மெஷினாக ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், புதிதாக ஏதேனும் ஒரு ஊரைச் சுற்றி பார்த்திட மாட்டோமா என்கிற ஆசை இருக்கத்தான் செய்கிறது. என்னதான் ஆசை இருந்தாலும் அது பெரும்பாலும் கனவாகவே முடிந்துவிடுகிறது சிலருக்கு. கனவை நினைவாக்க முயன்ற வரையில் உழைத்து, கடைசியில் அழுத்து ஓய்ந்துவிடுவதும் வழக்கமாகிறது. இப்படியெல்லாம் இல்லாமல் ஒருவரின் வேலையே ஊர் ஊராகச்சுற்றி, அந்த ஊரின் கலாச்சாரம், பழக்கவழக்கம், ஊரைப் பற்றிய தன்னுடைய கருத்தை சமூக வலைதளங்களில் பதிவிடுவது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும், சமூக வலைதளத்தில் நாஸ் டெய்லி என்று அறியப்பட்டவரின் வேலையே இதுதான். நாடு நாடாகச் சென்று அங்கிருக்கும் பழக்கவழக்கம், கலாச்சாரம், பார்ப்பவர்களுக்கு புதிதாக அல்லது அரிதாக இருப்பதை தன்னுடைய வீடியோவில் பதிவிட்டு சமூக வலைதளத்தில் பதிவிடுவதுதான் இவரின் வேலை.
நுஸீர் யாஷின், இஸ்ரேலில் உள்ள விவசாய நகரமான அரபாவில் வளர்ந்த மிடில் கிளாஸ் குடும்பக்காரர். இவரது அம்மா ஆசிரியர், அப்பா உளவியலாளர். நான்கு பிள்ளைகளில் இவர் நடுபிள்ளை. தன்னுடைய 19 வயதில் ஏதேனும் பெரிய கல்லூரியில் படிக்கவேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர், ஹார்வேர்டு பல்கலைக்கழத்தில் அப்ளிகேஷன் போட்டு, பின்னர் அங்கேயே படித்தார். படித்து முடித்ததும் அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரிலேயே நல்ல வேலை வருடத்திற்கு நூறாயிரம் டாலர் சம்பளம் பெறுகிறார். வாழ்க்கை ஓடிக்கொண்டே இருந்திருக்கிறது, அவருக்கு தான் ஒரு மெஷினோ என்கிற எண்ணம் தோணுகிறது, அலுப்பு தட்டுகிறது. அவர் இதிலிருந்து விடுபட என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். ஒருவருடம் வேலை பார்த்து தன்னுடைய சம்பளப்பணத்தில் பாதிக்கு மேல் 60,000 டாலர் சேர்த்துவைத்து 2016ஆம் ஆண்டு வேலையிலிருந்து விடுபடுகிறார். வேலையை விட்டவுடன் சேர்த்துவைத்த பணத்திலிருந்து கேமரா, விமான டிக்கெட் வாங்குகிறார். முழுநேரமாக உலகைச் சுற்ற திட்டமிடுகிறார் நுஸீர் யாஷின் என்கிற நாஸ் டெய்லி.
அரேபிய மொழியில் நாஸ் என்றால் மக்கள். இவர் பேஸ்புக்கில் நாஸ் டெய்லி என்கிற பக்கத்தை தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் ஒரு நிமிடத்திற்கு ஏதாவது ஒரு இடத்தின் சிறப்பம்சங்களைப்பற்றி வீடியோ பதிவிடுவது, அதுவும் ஆயிரம் நாட்களுக்கு என்று நோக்கத்தை திட்டமிடுகிறார். முதல் பயணமாக நைஜீரியாவுக்கு பயணித்தார், பின்னர் ஒவ்வொரு நாடாக பயணிக்க ரஷ்ய ஊடகம் ஒன்று இவரை நாடி, இவருடைய கண்டண்டிற்கு மாதம் 3000 டாலர் என்று விலை பேசியது. மேலும், இதனை வைத்து சில விஷயங்களை முடிந்தளவிற்கு வியாபாரமாக்கினார். இந்த வீடியோ பதிவிடுவதன் மூலம் இவர் 250,000 டாலர்(இந்திய மதிப்பில் 1கோடியே 70லட்சம்) சம்பாதிக்கிறார். "இது மற்ற டிராவல் டாக்குமெண்டரி வீடியோக்கள் மூலம் சம்பாதிப்பவர்களை விட குறைவே, ஆனால் பிடித்திருக்கிறது" என்கிறார் நாஸ். தற்போது இவரின் பேஸ்புக் பக்கத்தை 7.3 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். பல மில்லியன் பார்வையாளர்கள் இவர் தினசரி போடும் ஒரு நிமிட வீடியோவுக்காக காத்திருக்கிறார்கள். இவரின் வீடியோக்கள் எல்லோரையும் கவர்வதற்கு முக்கிய காரணம், யாரும் செல்லாத நாடுகளுக்கு செல்வதும், புதிதான விஷயங்களைப்பற்றி அதில் குறிப்பிடுவதும் தான். வீடியோ ஒரு நிமிடம் என்பது இன்னுமொரு முக்கிய காரணம். இந்த வேகமாக ஓடும் காலத்தில் டி20 கிரிக்கெட்தான் சக்கைபோடு போடுகிறது என்பதை நாஸ் டெய்லி புரிந்துகொண்டார் போல.