட்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூடப்பட்டது. பிறகு, மீண்டும் செயல்பட துவங்கியது.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் இருவர். அவர்கள் தான் ஆட்சியரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர்கள், இருவருக்குமே தொற்று என தகவல் வந்தது. அதை உறுதிப்படுத்தவே இரண்டு நாட்கள் ஆனது. பிறகு கோட்டாட்சியருக்கு தொற்று என்றார்கள். அடுத்து வட்டாட்சியருக்கு. அடுத்து இன்னொரு துறையின் தலைமை அலுவலருக்கு எனவும் தகவல்.
பாதுகாப்பாக இருக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றும் இத்தனை அதிகாரிகளுக்கு கரோனா தொற்றியுள்ளது என்றால், அரியலூர் மாவட்டத்தில் "சமூகப் பரவல்" நடந்து கொண்டிருக்கிறது என்று பொருள். ஆனால் அரசு இதனை எல்லாம் மூடி மறைப்பதனால் மக்களிடத்தில் இது குறித்த எச்சரிக்கை ஏற்பட வாய்ப்பில்லாமல் போகிறது.
அரியலூர் நகரத்தில் வணிகம் செய்பவர்கள் இதை எல்லாம் கண்டு பயந்து, போன வாரத்தில் கடைகளை சிறிது நாட்களுக்கு மூடுவது என திட்டமிட்டு மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினார்கள். அதற்குள்ளாக, ஒரு ஊடகத்தில் 'மாவட்டம் முழுதும் கடையடைப்பு' என செய்தி வெளியாகி விட்டது. உடனே தலைமை செயலகத்தில் இருந்து, மாவட்ட நிர்வாகத்திற்கு அதை தடுத்து நிறுத்த உத்தரவு வந்தது, அரசு அறிவிக்காமல் அப்படி நடந்து விடக்கூடாது என. அறிவிப்பு ரத்தானது, ஒரு சில கடைகளை மாத்திரம் உரிமையாளர்கள் தாங்களாகவே மூடி விட்டார்கள், பாதுகாப்பு கருதி. ஆனால் மீதிக் கடைகள் திறந்துள்ளன. உரிமையாளர்களும், பணியாளர்களும் பயத்துடனேயே பணியாற்றுகிறார்கள். வியாபாரிகள் சங்கத்தினரை மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசி, அவர்கள் கருத்தை கேட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த இரண்டு நாட்களில் அடுத்தடுத்து நான்கு மரணங்கள் அரியலூர் நகரில் ஏற்பட்டுள்ளது. இது இன்னும் பீதியை அதிகப்படுத்தியுள்ளது.
கிராமபுறங்களை பொறுத்தவரை தினம் இறப்புகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆனால் யாரும் பரிசோதனை செய்து கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் என்பதால் மாரடைப்பு, முதுமை, சிறுநீரகக் கோளாறு என்ற கணக்கில் செல்கிறது. கரோனாவின் உண்மை பாதிப்பை அரசு வெளிப்படுத்தாததால், மக்கள் இயல்பாக துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் சூழ்நிலை. மற்ற நிகழ்ச்சிகளை விட இறப்பில் பங்கேற்று ஆறுதல் சொல்வது கிராமத்து மக்களின் பண்பாடு. ஆனால் அதுவே இன்றைக்கு ஆபத்தாக போய் விடுமோ என்ற நிலை உள்ளது.
சென்னையில் கடந்த மாதங்களில் கணக்கில் காட்டாமல் மறைத்த 444 மரணங்களை இப்போது அறிவித்துள்ளார்கள். அந்த நிகழ்வுகளில் பங்கேற்றோர், அவரது இல்லத்தவர்கள் என யாருக்கும் எதுவும் தெரியாமலே பாதிக்கப்பட்டிருக்கலாம். அதனால் உண்மை நிலையை அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அதனால், அரியலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று சமூக பரவல் நிலையை அடைந்து விட்டது என்ற உண்மையை அறிவித்து, மக்களை பாதுகாக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. கைமீறி போய் பதறி உபயோகமில்லை. எனவே, உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க அரசை மாவட்ட தி.மு.கவின் சார்பாக வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார்.