சினிமா சண்டை பயிற்சியாளர், இயக்குநர், தமிழ்நாட்டின் மூன்று முதல்வர்களுடன் நெருங்கி பழகியவர். சினிமா, அரசியல், ஆன்மீகம் என பல்வேறு தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் ஜாகுவார் தங்கம், முன்னாள் முதல்வர்களுடனான தனது அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அவர் நமக்களித்த பேட்டியின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி மட்டும் இங்கே.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் உடனான அனுபவம்:
1977ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் திருச்சிக்கு வரும்போது, அவருடைய நிகழ்ச்சிக்காக நான் சிலம்பம் சுற்றினேன். அதில் கவச கலையை ஆச்சரியத்துடன் பார்த்த எம்.ஜி.ஆர்., கைதட்டி உற்சாகப்படுத்தினார். அப்போதைய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராகவனந்தம் என் கையைப் பிடித்துக்கொண்டு எம்.ஜி.ஆர் அருகில் அழைத்துச் சென்றார். நான் அவரை அருகிலிருந்து பார்க்கும்போது மிகவும் ஆச்சரியத்துடன் அவரைப் பார்த்து அவருடைய பளபளப்பான சட்டை, அவருடைய தோற்றத்தைப் பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிட்டேன். அவரைப் பார்த்தவுடன் எல்லாம் மறந்து பேச முடியாமல் இருந்தேன். அப்போதைய அமைச்சரிடம் இவர் தொழில் ரீதியாக என்ன செய்து கொண்டிருக்கிறார் எனக் கேட்டார். என்னை அருகில் அழைத்து விசாரித்து, மறுநாள் ஹோட்டலுக்கு வந்து சந்திக்குமாறு கூறினார். மறுநாள் ஹோட்டலுக்குச் சென்றேன். அங்கு முழுக்க போலீஸ் நின்றிருந்தது. என் மீது ஏற்கனவே சில வழக்குகள் உள்ளதால் நெருங்கிச் செல்ல தயங்கி நின்றேன். பிறகு எங்கள் தொகுதி எம்.எல்.ஏ. வந்து விவரம் கேட்க, எம்.ஜி.ஆர். வரச் சொன்னதை அவரிடம் சொல்லிவிட்டு, போலீஸுக்கு பயந்து இங்கே இருப்பதாகச் சொன்னேன். உடனே அவர் என்னை மேலே அழைத்துச் சென்றார். என்னைப் பார்த்ததும் எம்.ஜி.ஆர் கோபம் அடைந்து, “உன்ன எப்ப வரச் சொன்னா எப்ப வர” என்றார். நான் கீழே நடந்ததை சொன்னேன். அதைக் கேட்டு எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்ததில் அவரது கண்களிலிருந்து தண்ணீரே வந்துவிட்டது. பின், என்னை டிபன் சாப்பிடச் சொன்னார். மேலும், என்னை சென்னைக்கு வந்துவிடுமாறு சொன்னார். என் மீது வழக்கு இருக்கிறது வாரம்தோறும் சென்று கோர்ட்டில் கையெழுத்துப் போட வேண்டும் என்று சொன்னேன். அதன்பின்பு என் மீது இருந்த வழக்குளை எல்லாம் தீர்த்து வைத்தார்.
இதெல்லாம் முடிந்து சென்னை சென்றேன். அங்கு அவரைக் கண்டதும், சாப்டியா என்று கேட்டு என்னுடைய கையை முகர்ந்து பார்த்தார். தாயைத் தவிர வேறு யாரும் கையை முகர்ந்து பார்க்க மாட்டார்கள். அவருடைய இந்தச் செயலை பார்த்தவுடன் நான் கண் கலங்கி அழுதுவிட்டேன். பிறகு தொழில் ரீதியாக என்ன செய்கிறாய் என்றார். நான், சிலம்பம் சுற்றிக்கொண்டு சும்மாதான் இருக்கிறேன் என்றேன். அவர் உடனே என்னை சினிமாவில் சேர்ந்துவிடு என்று சொன்னார். ஆனால், கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் வருடம் எந்த வாய்ப்பும் இல்லாமல் இருந்தேன். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது அவர் விளையாட்டாய் “ஷூட்டிங்ல ரொம்ப பிஸியா” எனக் கேட்டார். அப்போதுதான் எனக்கு வாய்ப்பு எதுவும் கிடைக்காததைச் சொன்னேன். உடனே அவர், அப்போது இதயக்கனி படத்தில் சண்டைப் பயிற்சியாளராக இருந்தவரிடம் என்னைப் பற்றிச் சொல்லி வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அப்போதிலிருந்து என்னுடைய சினிமா வாழ்க்கைத் தொடங்கியது.
