Skip to main content

‘த’ எனும் தமிழி எழுத்து, குறியீடுகளுடன் கருப்பு சிவப்பு பானை ஓடுகள் கண்டெடுப்பு...

Published on 22/07/2021 | Edited on 22/07/2021

 

Inscription found in Ramanathapuram district Kulathur

 

ராமநாதபுரம் அருகே குளத்தூரில் 2000 ஆண்டுகள் பழமையான இரும்புக் காலத்தைச் சேர்ந்த குறியீடுகளுள்ள கருப்பு சிவப்பு பானை ஓடுகளை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் கண்டெடுத்துள்ளது.

 

Inscription found in Ramanathapuram district Kulathur

 


ராமநாதபுரத்திலிருந்து நயினார்கோயில் செல்லும் சாலையில் குளத்தூர் காலனியின் கிழக்கே காரான்கோட்டை என்ற இடத்தில் பண்ணைக்குட்டை தோண்டியபோது, பானை ஓடுகள் வெளிவந்துள்ளன. அவ்விடத்தில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. இராஜகுரு, குளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியர் சி. பால்துரை, தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவர்கள் சு. காவ்யா, மு. பர்ஜித், பா. தனபால், கு. ரஞ்சித் ஆகியோர் கள மேற்பரப்பாய்வு செய்தனர். 

 

Inscription found in Ramanathapuram district Kulathur


இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் வே. இராஜகுரு கூறியதாவது, “பண்ணைக்குட்டை தோண்டிய இடத்தில், கருப்பு சிவப்பு நிறத்திலான சுடுமண் தட்டுகளின் உடைந்த பகுதிகள், சிவப்பு நிற பானை ஓடுகள், கெண்டியின் நீர் ஊற்றும் பகுதி, இரும்புத் தாதுக்கள், இரும்புக் கழிவுகள், தானியங்கள் வைக்க பயன்படுத்தப்பட்ட குலுமையின் தடித்த ஓடுகள், உடைந்த பானைத்தாங்கி, பானை மூடிகள், மான் கொம்புகள், குறியீடுகளுள்ள 3 பானை ஓடுகள் ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதில் மூன்று கோடுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் திரிசூலம் போன்ற குறியீடு கீழடியிலும், மரியராயபுரத்திலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘த’ எனும் தமிழி எழுத்து, சூலம் ஆகிய குறியீடுகளும் கிடைத்துள்ளன.

 

Inscription found in Ramanathapuram district Kulathur


இங்கு கிடைத்த மானின் உடைந்த கொம்புகள் உள்துளையுடன் உள்ளன. இது கிளைகள் உள்ள உழை மானின் கொம்புகள் ஆகும். இரும்புக் கழிவுகளுடன் உடைந்த உருக்காலையின் சிறிய பகுதியும் கிடைத்துள்ளதால் இங்கு இரும்பு உருக்காலை செயல்பட்டிருக்கலாம். கண்டெடுக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இரும்புக்காலத்தில் காரான்கோட்டை என்ற பெயரில் ஒரு சிற்றூர் இங்கு இருந்ததை அறிய முடிகிறது. மருத்துவக் குணமுள்ள காரான் என்றொரு பாரம்பரிய நெல்லின் பெயரில் இப்பகுதி அழைக்கப்படுகிறது. இதேபெயரில் ரெகுநாதபுரம் அருகில் ஒரு ஊர் உள்ளதும் குறிப்பிடத்தக்கது” இவ்வாறு அவர் கூறினார்.