உலகிலேயே மிகக்கொடூரமான விசயங்களில் ஒன்று மரணம். உயிர் மட்டுமே எல்லாவற்றையும்விட மேலானது. அதனால்தான் உயிரை துச்சமாக நினைத்து போராடும் ஒவ்வொரு பணியையும் நாம் உயர்த்திப் பார்க்கிறோம். ஆனால் தற்போது மரணம்கூட நமக்கு பழகி விட்டதோ என்ற கேள்வி எழுகிறது. மனிதனின் அடிப்படையின்படி, ஒரு விஷயம் தொடர்ந்து நடந்தால் இரண்டே எதிர்வினைகள் மட்டுமே நடக்கும். ஒன்று அது பழகிவிடும், இரண்டாவது அதன்மேல் ஒரு வெறுப்பு, சலிப்பு ஏற்படும். இப்படியான காலகட்டத்தில்தான் நாம் இப்போது இருக்கிறோம். முன்பு பெரிய வலியாக இருந்த பெட்ரோல் விலையேற்றம்கூட இன்று தினமும் உயர்வதால் பழகிவிட்டது. தற்போது தொடர் மரணங்களை நமக்கு காட்டி நம்மை உளவியல் ரீதியாக பழக்கப்படுத்த நினைக்கிறது அரசு, இதை அவர்கள் தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி நடப்பது என்னவோ அதுதான்.
கடந்த ஆண்டுகளில் பெரியளவில் மாறிய பல போராட்டங்களுக்கு காரணம் மனிதம் நசுக்கப்பட்டதுதான். போராட்டக்காரர்களுக்கு தாக்கப்பட்டது, மரணம் நிகழ்ந்தது போன்ற உளவியல் ரீதியான ஏதேனும் ஒரு பாதிப்புதான் அதைத் தொடர்ந்த ஒரு மாபெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்திருக்கும். இதற்கு ஜல்லிக்கட்டு, மாணவி அனிதா தற்கொலை போன்ற பல போராட்டங்கள் எடுத்துக்காட்டாய் கண்முன்னே வரும்.
ஆனால் தற்போது நீட் தேர்வு கொடுமையால் மாணவி பிரதீபா மற்றும் சுபஸ்ரீ உள்ளிட்டவர்களின் தற்கொலை என்பது வெறும் செய்தியாகவே நம்மை கடந்து செல்கிறது, மாணவி அனிதா இறந்தபோது கிளம்பிய எதிர்ப்புடன் ஒப்பிடும்போது. ஏனென்றால் மாணவி அனிதாவின் இறப்பு என்பது முதல் இறப்பு, அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவி பிரதீபா மற்றும் சுபஸ்ரீ உள்ளிட்டவர்களின் இறப்பு என்பது, நீட் தேர்வு நடந்தபோது ஏற்பட்ட இறப்புகள், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் 13 பேரின் (அரசு கொடுத்த தகவலின் படி) இறப்பு இப்படி தொடர் மரணங்களுக்குபின் நிகழும் ஒரு மரணம். தொடர்ந்து மரணத்தை மட்டுமே செய்தியாக கேட்டுவந்த நமக்கு இதுவும் அவற்றில் ஒன்றாக கடந்து சென்றுவிட்டது. வெகுஜன மக்கள் மத்தியில் அது பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம். இதைவிட பெரியக் கொடுமை, இவர்களின் இறப்பிற்கு உண்மையிலேயே இதுதான் காரணமா எனும் சந்தேகம்தான் சமூகத்தை அழிக்கும் முதல் ஆயுதம்.
மாணவி பிரதீபாவின் இறப்பிற்கு நம் மாநில கட்சிகளைத் தவிர வேறு யாரும் வருத்தம் தெரிவித்ததாக நினைவில்லை. தோசை சுட்டுத் தருவீர்களா எனக் கேட்கத் தெரிந்த பிரதமருக்கு, 13 பேரை சுட்டதைப் பற்றி பேசக்கூட மாட்டேன் என்கிறார். இன்று வரை பாரத பிரதமர் வருத்தம்கூட தெரிவிக்கவில்லை. ஒருவேளை 13பேர் சுட்டுக்கொல்லப்பட்டதை முழுங்கிவிட்டுதான், தோசையை பற்றி கேட்கிறாரோ என்ற கேள்வியும் எழுகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது பழக, பழக பால் மட்டுமல்ல, மரணமும் புளித்து விடுகிறதா என்ற அச்சம் ஏற்படுகிறது...