முன்னாள் முதல்வர் கலைஞருடனான அனுபவம் பற்றி:
எம்.ஜி.ஆர். உடன் பயணம் செய்து கொண்டே இருந்தேன். இருந்தபோதிலும் கலைஞர் உடனான அனுபவம் என்பது எதிர்பாராதது. அவருடைய படங்களில் வேலை செய்துள்ளேன். அவருடைய நாடகங்களிலும் நடித்துள்ளேன். ஒருமுறை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் தொடர்பான பிரச்சனையின் போது என்னை கடத்தி சென்றுவிட்டனர். அது தொடர்பாக அவர் என்னை சந்திக்க சொல்லி அவர் வீட்டில் இருந்து போன் வந்தது. அதனைத் தொடர்ந்து அவரை, அவர் வீட்டில் சென்று சந்தித்தேன். மிகவும் பதற்றத்துடன் அவர் வீட்டில் அமர்ந்து இருந்தேன். பிறகு அவரது உதவியாளர் என்னை மேலே அழைத்துச் சென்றார். அங்கு நான் அறையினுள் நுழைந்ததும் முதல்வர் கலைஞர் உடனே தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்றார். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவர் என்னை உட்காருய்யா என்றார். நீங்கள் உட்காருங்கள் நான் உட்காருகிறேன் என்றார். இல்லை ஐயா, நீங்கள் மூத்தவர் அதனால் நீங்கள் உட்காருங்கள். அப்புறம் நான் உட்காருகிறேன் என்றேன். உடனே அவர், என்னய்யா என் வீட்டிற்கே வந்து எனக்கே ஆர்டர் போடுற என்று சிரித்தார்.
அதன் பிறகு, என்னைக் கடத்திய வழக்கில் காவல்துறை அதிகாரிகளிடம் சொல்லி உடனே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வைத்தார். ஒருமுறை மகாபலிபுரத்தில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தது. நான், அங்கு இருந்தேன். அப்போது அங்கு கலைஞர் வந்திருந்தார். என்னைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து விவரம் கேட்டார். பின் சென்னைக்கு திரும்பிப் போவது குறித்துக் கேட்டார். நான் பஸ்ஸில் போவதாகச் சொன்னேன். ஆனால் அவர் என்னை தனது காரில் ஏறச் சொல்லி அவருடன் சென்னைக்கு அழைத்து வந்தார். வழியில், ‘எங்க போகணும்’ என்று கேட்டபோது, கிண்டின்னு சொன்னேன். ‘வீடு எங்கனு கேட்டார்’, கே.கே.நகரில் இருந்து நடந்து சென்றுவிடுவேன் பக்கம்தான் என்றேன். உடனே அவர், ‘எங்க? எம்.ஜி.ஆர். நகரா’ என்று கேட்டுவிட்டு, “எம்.ஜி.ஆர். இல்லன்னா, நான் இல்ல; நான் இல்லன்னா எம்.ஜி.ஆர். இல்ல” என்று சொல்லி வீட்டிலேயே இறக்கிவிட்டார். வெளியில் இருப்பவர்களுக்குத்தான் கலைஞரும், எம்.ஜி.ஆரும் எதிரும் புதிருமாக இருப்பதுபோல் தெரிந்தது. ஆனால் கலைஞரும் எம்.ஜி.ஆர் மீது மிகுந்த பாசம் கொண்ட நெருங்கிய நண்பர்கள்.
இதற்கு மற்றொரு உதாரணத்தைச் சொல்கிறேன். ஒருமுறை வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் கலைஞரை ‘கருணாநிதி’ என்று சொன்னார். உடனே எம்.ஜி.ஆர், கோபம் அடைந்து அவரின் முகத்தில் ஒரு அறை விட்டார். ‘கலைஞர்’னு சொல்லு என்று சொல்ல வைத்தார். அவரும் கலைஞர் என்று திரும்ப சொன்னார். இப்படி கலைஞருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே அண்ணன் தம்பி பாசத்தை விட அதிகமான பாசத்தை ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்தனர்.