போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெ.வின் வேதா நிலையம் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றியதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர தயாராகிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.
அதைப்பற்றி நம்மிடம் விரிவாகவே விளக்கினார்கள். ""ஜெயலலிதாவின் வீட்டின் தங்க ஆபரணங்கள் 14 இருந்தது. அதன் மொத்த அளவு 4.4 கிலோ. வெள்ளி 867 பொருட்கள் இருந்தன. அதன் மொத்த எடை 601.4 கிலோ கிராம். அதைத் தவிர வெள்ளிப் பாத்திரங்கள் 162, புத்தகங்கள் 8376 என கணக்கிட்டுள்ளது தமிழக அரசு. ஆனால் மூன்று முறை முதலமைச்சரான ஜெயலலிதா வீட்டில் வெள்ளியும் தங்கமும் மட்டுமே இருக்கவில்லை. அதையும் தாண்டி மரகதம், மாணிக்கம் போன்ற விலை உயர்ந்த கற்களால் ஆன நகைகள் இருந்தன.
இப்படி இருந்த நகைகள் எல்லாம் இன்று போயஸ் கார்டனில் இல்லை. அவை இருப்பது கர்நாடகாவில் உள்ள அரசின் பெட்டகத்தில். இப் பொழுது தமிழக அரசு கண்டெடுத்த நகைகளை விட மிக அதிகமாக இன்றைய மதிப்பில் 100 கோடி ரூபாய் பெறுமானம் உள்ள ஜெ.வின் நகைகள் அங்கு இருக்கிறது. கர்நாடக கோர்ட்டின் பாதுகாப்பில் அந்த நகைகளை நீதிபதி குன்ஹா வைத்துள்ளார். அந்த நகைகளுக்கும் ஜெயலலிதாவிற்கும் தொடர்பு இல்லையா?'' என டெக்னிக்கலாக கேள்வியை கேட்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.
இது உண்மையா என ஜெ.வின் சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி குன்ஹாவின் உதவியாளரும், தமிழருமான பிச்சைமுத்துவை கேட்டோம். ""ஆமாம் உண்மை'' என்றார். ""சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் நகைகளை நீதிபதி குன்ஹா கைப்பற்றினார். அதை கர்நாடகாவிற்கு எடுத்து வந்தார்'' என்றார்.
நாம் அவரிடம், ""வெறும் நகைகள் மட்டும் தானா, ஜெயலலிதா வசித்த இடமான போயஸ் கார்டன் சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்படவில்லையா? சொத்துக் குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட வேதா நிலையத்திற்காக தமிழக அரசு 68 கோடி ரூபாயை 2017ம் ஆண் டின் மதிப்பீட்டின்படி சென்னை மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக தமிழக அரசு செலுத்தியது சரியா'' என கேட்டோம்.
"போயஸ் கார்டன் ஒரு மூன்றடுக்கு வீடு. அதன் தரைத்தளத்தில் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா பெயரில் ஒரு வீடு கட்டப்பட்டது. அந்த தரைத்தளத்தின் மேல் 1991-96 காலகட்டத்தில் இரண்டு மாடிகளை ஜெ. கட்டினார். அந்த இரண்டு மாடிகளும் மாதம் ஒரு ரூபாய் சம்பளம் வாங்கி ஐந்து ஆண்டுகளில் வெறும் 27 ரூபாய் மட்டுமே வாங்கிய ஜெயலலிதாவின் வருமானத்திற்கு அதிகமாக சேர்க்கப்பட்ட சொத்து என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரியாக இருந்த நல்லமநாயுடு கண்டுபிடித்தார். அதுமட்டுமல்ல போயஸ் கார்டனை ஒட்டி 36ஏ என்கிற இடத்தில் ஜெயலலிதா அதே 1991-96 காலகட்டத்தில் மூன்றடுக்கு அடுக்குமாடி ஒன்றை கட்டினார். சினிமா பார்க்கும் திரையரங்கு, ஜெயா டி.வி. அலுவலகம் ஆகியவை அந்த கட்டிடத்தில் இயங்கியது. அதுவும் வருமானத்திற்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துதான்.
