மத்திய, மாநில உளவுப்பிரிவுகள் இந்த கரோனா காலத்தில் எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க.வுக்கே ஆதரவு பலமாக இருப்பதாக சொல்வதை, மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து கவனித்து வருகிறார்கள். இ.பி.எஸ்.-ஓ.பி.எஸ். இருவரையும் இந்த முடிவுகள் அதிர்ச்சி அடைய வைத்தாலும் ஆட்சியதிகாரம் நீடிப்பதால் தொழில் முதலீட்டு ஒப்பந்தங்கள், குடிமராமத்து பணிகள், காவிரி டெல்டாவை வேளாண் மண்டலமாக அறிவித்தல் போன்ற புதுப்புது அரசு திட்டங்களை அறிவிக்கிறார்கள்.
மக்களின் மனநிலையை மாற்றும் வகையில், தி.மு.க.வை இந்து விரோத கட்சியாக காட்டுவதற்கு கந்த சஷ்டி கவசம் பற்றிய யூடியூப் சர்ச்சை முதல் பலவற்றையும் இழுத்து வருகிறது பா.ஜக. தரப்பு. அதற்கேற்ப வழக்குகளைப் பதிவுசெய்து ஊடக விவாதமாக மாற்றுகிறது அ.தி.மு.க. அரசு. தி.மு.கவுக்கு எதிரான சின்னச்சின்ன செய்திகளும் சமூக வலைதளத்தில் மதரீதியாக வைரலாக்கப்படுகின்றன. தி.மு.க.வோ, இதுபோன்ற பரப்புதல்களுக்கு உணர்ச்சி வசப்பட்டு ரியாக்ட் செய்யாமல், தனக்கான வாக்குவங்கியைப் பலப்படுத்துவதிலேயே குறியாக இருக்கிறது.
"நாங்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள் அல்ல. தமிழகத்தில் 69% இடஒதுக்கீட்டுக்கு வழிவகுத்து அதில் இந்துக்களுக்கு 65.5% இடஒதுக்கீடு கொடுத்தது தி.மு.க.தான். இதனால், ஒவ்வொரு குடும்பத்திலும் வேலைவாய்ப்பு கிடைத்தது. டாக்டர்கள்-இன்ஜினியர்கள் உருவாகினார்கள். ஆனால், மத்தியில் ஆளும் பா.ஜ.க.வோ, ஓ.பி.சி. எனப்படும் பிற்படுத்தப்பட்ட- மிக பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீட்டை வழங்காமல் இந்துக்களுக்கு துரோகம் செய்துவருகிறது'' என்று தி.மு.க.வினர் பதிலடி கொடுக்கின்றனர்.
அத்துடன், தி.மு.க. எதிர்ப்புணர்வு அதிகம் கொண்ட பிராமண சமுதாயத்தினரை அரவணைக்கும் விதமாக, "ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் மூலம் பல்வேறு உதவிகளை தி.மு.க.வினர் செய்துள்ளனர். குறிப்பாக, திருச்சியில் தி.மு.க. முன்னாள் அமைச்சரும் முதன்மை செயலாளருமான கே.என்.நேரு, ஸ்ரீரங்கம் கோவிலில் பணிபுரியும் ஆயிரம் பிராமணர்களின் குடும்பங்களுக்கு மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி இருக்கிறார். இதேபோல், திருவள்ளூர் மாவட்ட தி.மு.க. மருத்துவர் அணி அமைப்பாளரான டாக்டர் வி.சி.ஆர்.குமரன், திருவள்ளூரில் அமைந்துள்ள ஸ்ரீவீரராகவர் பெருமாள் கோவிலில் பணிபுரியும் இருநூறுக்கும் மேற்பட்ட பிராமணர்களின் குடும்பங்களுக்கு நிதி மற்றும் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, பிராமணர்களை எந்த கட்சியினரும் சரிவர கண்டு கொள்ளவில்லை என்ற வெற்றிடத்தை நிரப்பும் தி.மு.க.வின் இந்த செயல்பாடுகளும், அந்த சமுதாயத்தினரிடம் ஓரளவுக்கு எடுபடத்தான் செய்திருக்கிறது.