மகளுக்கு மருத்துவ சீட்டு கேட்டு ஜெயாவை கெஞ்சிய கிருஷ்ணசாமி - பாலபாரதி காட்டம்
குறைவான மதிப்பெண்கள் பெற்ற தனது மகளுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் வேண்டும் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கெஞ்சிப்பெற்றதை அதிமுக அமைச்சர் அம்பலப்படுத்தியதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவு வருமாறு...
"2015 சட்டமன்றத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி பேசிக்கொண்டிருந்தார்...
அப்போது அமைச்சர் ஒருவர் எழுந்து, உங்கள் மகளுக்கு போதிய மதிப்பெண்கள் இல்லாதபோதும் முதலமைச்சரிடம் வந்து மெடிக்கலில் சேர உதவி கேட்டீர்கள்.
அடுத்த நிமிடமே அம்மா அவர்கள் மெடிக்கல் சீட் கொடுத்தாரே மறந்துவிட்டீர்களா எனக்கேட்டார்...
உடனே, கிருஷணசாமி, நான் மறக்கவில்லை. அதற்காக இப்போதும் நன்றி கூறுகிறேன் எனக்கூறி முதலமைச்சரைப் பார்த்து வணக்கம்போட்டார்...
இந்த வணக்கத்தை வேறு எங்காவது போடுங்கள் என்பதுபோல் வெடுக்கென்று முதலமைச்சர் முகத்தை திருப்பிக்கொண்டார்..
டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் சுயநலம் அப்போது சட்டமன்றத்தின் மேஜைமீது பொத்தென்று விழுந்தது.
தலித் குழந்தைக்கு அத்தகைய உதவி பெற்றதில் தவறே இல்லை. ஆனால் இப்படி புறவாசல் வழியாக உதவியைப் பெற்றுக் கொண்டவர் தமது மகளுக்கு ஒருநீதி அனிதாவுக்கு இன்னொரு நீதி என முழங்கி வருவதுதான் வேதனை.
தோழர் பிரின்சு, முன்னாள் எம்எல்ஏ சிவசங்கர் ஆகியோர் மீது வீண்பழியை சுமத்துகிறார்.
பாஜக அதிமுக அரசுகள் வேடிக்கை பார்க்கிறார்கள்.
ஊடகங்கள் இந்த நியாயவாதியாரைத் தேடிப்பிடித்து அவர் கருத்தைக் கேட்கிறார்களாம்.
கேப்பையில் நெய்மட்டுமல்ல பொய்யும்கூட வழிகிறதாம்.!"
இவ்வாறு அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியிருக்கிறார். இந்தப் பதிவு முகநூலில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.