ஜெ. முதல்வராவதற்கு முன்பே வாங்கப்பட்ட ஐதராபாத் திராட்சைத் தோட்டத்தில் 1991-96 காலகட்டத்தில் பல கட்டிடங்களை கட்டினார். இவையெல்லாமே வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்ப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள். இதையெல்லாவற்றையும் அரசு கையகப்படுத்த வேண்டும். கையகப்படுத்துவது மட்டுமல்ல அதை ஏலத்தில் விட வேண்டும். அந்த தொகையை வைத்து கர்நாடகாவில் வழக்கு நடத்தப்பட்டதால் கர்நாடக அரசுக்கு செலவான 6 லட்சம் ரூபாயும், வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட அபராதமான 100 கோடியை கட்ட வேண்டும் என குன்ஹா தெளிவாக தீர்ப்பளித்துள்ளார். குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஜெயலலிதா இறந்துவிட்ட தால் அவர் அனுபவிக்க வேண் டிய தண்டனை தவிர்க்கப் பட்டதே தவிர, அவர் கட்ட வேண்டிய 100 கோடி ரூபாய் அபராதம் தவிர்க்கப்படவில்லை. இப்பொழுது ஜெயலலிதாவின் இல்லத்தை நினை விடமாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம், குன்ஹா மற்றும் சுப்ரீம் கோர்ட் சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா இறந்துவிட்ட தால் அவர் மீதான குற்றங்கள் தள்ளுபடி செய்துவிட்டது போல வாதங்களை வைத்தார்கள். அவர் வாழ்ந்த இல்லம், சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பின்படியே அரசு சொத்து. அரசின் சொத்தை மறுபடியும் அரசுடைமையாக்குவதற்காக, 68 கோடி ரூபாயை தமிழக அரசு செலுத்துவது என்பது, ‘ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெறவில்லை, அவரது சொத்துக்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தமிழக அரசு சார்பில் போடப்படும் நாடகம்.
அத்துடன் ஜெயலலிதாவின் வாரிசுகளாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள தீபாவும், தீபக்கும் சொத்துக்குவிப்பு வழக்கின்போது இடம்பெறவில்லை. இளவரசியின் மகனான விவேக்கின் பெயர் மட்டும்தான் சொத்துக்குவிப்பு ஆவணங்களில் காணப்பட்டது. 1991-96 காலக்கட்டத்தில் விவேக் மைனர் என்பதால் அவர் குற்றவாளியாக்கப்படவில்லை. இன்று வேதா நிலையத்தை அரசுடைமை என்று அறிவிப்பதும், அதற்கு தீபா எதிர்ப்பு தெரிவிப்பதும் வேடிக்கையாக இருக்கிறது'' என்கிறார்.
இதுகுறித்து ஜெ.வுக்கு எதிராக வாதாடிய திமுக வழக்கறிஞர்களை கேட்டபோது, ""1997ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு தொடங் கியபோதே போயஸ் கார்டன் உள்பட ஜெ.வின் அனைத்து சொத்துக்களும் அரசு ஆணை 120/1997 என்கிற அரசாணை மூலம் அரசு சொத்து என முடக்கி வைக்கப்பட்டன. மற்றொரு அரசாணை யான 1183/97 மூலம் அவரது நகைகள் முடக்கி வைக்கப் பட்டன. இந்த சொத்துக்களையோ, நகைகளையோ யாரும் விற்கவோ, வாங்கவோ முடியாது. அதில் மாற்றமும் செய்ய முடியாது என 1997ல் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை குன்ஹா உறுதி செய்தார். சுப்ரீம் கோர்ட் அதை ஏற்றது. இன்று வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவதெல்லாம் நாடகம். சட்டப்படி அது செல்லாது'' என்கிறார்கள். கட்சி சார்பற்ற சட்ட வல்லுநர்களும் அதைத்தான் சொல்கிறார்கள்.